எஸ். எம். ஹனிபா
எஸ். எம். ஹனிபா (பிறப்பு: சூலை 24 1927, இறப்பு: மே 29 2009. இலங்கையில் மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும், வெளியீட்டாளரும், சட்டத்தரணியும், பன்னூலாசிரியருமாவார். ஹனிபா ஹாஜியார் என அனைவராலும் அறியப்பட்ட இவர் இலங்கையில் பிரபல தமிழ் நூல் பதிப்பகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த கண்டி தமிழ் மன்றத்தின் நிறுவனரும், உரிமையாளருமாவார்.
எஸ். எம். ஹனிபா | |
---|---|
பிறப்பு | சூலை 24, 1927 கல்ஹின்னை , கண்டி |
இறப்பு | மே 29, 2009 ராஜகிரிய, கொழும்பு |
இருப்பிடம் | ராஜகிரிய, கொழும்பு |
தேசியம் | இலங்கை |
மற்ற பெயர்கள் | ஹனிபா ஹாஜியார் |
பணி | சட்டத்தரணி |
அறியப்படுவது | ஹனிபா ஹாஜியார் |
சமயம் | இஸ்லாம் |
பெற்றோர் | செய்யது மொகம்மட், சபியா உம்மா |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுமத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டிக்கு அண்மையில் அமைந்துள்ள கல்ஹின்னைக் கிராமத்தில் செய்யது மொகம்மட், சபியா உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர் கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலை, மாத்தளை விஜய கல்லூரி, மாத்தளை சென். தோமஸ் கல்லூரி, கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியர் கல்லூரி, கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் இடைநிலைக் கல்வி, உயர் தரக் கல்வியைப் பெற்றார். பின்பு சட்டக் கல்லூரியில் இணைந்து சட்டத்தரணியானார். இவரின் மனைவி பெயர் நூருல் அம்பேரியா.
ஆசிரியர் சேவையில்
தொகுஇவர் 1956ஆம் ஆண்டில் கொழும்பு டென்காம் பாடசாலையில் (தற்போது மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மு. மகா வித்தியாலயம்) ஆசிரியர் சேவையில் இணைந்தார்.
தினகரன் பத்திரிகையில்
தொகுஆசிரியர் தொழிலில் இவரின் சேவை நீடிக்கவில்லை. 1958ஆம் ஆண்டில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பிரதான நாளிதழான தினகரன் பத்திரிகையில் உதவியாசிரியராக சேவையில் இணைந்தார். தினகரன் ``உலக செய்திகள்" பக்கத்தை இவரே பொறுப்பாக நின்று நடத்திவந்தார். இதைத் தொடர்ந்து தினகரன் பத்திரிகையின் ``திங்கள் விருந்து" எனும் சஞ்சிகைப் பக்கத்தையும் பொறுப்பாக நின்று நடத்தினார். இக்காலகட்டத்தில் தினகரன் பிரதம ஆசிரியராக இருந்த கலாநிதி க. கைலாசபதி அவர்களின் விசுவாசத்துக்குரிய ஒருவாராகவும் காணப்பட்ட எஸ். எம். ஹனிபா சுமார் 6 ஆண்டுகள் தினகரன் ஆசிரியர் பீடத்தில் உதவியாசிரியராகப் பணியாற்றினார்.
சிலோன் ஒப்சேவர் பத்திரிகையில்
தொகுபின்பு தினகரனின் சகோதர பத்திரிகையான சிலோன் ஒப்சேவரில் துணையாசிரியர் பதவிக்கு நியமனம் பெற்று உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகளை தொகுத்தளித்தார். சுமார் 1 வருட காலத்துக்குள் சிலோன் டெய்லி நிவுஸ் பத்திரிகையில் உதவியாசிரியாராக இணைந்து 3 ஆண்டு காலம் பணியாற்றினார். இக்கட்டத்தில் இந்தோனேசியாவில் மார்க்கக் கல்வி கற்பதற்கான புலமைப்பரிசில் ஒன்று கிடைத் தமையினால் லேக்ஹவுஸிலிருந்து 1968 சூன் மாதம் இராஜினாமாச் செய்தார்.
