என். கிருஷ்ணமூர்த்தி
என். கிருஷ்ணமூர்த்தி பழம்பெரும் தென்னிந்திய நாடக, திரைப்பட நடிகர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகிருஷ்ணமூர்த்தி ஓர் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடன் கூடப்பிறந்தவர்கள் அனைவரும் நன்றாகப் பாடுவார்கள்.[1] அக்காலத்தில் பிரபலமான சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவில் தனது ஏழாவது அகவையில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பிரகலாதா நாடகத்தில் பிரகலாதனாக நடித்துப் புகழடைந்தார்.[1] கல்கத்தா ஈசுட் இந்தியா பிலிம் நிறுவனத்தினர் பிரகலாதா நாடகத்தைத் திரைப்படமாக எடுத்தனர். 1933 இல் வெளிவந்த பிரகலாதன் என்ற இத்திரைப்படத்தில் கிருஷ்ணமூர்த்தி பிரகலாதனாக நடித்தார். இது இவரது முதல் திரைப்படம் ஆகும். டி. சி. வடிவேல் நாயக்கர் இயக்கியிருந்தார். இவரும் சுகுண விலாச சபையின் ஒரு நடிகராவார்.[1]
கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தில் அவரது சகோதரர், சகோதரிகள் அனைவரும் நன்றாகப் பாடுவார்கள். இவரது ஒரு சில தனிப் பாடல்கள் "ஹிஸ் மாஸ்டர்சு வாய்சு" இசைத்தட்டுகளிலும் வெளிவந்தன.[1] தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியின் தந்தை இசைத்தட்டுகளில் வெளியிடுவதற்காகவே "சைனிங் ஸ்டார் சொசைட்டி" என்ற பெயரில் சில நாடங்களைத் தயாரித்துக் கொடுத்தார். அவற்றில் கிருஷ்ணமூர்த்தியும் அவரது குடும்பத்தினரும் நடித்தனர். இவற்றுக்குப் பெரும் வரவேற்புக் கிடைத்தது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் இந்த இசைத்தட்டுகள் வெளிவந்தன.[1] ஏகநாத் (1938), சக்திமாயா (1939) ஆகிய திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டது. இவற்றிலும் கிருஷ்ணமூர்த்தியும் அவரது சகோதரரும் நடித்தனர்.[1]
1941 இல் ஜெமினியின் மதனகாம ராஜன் திரைப்படத்தில் மந்திரி மகன் குணசீலனாக நடித்தார். இத்திரைப்படத்தில் இவர் பாடிய கதை ஒன்று சொல்லுவேன் கேள் பாவாய் என்ற பாடல் இவருக்குப் பெரும் புகழ் தேடிக் கொடுத்தது.[1] இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் இவர் விளையாட்டுகளில் அதிக கவனம் எடுத்துக் கொண்டார். குறிப்பாக மேசைப்பந்தாட்டத்தில் சிறப்பாக விளையாடினார். போட்டி ஒன்றுக்காக தில்லி சென்றிருந்த போது இவருக்கு அகில இந்திய வானொலியில் நாடகம் ஒன்றில் பங்கெடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் பின்னர் வானொலியிலேயே நடிகராகவும், அறிவிப்பாளராகவும் பணியாற்றினார்.[1] தொடர்ந்து யுப்பிட்டரின் என் மகன், மூர்த்தி பிக்சர்சின் தியாகி, போனோ பிலிம்சாரின் வினோதினி, கோகுலதாசி ஆகிய படங்களிலும் நடித்தார்.
இவர் நடித்த சில திரைப்படங்கள்
தொகு- பிரகலாதன் (1933)
- ஏகநாத் (1938)
- சக்திமாயா (1939)
- மதனகாம ராஜன் (1941)
- என் மகன் (1945)
- தியாகி (1947)
- உதயணன் வாசவதத்தா (1947)
- கோகுலதாசி (1948)
- வினோதினி (1949)