நாட்டார் பாடல்

(நாட்டுப் பாடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாட்டார் பாடல் அல்லது நாட்டுப்புற பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும். நடுகை(நடவு) மற்றும் ஏற்றம் போன்ற கூட்டுப் பணிகளின்போது பணியாளர்களிடையே ஓரிசைவை உண்டுபண்ணுவதிலும் இவற்றின் பங்கு உண்டு. இவை பெரும்பாலும் அந்தந்தக் காலகட்டத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளின் மீதான நாட்டார் கருத்தை எதிரொலிக்கும்.

ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளில் இயல்பிலில்லாத புனைவுப் பாத்திரங்கள் மிகுதியாகக் காணப்படும்.

சொல்லிலக்கணம்

தொகு

நாட்டுப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், ஏட்டில் எழுதாக் கவிதைகள், காற்றில் வந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், மரபுவழிப் பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரைப் பாடல்கள், நாட்டார் பாடல்கள் என பல்வகைப் பெயர்களால் நாட்டுப்புறப் பாடல்கள் அழைக்கப்படுகின்றன.[1]

பண்புகள்

தொகு

நாட்டார் பாடல் என்பது "அதன் உருவாக்கத்தில் இல்லை, அதன் பரவுவகையில்தான் உள்ளது" என்பது சில ஆய்வர்களின் கருத்து.[2] அதாவது, ஒரு எழுத்தறிவுபெற்ற கவிஞர் முறைப்படி ஒரு கவிதை எழுதி அது நாட்டாரின் விருப்பத்திற்கேற்பவும், அவர்களது வாழ்வினுடன் தொடர்புடையதாகவும் அமைந்து அவர்களுடைய பொதுப்பயன்பாட்டிற்கு வருமானால் அதையும் நாட்டார் பாடல் என்று குறிப்பிடலாம்.[3]

நாட்டார் பாடல்களின் கவர்ச்சியான இசையும் பயிற்சி பெறாதவர்களாலும் பாடக்கூடிய எளிமையான ஸ்தாயி (சுர நிலை) எல்லையும், மெட்டும், சாதாரண நடையிலும், கதை செப்பும் நடையிலும் அமைந்தமையே இவற்றின் சிறப்புக்குக் காரணமாகும். உரத்த குரலில் பாடப்படுவது இவற்றின் மற்றொரு இயல்பு. இப்பாடலைப் பாடுவோர் தமது அன்றாடப் பணியுடன் கலந்த பாடல் இசையாக அமைத்துவிடுகின்றனர். பெரும்பாலும் எழுதப்படாமல் இருப்பதும், இயல்பாக வழக்கில் பரவி, மேம்படுவதாலும், மூத்தோர் பாடிய பாடல்களாக இருப்பதாலும் முதலில் தொடங்கியவர் பெயர் தெரிவதில்லை. சூழ்நிலைக்கேற்ப பாடல்களை இயல்புப்படுத்திப்பாடும் தன்மையும் இந்நாட்டார் பாடல்களில் காணப்படுகிறது.

வகைகள்

தொகு

நாட்டார் பாடலை நாட்டுப்பாடல், தெம்மாங்கு, பாமர ஜனகானம், பொதுஜனகானம், கிராமியபாடல், எனப் பலவாறு அழைப்பர். பழங்குடிகள் தம் கருத்துக்களையும், இன்ப துன்ப உணர்வுகளையும் பிறருக்குப் புலப்படுத்தக்கூடியவாறு மொழி வளர்ச்சி பெற்றிருக்காத சூழ்நிலையில் ஏதோ ஒரு வகையில் ஓசை முறைகளையும் பயன்படுத்தி இருக்கலாம். மொழி துணையாக வந்த போது முதற்பாடல் தோன்றியிருக்கக் கூடும். ஒருவர் ஓர் அடியைப்பாட, மற்றொருவர் மற்றைய அடியைப்பாட வினா விடையாகவும் நாட்டார் பாடல்கள் அமைந்தன.

