குலசேகர ஆழ்வார்

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்

குலசேகர ஆழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இவரைக் குலசேகரப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர்[1][2].

குலசேகர ஆழ்வார்
பிறப்புதிருவஞ்சிக்களம்
குருசேனை முதலியார்
இலக்கிய பணிகள்பெருமாள் திருமொழி

பிறப்பு

தொகு

இவர் பிறந்த ஊர் கொல்லிநகரான கருவூர் திருவஞ்சிக்களம். ஸ்ரீராமபக்தர். பாரம்பரிய ஸ்ரீ வைஷ்ணவம், இவரது ஊரை "கொல்லிநகர்" அதாவது கருவூர் (கரூர்) என்கிறது. இவரது [3] ஜென்ம நட்சத்திரம் மாசி மாத புனர்பூசம். இவர் திருமாலின் மார்பில்இருக்கும் மணி (கௌஸ்துப) அம்சம் பொருந்தியவர். இவரும், மகளான சேரகுலவல்லி தாயாரும் அரங்கனையும், ராமனையுமே அடிபணிந்துவந்தனர். நாடு:கொங்கு நாடு, ஊர்; கரூர் வஞ்சி, மலை: கொல்லிமலை

குலசேகர ஆழ்வாரும் குலசேகர வர்மாவும்

தொகு

ஸ்ரீவைஷ்ணவத்தின் தலைமை பீடங்களான ஜீயர்கள், "ஆழ்வார்களும் வைணவமும்" என்ற புத்தகத்தில், கிருஷ்ண பக்தனான குலசேகர வர்மா என்ற திருவிதாங்கூர் கேரள வர்மாவையும் சங்க கால சேரர்களது மன்னான சர்கராம பக்தர் குலசேகர ஆழ்வாரையும் குழப்பிக்கொள்கின்றனர் என்று கூறியுள்ளனர். முன்னையவர் ராமானுசருக்குப் பிற்பட்டவர். ஆழ்வாரோ மிக முற்பட்டவர். ஆழ்வார் தமிழில் மட்டுமே ஸ்ரீராமரைப் பாடியுள்ளார். வர்மாவோ சமஸ்கிருதத்தில் மட்டுமே "முகுந்தமாலா" என்று கிருஷ்ணரைப் பாடியுள்ளார். இருவரும் ஒருவரல்லர். மேலும் குலசேகர பாண்டியன், குலசேகர சோழன் என்றெல்லாம் அரசர்கள் உண்டு. குலசேகர என்றால் ’தமது குலத்தின் சிகரமான’ என்று பொருள். பெயரை மட்டும் வைத்துக்கொண்டு இரு நபர்களை ஒன்றாக்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர். மணவாள மாமுநிகளுடைய முகுந்தமாலை உரையில் எங்கும் அவர் “இது பெருமாள் திருமொழி பாடிய ஆழ்வார் குலசேகரர் எழுதியது” என்று குறிப்பிட்டதாக இல்லை. ஆழ்வார் சரிதம் பற்றிய நூலான “திவ்ய சூரி சரிதம்” முதலியவற்றில் முகுந்தமாலை பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்பதும் நோக்கத்தக்கது. முகுந்தமாலை செய்த குலசேகர வர்மா பிறந்தது கேரளத்தில் கொடுங்களூருக்குத் தெற்கில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அவ்வூருக்குத் தற்காலத்திய பெயர் 'திருக்குலசேகரபுரம்'. அதற்கு வெகு அருகாமையில் கேரளப்பாணியில் கட்டப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் கோவில் ஒன்று உள்ளது. அதை குலசேகர வர்மாதான் கட்டியிருப்பார் என்பது அவ்வூரார் நம்பிக்கை.

அரசமரபும் துறவும்

தொகு

கொங்கர் கோமான் குலசேகரன் என்ற அடியின்மூலம், இவர் சங்க காலச் சேரர்கள் (கரூர்) மரபினர் என்று தெரிகிறது. இவரது தந்தையார் சந்திர குலத்து அரசரான திடவிரதர் என்பவராவார். குலசேகர ஆழ்வார் நால்வகைப் படை கொண்டு பகைவர்களை வென்று நீதிநெறி பிறழாமல் செங்கோல் செலுத்திக் கொல்லி நகரை அரசாண்டு வந்தார். தனதாட்சிக்குட்பட்ட கொடுந்தமிழ் மண்டலங்களான வேணாடு (திருவிதாங்கூர் பகுதி), குட்டநாடு (மலபார்), தென்பாண்டிநாடு (நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள்) ஆகியவற்றின் தலங்களைத் தரிசித்துள்ளார். இவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார். இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு பூண்டவரானதால் இவருக்கும் 'குலசேகரப் பெருமாள்' என்றே பெயர் வழங்கலாயிற்று.

