ஏற்றப்பாட்டு


நாட்டுப்புற
பாடல் வகைகள்
தமிழ் நாட்டார் பாடல்கள்
தாலாட்டுப் பாடல்
கும்மிப் பாடல்
சோபனப் பாடல்
நலங்குப் பாடல்
வாழ்த்துப் பாடல்
ஒப்பாரிப் பாடல்
விளையாட்டுப் பாடல்
நையாண்டிப் பாடல்
கதைப்பாடல்
காதல் பாடல்
தொழிற்பாடல்
மீனவர் பாடல்
நெற்குத்திப் பாடல்
ஏற்றப் பாடல்
நடவுப் பாடல்

தொகு

ஏற்றப்பாட்டு நாட்டார் பாடல் வகைகளுள் ஒன்று. தொழிற்பாடல்கள் நாட்டுப்புற மக்களால் வேலை செய்யும் போது களைப்பு தெரியாமல் இருக்கவும், மன மகிழ்ச்சிக்காகவும் பாடப்படுவன. அத்தொழிற் பாடல்களுள் வேளாண் தொழிற் பாடல்கள் விதைவிதைத்து, நீர் பாய்ச்சி, களையெடுத்து, கதிர் அறுத்து, போரடித்து, வண்டியில் ஏற்றிச் சொல்லும் வரை பல வளர்ச்சிப் படிகள் உள்ளன. அவ்வளர்ச்சிப் படிகள் ஒவ்வொன்றுக்கும் அவ்வேலையைச் செய்யும் நிலையில் பாடல்கள் பாடப்படுகின்றன.

பெயர்க் காரணம்

தொகு

பழங்காலத்தில் ஆறு மற்றும் வாய்க்கால் பாசனம் இல்லாத இடங்களில், கிணற்றிலிருந்து தண்ணீரை ஏற்றத்தின் மூலமாகவே இறைத்து நீர்ப் பாய்ச்சினர். இவ்வாறு ஏற்றம் இறைக்கும் போது பாடப்படும் பாடல் ஏற்றப்பாடல் எனப்பட்டது.

பாடும் நேரம்

தொகு

ஏற்றம் இறைப்போர் அதிகாலையிலேயே நீர் இறைக்கத் தொடங்குவர். நீர் இறைக்கும் காலைப் பொழுதிற்கு ஏற்றவாறு ஏற்றப்பாடலின் நீட்சி அமைந்திருக்கக் காணலாம்.

பாடும் நெறிமுறை

தொகு

ஏற்றத்தின் கீழே சாலைப் பிடித்துக் கவிழ்ப்பவர் பாடலின் ஒவ்வொரு அடியையும் பாடுவார். ஏற்றத்தின் மிதி மரத்தில் இருப்போர் ஒன்றாகச் சேர்ந்து அவ்வடியைத் திரும்பப் பாடுவர். மிதி மரத்தில் இருப்போர் பாடி முடித்தபின் அடுத்த அடியை சால் பிடிப்பவர் பாட வேண்டும். இவ்வாறு ஒரு ஒழுங்கு முறையில் அமைந்து இப்பாடல் காணப்படும். இதனாலேயே “ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப்பாட்டில்லை” என்பர்.

ஏற்ற வகை

தொகு

நீர் இறைப்பதற்காக இரண்டு வகையான ஏற்றங்கள் பயன்பாட்டிலிருந்தன.
ஆள் ஏற்றம், கபிலை ஏற்றம் என்பன அவை.

ஆள் ஏற்றத்திலும் இரண்டு வகை உண்டு.
1.கைத்திலா - இது ஒருவர் மட்டும் நீர் இறைக்கப் பயன்படுத்துவது.
2.ஆளேறும் திலா – மிதி மரத்தின் மேல் இருவர் மேலும் கீழும் ஏறி இறங்க, கீழே ஒருவர் சால்பிடித்து நீரைக் கவிழ்த்தல் என்ற அளவில் பயன்படுத்தப்பட்டது.

ஞான ஏற்றம் என்னும் பாடல் ஆள் ஏற்றத்தில் பாடும் பாலாக அமைந்துள்ளது.

கபிலை ஏற்றம்

தொகு
 
கபிலை ஏற்றம்

ஆழமான கிணற்றில் இருக்கும் நீரை மேலேற்ற உதவுவது கபிலை ஏற்றம். சால் என்னும் உலோகத் தகட்டுப் பானையில் கட்டப்பட்ட தும்பி என்னும் தோல்பை இதில் பயன்படுத்தப்படும். இவை இரண்டு பக்கங்களிலும் திறப்புக் கொண்டவை. சாலின் அடிப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் தும்பி மடிந்து ஆழ்கிணற்றில் சால் மொள்ளும் நீரை மேலே கொண்டுவரும். சாலில் கட்டப்பட்ட கயிற்றை ‘வடம்’ என்பர். தும்பியில் கட்டப்பட்ட கயிற்றை ‘வால்கயிறு’ என்பர்.

ஏற்றமும் சால் அளவுக் கணக்கும்

தொகு

ஒருபதியால் ஒண்ணு, இருபதியால் ஒண்ணு எனக் கணக்கிடும் முறையில் நூறு சால் வரை இறைக்கும் நீரின் அளவு ஒரு பரியம் என்றும், ஆயிரம் சால் இறைக்கும் நீரின் அளவு பத்துப் பரியம் என்றும் கணக்கிடப்படும். 500 சால்கள் நீர் இறைத்தால் ஒரு குழி (60 சென்ட்) நீர்வளம் பெறும் என்பது மூத்தோர் கணக்காகும்.

