ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு

முன்னாள் இந்திய பொதுவுடமை கட்சித் தலைவர் மற்றும் கேரளாவின் முதல் முதல்வர்

ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூரிப்பாடு (Elamkulam Manakkal Sankaran Namboodiripad), (மலையாளம்: ഏലങ്കുളം മനക്കല്‍ ശങ്കരന്‍ നമ്പൂതിരിപ്പാട്) (13 சூன் 1909 – 19 மார்ச் 1998), பரவலாக ஈ.எம்.எஸ் (EMS) என அறியப்படுபவர், ஓர் இந்திய பொதுவுடமைத் தலைவர் மற்றும் முதல் கேரள முதலமைச்சர் ஆவார். இவரே விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் காங்கிரசல்லாத முதலமைச்சராவார். இவரது சோசலிசக் கொள்கைகளுக்காகவும் மார்க்சிய கொள்கைகளுக்காகவும் பெரிதும் அறியப்பட்டவர்.

ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு
கோட்டயத்தில் ஓர் தேர்தல் கூட்டத்தில் ஈ.எம்.எஸ்.
கேரள முதலமைச்சர்
பதவியில்
5 ஏப்ரல் 1957 – 31 சூலை 1959
பதவியில்
6 மார்ச் 1967 – 1 நவம்பர் 1969
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1909-06-13)சூன் 13, 1909
பெரிந்தல்மண்ணா, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு19 மார்ச்சு 1998(1998-03-19) (அகவை 88)
அரசியல் கட்சிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்ஆர்யா அந்தர்ஜனம்
பிள்ளைகள்2 மகன்கள் மற்றும் 2 மகள்கள்
As of அக்டோபர் 30, 2007
மூலம்: கேரள அரசு தளம்

தனி வாழ்வு

தொகு

தற்போதைய மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த பெரிந்தல்மண்ணா வட்டத்தில் உள்ள ஏலங்குளம் என்ற கிராமத்தில் சூன் 13, 1909ஆம் நாள் பரமேசுவரன் நம்பூதிரிப்பாட்டிற்கு மகனாகப் பிறந்தார். தமது இளவயதிலேயே தமது நம்பூதிரிப்பாடு இனத்தில் நிலவிய சாதி மற்றும் பழமைவாதங்களுக்கு எதிராக போராடினார். முற்போக்கு நம்பூதிரி இளைஞர்களின் அமைப்பான வள்ளுவநாடு யோகச்சேம சபையின் நிர்வாகத்தில் பங்குபெற்றார். அவரது கல்லூரி நாட்களில் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் இந்திய விடுதலை இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்திருந்தார்.

அவர் ஓர் எழுத்தாளர். பல இலக்கிய படைப்புகளுக்குச் சொந்தக்காரர். கேரள வரலாறு குறித்த அவரது புத்தகம் குறிப்பிடத்தக்கது.[1][2]

சோசலிசம்

தொகு

1934ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியினுள் ஓர் அங்கமாக சோசலிசக் காங்கிரசு கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராவார்.அக்கட்சியின் அனைத்திந்திய இணைச் செயலராக 1934 முதல் 1940 வரை இருந்தார். இக்காலகட்டத்தில் சென்னை மாகாண சட்டசபைக்கும் (1939) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமது சோசலிசக் கொள்கைகளில் உறுதியாக இருந்த அவர் ஏழைத் தொழிலாளர்களின் நலன் குறித்து உந்தப்பட்டு பொதுவுடமைக் கட்சியில் இணைந்தார். கேரளாவில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி அமைய காரணமானவர்களில் இவரும் ஒருவர். அதற்காகச் சில காலம் தலைமறைவாகவும் இருக்க நேரிட்டது. 1962ஆம் ஆண்டு இந்தியச் சீனப் போரின்போது சீனாவின் காரணங்களை எடுத்துரைத்த சிலரில் ஒருவர்.1964ஆம் ஆண்டு கட்சி பிளவு பட்டபோது, மார்க்சியப் பிரிவுடன் இணைந்தார். அதன் மத்தியகுழு மற்றும் பொலிட்பீரோவில் அங்கத்தினராக இருந்த அவர் 1977ஆம் ஆண்டு முதல் 1992 வரை அக்கட்சியின் பொது செயலாளராக இருந்தார். அவரது மறைவு வரை கட்சியின் பொலிட்பீரோ அங்கத்தினராக இருந்தார்.

மாநில அரசு அமைப்பு

தொகு
 
பெரிந்தல்மன்னாவில் ஈஎம்எஸ் நினைவு கூட்டுறவு மருத்துவமனை

புதிதாக அமைந்த கேரள மாநிலத்தில் நடந்த முதல் தேர்தலிலேயே, 1957, இந்திய பொதுவுடமைக் கட்சிக்கு பெரும் வெற்றியைத் தேடித்தந்து உலக வரலாற்றிலேயே முதன்முறையாகப் பொதுவுடமைத் தலைவரொருவர் மக்களாட்சித் தேர்தல் வழியே மாநில ஆட்சிக்கு தலைமையேற்ற பெருமை பெற்றார். அவர் ஏப்ரல் 5 1957 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றது இந்தியாவில் ஓர் கட்சி காங்கிரஸின்றி பதவியேற்பதற்கு முன்னோடியாக அமைந்தது. அவரது அரசு நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி சீர்திருத்தங்களை நிறைவேற்றியது. இந்திய மக்களாட்சி வரலாற்றில் மற்றொரு முன்னோடியாக 1959ஆம் ஆண்டு நடுவண் அரசால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதி 356 கீழ் கலைக்கப்பட்டது.1967ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக முஸ்லிம் லீக் உள்ளிட்ட ஏழு கட்சி கூட்டணிக்கு தலைமையேற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இம்முறை அவரது ஆட்சி இரண்டரை ஆண்டுகள் நீடித்தது.

கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக 1960 முதல் 1964 வரையும் பின்னர் 1970 முதல் 1977 வரையும் பணியாற்றினார். மக்கள் திட்டம் மற்றும் கேரள இலக்கிய இயக்கம் மூலமாக அதிகாரத்தையும் மூலங்களையும் பரவலாக்கும் தம்முடைய கொள்கையை பரப்பினார். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் பல புத்தகங்கள் எழுதினார். இவை சிந்தா பதிப்பகம் ஈஎம்எஸ் சஞ்சிகா என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளது.

சீன இந்தியப் போர்

தொகு

1962ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர் மூண்டபோது இடதுசாரிக் கட்சிகளின் சீன ஆதரவு கண்டனத்திற்கு உள்ளானபோது இவர் மற்றவர்களின் சீன எதிர்ப்பிற்கு கண்டனம் தெரிவித்தார். எல்லைச் சச்சரவுகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்ப்பதன் தேவையை வலியுறுத்தினார்.[1]

இறப்பு

தொகு

ஈ. எம். எஸ் 1998 மார்ச் 19 அன்று இறந்தார். இவருக்கு ஆர்யா என்ற மனைவியும் இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர்.

படைப்புகள்

தொகு

ஈ.எம்.எஸ்ஸின் இரு நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன.

  1. வேதங்களின் நாடு
  2. இந்திய சுதந்திரப்போராட்ட வரலாறு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Namboodiripad's writings". Archived from the original on 2012-11-03. பார்க்கப்பட்ட நாள் 2010-01-13.
  2. ராமசந்திர குகா, இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு, p 294


வெளி இணைப்புகள்

தொகு
முன்னர்
(ஒருவருமிலர்)
கேரள முதலமைச்சர்
1957–1959
பின்னர்
முன்னர் கேரள முதலமைச்சர்
1967–1969
பின்னர்