பெருமாள்திருமொழி

தொகு

திருவரங்கம் சென்று திருவரங்கப் பெருமானை வாயார வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பாடியருளினார். இவருடைய பாடல்கள் பெருமாள் திருமொழி என்றழைக்கப்படும். இதனில் 31 பாசுரங்கள் திருவரங்கப் பெருமானைப் பற்றியது. இவர் திருவேங்கடம், திருக்கண்ணபுரம் முதலான திருத்தலங்களையும் பாடியுள்ளார்.

பெருமாள் திருமொழியில் பத்து பாசுரங்கள் ராமபிரானுக்காகப் பாடப்படும் தாலாட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன. இதனிலுள்ள முதற்பாடல் தெய்வபக்தி உள்ள அத்தனை தமிழ்த்தாய்மார்களும் தங்கள் சேய்களுக்காகப் பாடியிருக்கக்கூடிய பாடல்:

மன்னு புகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே!
என்னுடைய இன்னமுதே இராகவனே! தாலேலோ!

புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே திண்டிரலால் தாடகைதன் உரமுருவ சிலைவளைத்தாய் கண்டவர் தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே எண்டிசையு மாலுடயாய் இராகவனே தாலேலோ

கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய் தங்குபெரும் புகழ் ஜனகன் திருமருகா தாசரதீ கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே எங்கள்குல தின்னமுதே இராகவனே தாலேலோ

தாமரைமேல் அயனவனைப் படைத்தவனே - தசரதன்றன் மாமதலாய் மைதிலிதன் மணவாளா - வண்டினங்கள் காமரங்கல் இசைபாடும் கணபுரத்தென் கருமணியே ஏமருவும் சிலைவலவா இராகவனே தாலேலோ

பாராளும் படர்செல்வம் பரதனம்பிக் கேயருளி ஆராவன் பிளையவனோ தருஞான மடைந்தவனே சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தஅரசே தாராலும் நீன்முடிஎன் தாசரதீ தாலேலோ

சுற்றமெல்லாம் பின்தொடராத் தொல்கான மடைந்தவனே அற்றவர்கட் கருமருந்தே அயோத்தினகர்க் கதிபதியே கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே சிற்றவைதன் சொல்கொண்ட ஸ்ரீராமா தாலேலோ

ஆளிநிலைப் பாலகனா யன்ருலக முன்டவனே வாளியைகொன் ரரசிலைய வானரத்துக் களித்தவனே காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே ஆளினகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ

மலையதனா லனைகட்டி மதிளிலங்கை யழித்தவனே அலைகடலைக் கடைந்தமரார்க் கமுதருளிச் செய்தவனே கலைவளவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே சிலைவலவா சேவகனே ஸ்ரீராமா தாலேலோ

தளையவிழும் நறுங்குன்சித் தயரதன்றன் குலமதலாய் வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே யாவரும்வன் தடிவனங்க அரங்கநகர்த் துயின்றவனே காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே எவரிவேனி சிலைவலவா இராகவனே தாலேலோ

கன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன் தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை கொள்னவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரன்சொன்ன பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே

குலசேகரப் படி

தொகு

திருமலை ஆண்டவன் சன்னிதியில் ஆண்டவனின் பவளவாயை எக்காலும் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டுமென்றும், அதற்காகத் தன்னை அவர் கோயில் வாசற்படியாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் குலசேகரர் மனமுருக வேண்டிக்கொண்ட பாசுரம்:

செடியாய வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.

இதனால் இன்றும் வெங்கடேசப் பெருமாளின் வாசற்படிக்குக் குலசேகரப் படி என்ற பெயர் வழங்குகிறது.

இவர் திருவேங்கடவனிடம் இவ்வாறு வேண்டிநின்றாலும் ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்ற காரணத்தால் ஸ்ரீரங்கநாதன் கோயிலிலும் கர்ப்பகிருகம் முன்னிருக்கும் படி குலசேகரன் படி என்று அழைக்கப்படுவதைப் பார்க்கலாம்.

திருவரங்கத்திற்குச் செய்த பணி

தொகு

திருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே இம்மூன்றாவது சுற்றுக்கு இவரது பெயர் இன்றும் வழங்குகிறது. குலசேகராழ்வாரால்தான் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தைத் திருப்பணி செய்தவரும் இவரே!.

மேற்கோள்கள்

தொகு
  1. ஆன்மிகம், ed. (31 அக்டோபர் 2014). ஆழ்வார்கள் 12 பேர்: ஓர் அறிமுகம். தினமணி.
  2. 12 ஆழ்வார்கள், ed. (09 பிப்ரவரி 2011). குலசேகர ஆழ்வார். தினமலர். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link)
  3. இக்ஷ்வாகு குலதனம் என்னும் ஸ்ரீரங்க மாகாத்மியம். தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, சென்னை 600017, 1974.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலசேகர_ஆழ்வார்&oldid=3960334" இலிருந்து மீள்விக்கப்பட்டது