பாடல் அமைப்பு

தொகு

கிராமப்புற மக்கள் எந்த செயலைச் செய்தாலும் முதலில் கடவுளை வணங்குவர். அந்த வகையில் ஏற்றப் பாட்டின் முதலில் கடவுள் வாழ்த்து இருக்கும். இடையிடையே எண்ணிக்கையும், வாழ்வியல் சார்ந்த கருத்தமைந்த பாடல்களுமாக ஏற்றப்பாட்டு அமைந்திருக்கும். [1] [2]

ஏற்றப் பாட்டு

பிள்ளையாரே வாரும்
பெருமாளே வாரும்
சிவனாரே வாரும்
வேலவரே வாரும்

சிவனும் பெருமாளும்
சேர்ந்து ரதமேற
அரியும் சிவனும்
அமர்ந்து மலலேற

குருவும் பெருமாளும்
கூடி ரதமேற
பொற் கொடையும் தேரும்
போக வரவேணும்
.... .... ....
.... .... ....

அறுவதியா லொண்ணு
அறுவதியா ரெண்டு
அறுவதியா மூணு
அறுவதியா நாலு
அறுவதியா லஞ்சி
அறுவதியா லாறு
அறுவதியா லேழு
அறுவதியா லெட்டு

ஆரணி நடுவ
தாம்பர நடுவ
வேலூரு நடுவ
வெத்தல கிடங்கு

வெள்ள வெத்தலயோ
வேலங் களிப்பாக்கே
சுண்ணாம்பு கடையும்
சோனகத் தெருவும்

போனவன் திரும்ப
போட்டாளே மருந்த
போட்டாளே மருந்த
பொடி மருந்து கள்ளி

கள்ளி மருந்தாலே
கருத்த மறந்தேனே
தாசி மருந்தாலே
தாய மறந்தேனே

வேசி மருந்தாலே
வீட்டை மறந்தேனே
பாயி மருந்தாலே
பாசத்த மறந்தேனே

அண்ணன் தம்பி எல்லாம்
அடுத்தப் பகையானேன்
கூட்டாளி மார்க் கெல்லாம்
கொல்லும் பகையானேன்

மாமன் மைத்துனர்க் கெல்லாம்
மனது பகை யானேன்
சுற்றத் தார்க் கெல்லாம்
உற்ற பகை யானேன்

தாசிகளைக் கண்டா
தல மறஞ்சி வாடா
வேசிகளைக் கண்டா
வழி விலகி வாடா
.... .... ....
.... .... ....

ஏழு மல வாசா
எளய பெருமாளே
எழுதும் மணவாளா
எங்கள நீ காரும்

எழுபதியா லொண்ணு
எழுபதியா ரெண்டு
எழுபதியா மூணு
எழுபதியா நாலு
எழுபதியா லஞ்சி
எழுபதியா லாறு
எழுபதியா லேழு
எழுபதியா லெட்டு

எட நாட்டு இடையா
கடா ஓட்டி வாடா
மல நாட்டு இடையா
மந்த ஓட்டி வாடா

எட நாடு தூரம்
கடா வரா தய்யா
மல நாடு தூரம்
மந்த வரா தய்யா

குட்டியாடு ரொம்ப
கூட வரா தய்யா
மொட்ட ஆடு ரொம்ப
மோடு ஏறா தய்யா


.... .... ....
.... .... ....

மாசி மல கந்தா
மயி லேறும் முருகா
மலப் பழனி வேலா
மங்க மண வாளா

வளரும் பிள்ளையாரே
காரும் பகவானே
ஏத்த முகம் பாரும்
எங்கள நீ காரும்

பிள்ளை யாரைப் பாடி
பிடித்தன் கையில் கோல
ஆனை முகனைப் பாடி
அனைத்தும் இறைச்சனே

விநாயகனைப் பாடி
விட்டு விடப் போறன்
கணபதியைப் பாடி
கரை ஏறப் போறன்

ஒண்ணே ரகு ராமா
ரெண்டே ரகு ராமா
மூணே ரகு ராமா
நாலே ரகு ராமா
அஞ்சே ரகு ராமா

கபிலை ஏற்றத்தில் நீர் இறைக்கும் ஒருவன் பாடிய பாடலைக் கேட்ட கம்பர் "ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு இல்லை" என்று பாராட்டியதாகக் கதை ஒன்று உண்டு. [3] [4]

வெளித்தளம்

தொகு

உசாத்துணை

தொகு
  1. மு. பொன்னுசாமி, எதிர்ப்பாட்டில்லா ஏற்றப்பாட்டு, இந்து பதிப்பகம், 1998.
  2. மு. பொன்னுசாமி, நாட்டுப்புறப் பண்ணைப்பாட்டு, இந்து பதிப்பகம், 2000.
  3. திரைப்படத்தில் இந்தப் பாடல்
  4. கதையின் விரிவு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏற்றப்பாட்டு&oldid=3603189" இலிருந்து மீள்விக்கப்பட்டது