தாலாட்டுப் பாடல்
குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு (Lullaby) ஆகும். தாலாட்டு நாட்டார் பாடல் வகைகளில் ஒன்று. வாய்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தாலாட்டுக்கள் நாட்டாரியல் ஆய்வாளர்களால் சேகரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. தாலாட்டை மலையாளத்தில் தாராட்டு என்றும், தெலுங்கில் ஊஞ்சோதி என்றும், கன்னடத்தில் ஜோகுல் என்றும் கூறுவர்.
தாலாட்டுப் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று.
தாலாட்டுப் பாடல்கள் இனிமையான இசையை உடையன. அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்ம்மறந்து தூங்குகின்றது. "தால்" என்பது நாவைக் குறிக்கும். நாவினால் ஓசை எழுப்பி குழந்தையை உறங்க வைப்பதே தாலாட்டுதல் எனவும் கூறுவர்.[1] தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவதே வழக்கம். ஆராரோ ஆரிரரோ என்ற சந்தத்தின் மூலம் ஓசை எழுப்புவதால் இது ஆராட்டுதல் என்றும் சொல்லபடும்.
திண்டிவனம் வட்டாரப் பகுதிகளில் தாலாட்டுப் பாடும் பெண்கள் “லுலுலாயி லுலுலாயி” என்று நாவை அசைத்து,குழந்தையின் கவனத்தைத் தம் பக்கம் இழுத்தே பாடலைப் பாடுகின்றனர். பாடலின் இசை ஓரே மாதிரியாக இல்லை. அவரவர் விருபத்திற்கு ஏற்ப நீட்டிப் பாடுகின்றனர்.
தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ, ஆராரோ, ஆரிரரோ என்ற பதங்கள் பயன்படுத்தப் படுகின்றன. நீலாம்பரி என்ற இன்பமூட்டும் இராகத்திலேயே தாலாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் பாடப் படுவதுண்டு. எனினும் யதுகுலகாம்போதி, சகானா, ஆனந்தபைரவி போன்ற இராகங்களிலும் இவை இசைக்கப் படுகின்றன. தாலாட்டுப் பாடல்களில் குழந்தையின் அருமை, அதன் விளையாட்டுப்பொருள்கள், மாமன் பெருமை, குலப் பெருமை போன்றவை கூறப்படுகின்றன. இத்தாலாட்டுப் பாடல்களில் தத்ரூபமான உவமை, உருவக அணிகள் கையாளப்பட்டுள்ளன.
கொவ்வை இதழ் மகளே - என்
குவிந்த நவரத்தினமே
கட்டிப் பசும்பொன்னே - என்
கண்மணியே கண் வளராய்
என்ற தாலாட்டுப் பாடலில் குழந்தையானது நவரத்தினமாகவும், பசும்பொன்னாகவும், கண்மணியாகவும் உருவகிக்கப்பட்டுள்ளமை படித்து இன்புறத்தக்கது. பக்தி இலக்கியங்களிலும் இறைவனை குழந்தையாக பாவித்து தலாட்டுக்கள் பாடப்பட்டுள்ளன.
இலக்கியங்களில் தாலாட்டு
தொகு“ஊமன் தாரட்ட உறங்கிற்றே” என்று முத்தொள்ளாயிராத்தில் தாலாட்ட என்பதைத் தாராட்ட எனக் கையளப்பட்டுள்ளது.
கம்பராமாயணத்தில் “பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை “ என்று கம்பர் தாலாட்டு என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
தாலாட்டுப் பாடல் ஓசையின் இனிமையைத் திருஞானசம்பந்தர் கீழ்கண்டவாறு பாடுகிறார்.
“பண்ணமரும் மென்மொழியார்
பாலகரைத் தாலாட்டும் ஓசை கேட்டு
விண்ணவர்கள் வியப் பெய்தி
விமானத்தோடும் இயும் மிழலையாமே”
பெரியாழ்வார் கீழ்கண்டவாறு தாலாட்டுப் படுகிறார்.
“மாணிக்கம் கட்டி
வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன் னாற் செய்த
வண்ணச் சிறுதொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதாந்தான்
மாணிக் குறளனே! தாலேலோ!
வையம் அளந்தானே தாலேலோ!”
குலசேகர ஆழ்வார் இராகவனைத் தாலாட்டுவது கீழ்கண்டவாறு
தேவரையும் அசுரரையும்
திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க
அரங்நகர்த் துயின்றவனே!
