எபோர்

பண்டைய எசுபார்தாவின் தலைவர்கள்

எபோர்கள் (Ephors) என்பவர்கள் பண்டைய எசுபார்த்தா மற்றும் அதன் குடியேற்றங்களான தாரந்தோ மற்றும் எராக்லியாவின் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். மேலும் எசுபார்த்தாவின் இரண்டு மன்னர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டவர்களாவர். "ephors" ( கிரேக்கம் ἔφοροι éphoroi, ἔφορος என்ற சொல்லானது éphoros என்பதன் பன்மை வடிவம்) என்பது கிரேக்க ἐπί epi, "on" அல்லது "over", மற்றும் ὁράω horaō, "பார்க்க", அதாவது "கண்காணிப்பவர்" அல்லது "கண்காணிப்பாளர்" என்பதிலிருந்து வந்தது. [1] எபோர்கள் என்பவர் ஐந்து எசுபார்டன் ஆடவரைக் கொண்ட குழுவாகும். இவர்கள் ஆண்டுதோறும் எசுபார்ட்டன் பிரஜைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். [2]

1862 ஆண்டைய எபோர்கள் குறித்த கற்பனை ஓவியம்

எபோர்கள் எசுபார்த்தாவின் அரசர்களுக்கு முன் மண்டியிட வேண்டியதில்லை, மேலும் இவர்களின் அதிகாரங்களின் முக்கியத்துவத்தின் காரணமாகவும், இவர்களின் முழு செயல்பாடுகளால் இவர்கள் பெற்ற புனிதமான பங்கின் காரணமாகவும் இவர்கள் குடிமக்களால் மிகவும் மதிக்கப்பட்டனர்.

பதவியின் வரலாறு தொகு

எபோரேட்டின் தோற்றம் குறித்த தகவல்கள் சர்ச்சைக்குரியது. எரோடோடசின் கூற்றுபடி, எசுபாராத்தாவின் அரசியலமைப்பை உருவாக்க அப்போலோ தெய்வத்தின் பூசாரியான பைத்தியா லைகர்சுக்கு அனுமதியளித்த பிறகு இந்த அமைப்பு உருவாக்கபட்டது. [3] மேலும் புளூட்டார்ச்சின் மற்றொரு கூற்றுப்படி, முதல் எபர்கள் எசுபார்ட்டாவின் மன்னர் தியோபோம்பசால் மிகவும் பிற்காலத்தில் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. [4] மேலும் புளூடார்க்கின் கூற்றின்படி மெசேனியன் போர்களின் போது எசுபார்டாவின் மன்னர்கள் நீண்ட காலம் இல்லாத நிலையில் தலைமையின் தேவைக்காக எபோரேட்கள் உருவாக்கபட்டனர். [5] எபோர்கள் மக்கள் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் போட்டியிட 30-60 வயதிற்கு இடைப்பட்ட அனைத்து குடிமக்களும் தகுதியானவர்கள். எனவே தகுதியான எசுபார்டான்கள் இந்தப் பதவிக்கு வர மிகவும் விரும்பினர். இவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது தடைசெய்யப்பட்டது. பிளேட்டோ எபோர்களை சர்வாதிகாரிகள் என்று அழைத்தார். அதே நேரத்தில் இவர்கள் மன்னர்கள் மற்றும் தளபதிகளைவிட சற்று அதிகாரம் மிக்கவர்களாகவும் இருந்தனர். [6] போர்களில் ஈடுபட செல்லும் எசுபார்த்தாவின் மன்னருடன் இரண்டு எபர்கள் வரை செல்வார்கள். மேலும் எசுபார்த்தன் வரலாற்றில் சில காலகட்டங்களில் போரை அறிவிக்கும் அதிகாரத்தை இவர்கள் கொண்டிருந்தனர்.

முக்கிய முடிவுகளில் ஐந்து எபேர்களின் வாக்குகளில் பெரும்பான்மை பெறும் முடிவே இறுதியானது. வாக்குகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டதால், ஒரு எபோரின் வாக்கு மாறினால்கூட எசுபார்டாவின் கொள்கை விரைந்து மாறக்கூடும். எடுத்துக்காட்டாக, கிமு 403 இல், லிசாண்டரின் கொள்கையை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில், அட்டிகாவுக்கு இராணுவத்தை அனுப்பும்படி பவுசானியாஸ் மூன்று எபோர்களை சமாதானப்படுத்தினார். அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி, எபோர்கள் சிலசமயங்களில் வறுமையான பின்னணியில் இருந்து வந்ததுள்ளனர். ஏனெனில் எந்தவொரு எசுபார்டா குடிமகனும் இந்த பதவியை வகிக்க முடியும். மேலும் இது உயர் வகுப்பினருக்கு மட்டுமானது அல்ல. இதன் காரணமாக இவர்கள் சிலசமயம் ஊழலுக்கு ஆளாக நேரிடும் என்று அரிஸ்டாட்டில் கூறினார். [7]

கிமு 227 இல் எசுபார்த்தாவின் மன்னர் மூன்றாம் கிளியோமினெஸ் எபோர்கள் பதவி முறையை ஒழித்தார். மேலும் அவற்றை பாட்டரோனோமோர்கள் என்ற பதவியாக மாற்றினார். அவரது ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் விளைவாக பத்து குடிமக்களுடன் ஐந்து எபோர்களில் நான்கு பேர் இறந்தனர். [8] இருப்பினும் கிமு 222 இல் செல்லாசியா போருக்குப் பிறகு மாசிடோனிய மன்னர் ஆன்டிகோனஸ் III டோசன் என்பவரால் எபோரேட்டர் முறை மீண்டும் மீட்டெடுக்கப்பட்டது. [9] கிமு 146 இல் உரோமானிய ஆட்சியின் கீழ் எசுபார்ட்டா வீழ்ந்தாலும், இந்த ஏற்பாடு கி.பி 2 ஆம் நூற்றாண்டுவரை நீடித்து இருந்தது. இது உரோமானிய பேரரசர் அட்ரியனால் அகற்றப்பட்டு, அச்சேயா மாகாணத்தின் ஒரு பகுதியாக ஏகாதிபத்திய ஆட்சியால் மாற்றப்பட்டது.[10]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எபோர்&oldid=3374958" இருந்து மீள்விக்கப்பட்டது