சூழலையும் குறிக்கோளையும் பொருத்து நாட்டார் பாடல்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

தமிழக நாட்டார் பாடல்கள் வகைப்பாடு

தொகு

நாட்டாறியல் பற்றி ஆய்வு செய்த ந வானமாமலை அவர்கள் நாட்டாறியல் பாடல்களை அதன் பொருளைக் கொண்டு எட்டு வகையாக பிரித்துள்ளார், அவையாவன,

  1. தெய்வங்கள்
  2. மழையும் பஞ்சமும்
  3. தாலாட்டு
  4. விளையாட்டு
  5. காதல்
  6. திருமணம்
  7. குடும்பம்
  8. சமூகம்
  9. உழவும் தொழிலும்
  10. ஒப்பாரி

இவ்வகைப்பாடு முறையானது நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பின்பற்றப்பட்டும் வருகின்றது.[4]

ந. வானமாமலையின் வகைப்பாட்டில் இருக்கும் சில குறைபாடுகளை சமுதாயச் சூழல் அல்லது வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆறு. இராமநாதன் அவர்களால் புதிய வகைப்பாடு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வகைப்பாடு முறை எட்டுபிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன,.

  1. தாலாட்டு
  2. குழந்தை வளர்ச்சி நிலைப் பாடல்கள்
  3. விளையாட்டுப் பாடல்கள்
  4. தொழிற் பாடல்கள்
  5. வழிபாட்டுப் பாடல்கள்
  6. கொண்டாட்டப் பாடல்கள்
  7. இரத்தல் பாடல்கள்
  8. இழப்புப் பாடல்கள்

தமிழில் நாட்டார் பாடல்கள்

தொகு

முதன்மைக் கட்டுரை: தமிழ் நாட்டார் பாடல்கள்
தமிழில் முதலில் எழுந்த இலக்கியமான சிலப்பதிகாரமும் ஒரு பழைய கதைப்பாடலை ஆதாரமாகக் கொண்டே எழுந்திருக்க வேண்டும். சங்ககால இலக்கியமான ஐந்திணை தழுவிய அகப்பாடல்களுக்கும், நாட்டு மகளிடையே வழங்கிய காதற்பாடல்களே முன்னோடிகள் எனலாம். சிலப்பதிகாரத்தில் வரும் கானல் வரி, வேட்டுவ வரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை என்பனவும் நாட்டார் இசைமரபின் தொடர்ச்சியாகவும் மக்கள் வாழ்க்கை முறையில் பெறும் முக்கியத்துவத்தைத் தெளிவு படுத்தும் விதமாகவும் இருக்கின்றன. இளங்கோவடிகளின் துன்ப மாலைப் பகுதியில் வழங்கும் பாடல் கூறுகளும், யாழ்ப்பாண இசை மரபில் வழங்கும் ஒப்பாரிப்பாடல்களும் ஓசை அமைப்பில் ஒருமைப்பாடு உடையன. பெரியாழ்வார் கண்ணனை குழந்தையாக உருவகப்படுத்திய தாலாட்டு தமிழ் நாட்டுத் தாய்மார்களிடையே வழங்கி வந்த தாலாட்டுப் பாடல்களையொத்தே உருவாக்கப்பட்டது.

நாட்டுபாடலில் ஈடுபாடு காட்டிய பாரதியார் தமது பல்வேறு பாடல்களில் நாட்டுப்பாடலின் அமைப்பையும் சந்தத்தையும் பயன்படுத்துகின்றார். (எ-டு) பாஞ்சாலி சபதம். இவருக்கு முன் கோபாலகிருஷ்ண பாரதியார், இராமலிங்க சுவாமிகள் முதலியோர் கும்மியாட்டம் போன்றவற்றிற்கான நாட்டுப்படல்களை இயற்றியுள்ளனர். பெரும்பாலும் எழுத்தறிவு பெறாத பொதுமக்களால் இயற்றப்பெறுவதால் நாட்டார் பாடல்களில் வட்டார மொழி வழக்குகளே மிகுந்து காணப்படும். மேலும், பிற இலக்கியங்களைப் போன்றே நாட்டார் பாடல்களில் அவற்றின் காலத்தில் நிகழ்ந்த பெருநிகழ்வுகளும், இருந்த சூழல்களும், வாழ்க்கைமுறைகளும், பண்பாடும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். சில வேளைகளில் பிற இலக்கியங்களில் காணப்படாத காலப்பதிவுகளும் மிகுந்து காணப்படும். எடுத்துக்காட்டாக, தாது ஆண்டுப் பஞ்சத்தின்போது தமிழர் திருமணம் முதலிய சடங்குகள் எவ்வாறு இருந்தன போன்ற தகவல்களையும் இவற்றில் காணலாம்.

