என். டி. ராஜ்குமார்

என். டி. ராஜ்குமார் (நாகர்கோவில், தமிழ்நாடு) தமிழ் நவீன கவிதையில் தலித் கவிதைகளை முன்னெடுத்துச்செல்லும் கவிஞராக அறியப்படுகிறார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தில் செயல்படுபவர். 'வந்தனம்' என்னும் நாடகக்குழுவை நடத்தி வந்தார். இந்திய கம்யூணிஸ்ட் கட்சி, தமிழ்நாடு கிளையின் கலை இலக்கிய அமைப்பாக இருக்கும் ‘தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்’ நடத்திவரும் கலை இரவுகள், தெருமுனை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் வந்தனம் கலைக்குழு நாடகங்களை நடத்தி வந்தது. இதனால் இந்தக்குழு தமிழ்நாடு முழுவதும் பிரபலமான மாற்று நாடக் குழுவாக இயங்கி வந்தது. ஆனல் தற்போது இந்தக் குழு கலைக்கப்பட்டு விட்டது. என்றாலும் நிகழ்த்துக் கலையில் அதிக நம்பிக்கை கொண்டவரான என்.டி.ராஜ்குமார், தனது கவிதைகளை இலக்கிய மேடைகளில் வாசிக்காமல் அவற்றை “ ராக தொனியில்” நிகழ்த்திக் காட்டுகிறார். இப்படி கவிதையை நிகழ்த்திக் காட்டும்போது, ஒவ்வொரு வரிக்கு இடையிலும், அவர் கொடுக்கும் மௌன இடைவெளி, அவர் கவிதை நிகழ்த்துதலை கேட்கும் பார்வையாளர்களுக்கு கவிதை அனுபவத்தை கடத்துகிறது. மேலும் கவிதையின் உள்ளடக்கமாக இருக்கும் காட்சியையும் கேட்போர் மனதில் விரிக்கும் அற்புதத்தை நிகழ்த்துகிறது! ராஜ்குமார் தனது கவிதைகளை மட்டும் இப்படி நிகழ்த்தாமல் பிற முக்கிய கவிஞர்களின் கவிதைகளில் தாள நயத்துடன் இருக்கும் வலிமிக்க, கவிதைகளையும் இவர் நிகழ்த்திக் காட்டுகிறார்.

இவரது கவிதைகள் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தலித் விடுதலைக்கான கோபமும் போராட்ட குணத்தின் வெளிப்பாடாகவும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இவரது கவிதைத் தொகுப்புகளில் காணப்படும் மாந்திரீக மொழியின் உக்கிரம் நிரம்பிய எண்ணற்ற கவிதைகளால் தற்போது எழுதும் கவிஞர்களில் தனக்கென தனியான எழுத்துப் பாணியும் நவீன கவிதைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டிராத மாந்திரீக மொழியும் கைவரப்பெற்ற கவிஞராக அறியப்படுகிறார் என். டி. ராஜ்குமார். இவரது 'தெறி' என்ற கவிதைத் தொகுப்பு, தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையில் உள்ள “ புனித சவேரியார் கல்லூரியில் இயங்கிவரும் ‘ நாட்டாற் வழக்காற்றியல்’ துறையால் நாடகமாக்கம் செய்யப்பட்டு அரங்கேற்றபட்டது!

ராஜ்குமாரின் கவிதைகளை 5 மாணவர்கள் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். தற்போது தமிழ்திரைப்படத்துறையில் ’ ஒரு பாடலாசிரியர், பாடகர், நடிகர் ஆகிய ஆடையாளங்களை ‘மதுபானக்கடை’ என்ற மாற்று சினிமா மூலம் பெற்றிருக்கிறார் என்.டி. ராஜ்குமார். இந்தப்படத்தில் இவர் எழுதிய எல்லா பாடல்களிலும் வெகுஜன மொழியை பயன்படுத்தாமல், தனது கவிதையின் நவீன மொழியையே பயன்படுத்தியிருக்கிறார்.

இவரது கவிதைத்தொகுப்புகள்

தொகு
  • தெறி (1997)
  • ஒடக்கு (1999)
  • ரத்தசந்தனப் பாவை (2001)
  • காட்டாளன் (2003)
  • கல் விளக்குகள்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._டி._ராஜ்குமார்&oldid=3593785" இலிருந்து மீள்விக்கப்பட்டது