இலங்கை வானொலியில்
தொகு1971ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இலங்கை வானொலியில் செய்திப் பகுதி சிரேஷ்ட உதவியாசிரியராக நியமனம் பெற்றார். பின்பு பொறுப்பாசிரியராக பதவி உயர்வுபெற்று 1977ஆம் ஆண்டில் தன் சுயவிருப்பில் பதவி விலகினார்.
சஞ்சிகை ஆசிரியராக
தொகுபள்ளிப் பராயத்திலிருந்தே தமிழை நேசிக்கவும், தமிழை வளர்க்கவும் பழகிக் கொண்ட எஸ். எம். ஹனிபா கற்கும் காலத்திலே ஓர் இலக்கிய சஞ்சிகை, ஒரு கல்லூரி சஞ்சிகை, இரண்டு இயக்க சஞ்சிகைகள், பல்கலைக்கழக சஞ்சிகையொன்று என மொத்தம் 5 சஞ்சிகைகளில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இதே காலப்பகுதியில் வேறு 3 பல்கலைக்கழக சஞ்சிகைகளுக்கும் இவர் முழுப்பொறுப்பாக நின்று வெளிக்கொணர்ந்துள்ளார். இவரது 21வது வயதிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குள் இவர் ஆசிரியராக நின்று பணியாற்றிய சஞ்சிகைகளை எடுத்துநோக்குமிடத்து சமுதாயம் எனும் இலக்கிய சஞ்சிகை இவருடைய சொந்த வெளியீடாகவும், தரமான இலக்கிய சஞ்சிகையாகவும் விளங்கியது.
எழுதியுள்ள நூல்கள்
தொகுநூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய ஆக்கங்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ள இவர், 15 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவரால் எழுதப்பட்ட நூல்களில் உலகம் புகழும் உத்தம தூதர், துஆவின் சிறப்பு, உத்தமர் உவைஸ், THE GRADE SON ஆகியன குறிப்பிடத்தக்கன. பாரதி நூற்றாண்டின் போது மகாகவி பாரதி நூலினை சிங்களத்தில் வெளியிட்டார். அதேபோல உத்தும் நபி துமானோ, உவைஸ் சரித்த ஆகிய நூல்களை சிங்களத்திலும் எழுதி வெளியிட்டார். இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சி எனும் நூலும் இவரால் எழுதப்பட்டதே. இவர் கடைசியாக எழுதி வெளியிட்ட நூல் அன்னை சோனியா காந்தி என்பதாகும்.
தமிழ்மன்றம்
தொகுதமிழ்மன்றம் எனும் முத்திரையில் இவர் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவரது வெளியீட்டுப் பணியினை வளர்ந்த எழுத்தாளர்கள், கல்விமான்கள் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கும், அறிமுக எழுத்தாளர்களுக்கும் களமமைத்துக் கொடுத்துள்ளமை விசேட பண்பாகும்.
எஸ். எம். ஹனிபா பற்றிய நூல்கள்
தொகு- இலக்கிய விருந்து – பீ. எம். புன்னியாமீன் 1987 வரை தமிழ்மன்றம் வெளியிட்ட 30 நூல்களைப் பற்றிய ஆய்வு நூலாக அமைந்தது. இந்நூல் கல்ஹின்னை தமிழ்மன்றத்தின் 30ஆவது வெளியீடாக 1987 ஏப்ரல் மாதம் வெளிவந்தது.
- இலக்கிய உலா – பீ. எம். புன்னியாமீன் எஸ். எம். ஹனிபா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை உள்ளடக்கியது. இந்நூலின் முதலாவது பதிப்பு 1987ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்தது. சென்னை மில்லத் பப்ளிகேஸன்ஸ் இந்நூலை வெளியிட்டது.
ஆதாரம்
தொகு- இவர்கள் நம்மவர்கள்- பாகம் 05 - கலாபூஷணம் புன்னியாமீன் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7