கவேரிநல் நதிபாயும்
கணபுறத்தென் கருமணியே!
ஏவரிவெம் சிலைவலவா!
இராகவே தாலே லோ”
பாரதியார் கீழ்கண்டவாறு,
“காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும்
பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்”
என்று கைக்குழந்தை தாலாட்டுப் பாடலின் சுவையை அறியும் என்றும் படுகின்றனர்.[2]
கண்ணதாசன் கீழ்கண்டவறு தனது கிருஷ்ண காணத்தில்[3]
ஆயர்பாடி மாளிகையில்
தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான்
தாலேலோ
அவன் வாய்நிறைய மண்ணை உண்டு
மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான்
ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான்
ஆராரோ
(ஆயர்பாடி…)
பின்னலிட்ட கோபியரின்
கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல்
லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க
மயக்கத்திலே இவனுறங்க
மண்டலமே உறங்குதம்மா
ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா
ஆராரோ
(ஆயர்பாடி…)
நாகப்படம் மீதில் அவன்
நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான்
தாலேலோ
அவன் மோக நிலை கூட
ஒரு யோக நிலை போலிருக்கும்
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
(ஆயர்பாடி…)
கண்ணனவன் தூங்கிவிட்டால்
காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகைப் பார்ப்பதற்கும்
போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ
(ஆயர்பாடி…)
ஆராரோ ஆரிரரோ
தொகுஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
கண்ணே யடிச்சாரார்
கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
மாமன் அடித்தானோ
மல்லி பூச் செண்டாலே
அண்ணன் அடித்தானோ
ஆவாரங் கொம்பாலே
பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே
ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
அறிமுகம்
தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும். பணக்காரர் வீட்டிலும் தாய் குழந்தையைத் தாலாட்டுகிறாள். ஏழை எளியவரான மீன் பிடிப்பவரும், உழவரும், பண்டாரமும், தட்டாரும், கருமாரும், தச்சரும், கொத்தரும் தங்கள் இல்லங்களில் பிறந்த குழந்தைகளுக்குத் தமிழிசையால் அமுதூட்டித் தாலாட்டுகிறார்கள். காட்டு வெள்ளம் போல் வரும் தாயின் மன எழுச்சியைத் தாலாட்டில் கண்ட ஆழ்வார்கள் பிற்கால கவிஞர்கள் முதலியோர் இப்பாடல் வகைக்கு மெருகேற்றி, பிள்ளைத் தமிழாகவும், தேவர் தேவியர் தாலாட்டுகளாகவும், யாப்பிலக்கணக் கட்டுக்கோப்பில் அடக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளனர். தெய்வத் தாலாட்டிற்கு விளைநிலம் மக்கள் தாலாட்டுக்களே. சில தாலாட்டுப் பாடல்களில் உண்மையான குழந்தையையும், அதில் தாலாட்டும் தாயும் நம் கண் முன்னே வருகிறார்கள்.
பாடல் 1
பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு
கட்டிப் பசும் பொன்னே - கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு - கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே.
இன்னும் சில தாலாட்டுப் பாடல்களில் உறவினரின் பெருமைகள் எல்லாம் வருகின்றன. இவற்றில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். மாமனைக் கேலி செய்து பாடும் நகைச்சுவைப் பாடல்களும் உள்ளன.
பாடல் 2
உசந்த தலைப்பாவோ
'உல்லாச வல்லவாட்டு'
நிறைந்த தலை வாசலிலே
வந்து நிற்பான் உன் மாமன்
தொட்டிலிட்ட நல்லம்மாள்
பட்டினியாப் போராண்டா
பட்டினியாய் போற மாமன்-உனக்கு
பரியம் கொண்டு வருவானோ?
பாடல் 3
பால் குடிக்கக் கிண்ணி,
பழந்திங்கச் சேணாடு
நெய் குடிக்கக் கிண்ணி,
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன்.
பாடல் 4
ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு
பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்
பல வர்ணச் சட்டைகளும்
பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு
கட்டிக் கிடக் கொடுத்தானோ!
பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு
மின்னோலைப் புஸ்தகமும்
கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ !
பாடல் 5
ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே
அம்புட்டுதாம் அப்பனுக்கு
வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி
விதம்விதமா அம்புட்டிச்சாம்,
அரண்மனைக்கு ஆயிரமாம்
ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி
அப்பன் விற்று வீடுவர
அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி
ஆச்சரியப் பட்டார்களாம்,
பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான்
பிரியமாக ஆறெடுத்தேன்
அயலூரு சந்தையிலே-கண்ணே நான்
ஆறு மீனை விற்றுப் போட்டேன்.
அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை
அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன்.
அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான்
அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு
அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன்
அழகைப் பார்த்து அரண்டார்களே.
அத்திமரம் குத்தகையாம்
ஐந்துலட்சம் சம்பளமாம்
சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச்
சர்க்கார் உத்தியோகமாம்.
பாடல் 6
ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீ உறங்கு!
நானாட்ட நீ தூங்கு!
நாகமரம் தேரோட!
தேரு திரும்பி வர!
தேவ ரெல்லாம் கை யெடுக்க!
வண்டி திரும்பி வர!
வந்த பொண்கள் பந்தாட!
வாழப் பழ மேனி!
வைகாசி மாங்கனியே!
கொய்யாப் பழ மேனி! - நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
வாசலிலே வன்னிமரம்!
வம்மிசமாம் செட்டி கொலம்!
செட்டி கொலம் பெத்தெடுத்த!
சீராளா நீ தூங்கு!
சித்திரப் பூ தொட்டிலிலே!
சீராளா நீ தூங்கு!
கொறத்தி கொறமாட!
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல!
வேதஞ் சொல்லி வெளியே வர!
வெயிலேறி போகுதையா!
மாசி பொறக்கு மடா!
மாமன் குடி யீடேற!
தையி பொறக்குமடா - உங்க
தகப்பன் குடி யீடேற!
ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுறங்கு!
பாடல்7
ஓடும் மான் கண்ணோ என் கண்ணே நீ கவரிமான் பெற்ற கண்ணோ
புள்ளி மான் கண்ணோ என் கண்ணே நீ புத்திமான் பெற்ற கண்ணோ
முத்தோ ரத்தினமோ என் கண்ணே நீ தூத்துக்குடி முத்தினமோ...
முல்லை மலரோ என் கண்ணே நீ அரும்புவிரியா தேன்மலரோ..
கண்ணே கண்ணுறங்கு கனியமுதே நீ உறங்கு....
பாடல் 8
மார்கழி மாசத்திலேதான் - கண்ணே நீ
மாராசாவைப் பார்க்கையிலே
தைப் பொங்கல் காலத்திலே - கண்ணே நீ
தயிரும், சோறும் திங்கையிலே
மாசி மாசக் கடைசியிலே - கண்ணே நீ
மாமன் வீடு போகையிலே
பங்குனி மாசத்திலே - கண்ணே நீ
பங்குச் சொத்தை வாங்கையிலே
சித்திரை மாசத் துவக்கத்திலே - கண்ணே நீ
சீர் வரிசை வாங்கையிலே,
வைகாசி மாசத்திலே - கண்ணே நீ
வயலைச் சுற்றிப் பார்க்கையிலே
ஆனி மாசக் கடைசியிலே - கண்ணே நீ
அடியெடுத்து வைக்கையிலே
அகஸ்மாத்தா ஆவணியில் - கண்ணே நீ
அரண்மனைக்குப் போகையிலே
ஐப்பசி மாசமெல்லாம் கண்ணே - நீ
அப்பன் வீடு தங்கையிலே
கார்த்திகை மாசத்திலும் - கண்ணே
கடவுளுக்குக் கையெடடி
மேற்கோள்கள்
தொகு- ↑ Trehub, Sandra E., Trainor, Laurel J. "Singing to infants: lullabies and play songs" Advances in Infancy Research, (1998), pp. 43–77.
- ↑ நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்,முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன், (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்), ஜோதி புக் செண்டர், சென்னை.
- ↑ http://www.store.tamillexicon.com/தாலாட்டுப்+பாடல்/ஆராரோ+அரிரரோ-1.html
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Lullabies தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Lullabies of the World, a European Union-funded project to collect lullabies from around the world
- Two variants of a traditional lullaby from Rhodes Island, "Our baby is sleeping", performed by Tsambika Moustaka, and "Sleep with the sugar", performed by Iraklia Pardalou, both recorded in 2022 by Thede Kahl (project coordination: Sotirios Rousiakis) and retrieved from the Commission Vanishing Languages and Cultural Heritage