நடுகைக் களத்தில் காதல் பேசும் வகையில் அமைந்த ஒரு எடுத்துக்காட்டுப் பாடல்:[5]

நாலு மூலை வயலுக்குள்ளே
நாத்து நடும் பொம்பிளே
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

நண்டு சாறு காய்ச்சி விட்டு
நடு வரப்பில் போற பெண்ணே - உன்
தண்டைக் காலு அழகைக் கண்டு
கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

பெண்டுகளே! பெண்டுகளே!
தண்டு போட்ட பெண்டுகளே! - உன்
கொண்டை அழகைக் கண்டு
கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு
  • அல்லி அரசாணி மாலை, பவளக் கொடி சரித்திரம், புலந்தரன் தூது, தேசிங்குராசன் கதை, நல்லதங்காள் கதை போன்ற நீண்ட பாடல்கள் அம்மானையாகப் பாடப்பட்டுள்ளன. இவையும் ஒருவகை நாட்டுப்புறப் பாடல்கள்தான்.

யப்பானிய நாட்டர் பாடல்கள்

தொகு

யப்பானிய நாட்டர் பாடல்களில் குனியோ யங்கிதா (யூலை 31, 1875 - ஆகஸ்ட் 8, 1962), சினோபு ஒரிகுச்சி (பிப்ரவரி 11, 1887 - செப்டெம்பர் 3, 1953) என்பவர்கள் முக்கிய இடம் வகிக்கிறார்கள். இவர்கள் மெய்ஜி காலப்பகுதியில் (அக்டோபர் 23 1868- யூலை 30 1912) ஏற்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நாட்டார் கலைகளை ஆராய்ந்து அவற்றை சீர்படுத்தினார்கள். யப்பானின் மியசக்கி மாகாணத்தின் விவசாய திணைக்களத்தில் யங்கிதா பணியாற்றும் போது தமது பணி நிமித்தமாக சிபா என்ற விவசாய கிராமத்திற்கு அடிக்கடி செல்லவேண்டியிருந்தது. அங்கு பணியாற்றிய காலப்பகுதியில் கிராமத்தில் மக்கள் வேட்டைக்கு செல்லும் போது ஏற்பட்ட அனுபவங்களின் வாயிலாக புனையப்பட்ட நாட்டார் கதைகளையும், பாடல்களையும் அவர் தொகுத்து வெளியிட்டார். இதுவே யப்பானிய நாட்டார் பாடல்கள் தொடர்பான முதலாவது வெளியீடாகும். மெய்ஜி காலப்பகுதியில் நாட்டார் பாடல் பற்றிய கல்வி முக்கியமற்ற ஒன்றாக கருதப்பட்டது. அதனைக் கற்போரின் எண்ணிக்கையும் மிகக்குறைவாகவே காணப்பட்டது. அக்காலத்தில் சினோபு ஒரிகுச்சி நாட்டார் பாடல்களில் முக்கிய பங்கு செலுத்தினார். அவர் யப்பானின் இடோ காலப்பகுதியை பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. சு.சண்முக சுந்தரம், நாட்டுப்புறவியல், பக். 186
  2. Lloyd, A L (1967). Folk song in England. New York: International Publishers.
  3. நா. வானமாமலை. "முன்னுரை". தமிழர் நாட்டுப் பாடல்கள் (இரண்டாவது பதிப்பு ed.). சென்னை: செஞ்சுரி புக் ஹவுஸ். pp. 3–11. {{cite book}}: Cite has empty unknown parameters: |accessyear=, |origmonth=, |accessmonth=, |chapterurl=, |origdate=, and |coauthors= (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  4. http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/III_Year/matt13/html/mat13003np2a.htm[தொடர்பிழந்த இணைப்பு]
  5. இப்பாடல் சேலம் மாவட்டம் மடகாசம்பட்டி என்ற இடத்திலிருந்து செல்வராஜூ என்பவரின் உதவியோடு கு.சின்னப்ப பாரதி சேகரித்தது. நா. வானமாமலை. "உழவும் தொழிலும்". தமிழர் நாட்டுப் பாடல்கள் (இரண்டாவது பதிப்பு ed.). சென்னை: செஞ்சுரி புக் ஹவுஸ். p. 458. {{cite book}}: Cite has empty unknown parameters: |accessyear=, |origmonth=, |accessmonth=, |chapterurl=, |origdate=, and |coauthors= (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டார்_பாடல்&oldid=3998691" இலிருந்து மீள்விக்கப்பட்டது