ஒற்றி (யாழ்ப்பாணம்)
யாழ்ப்பாணத்தில் ஒற்றி என்பது, ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தைப் பெற்றுக்கொண்டு அதன் வட்டிக்குப் பதிலாகப் பணம் கொடுத்தவர், பணம் பெற்றுக்கொள்பவரின் நிலம் அல்லது பிற சொத்துக்களில் இருந்து பயன் பெற்றுக்கொள்ளும்படி விடும் ஒரு முறை ஆகும். இதன் பல்வேறு அம்சங்கள் குறித்து யாழ்ப்பாணத்து மரபுவழிச் சட்டமான தேசவழமை விரிவாக எடுத்தாள்கிறது. இவ்வகை ஒற்றி தேசவழமைக்கே தனித்துவமான ஒன்று எனக் கூறப்படுகின்றது.[1] பணத்தேவைக்காக ஒருவர் தன்னிடம் உள்ள நிலத்தையோ பிற சொத்துக்களையோ அடமானம் அல்லது ஈடு வைப்பதில் இருந்தும், குறித்த சொத்தை குத்தகைக்கு, வாடகைக்கு எடுப்பதில் இருந்தும் இது வேறுபட்டது. இது சொத்துக்களின் உடமையாளருக்கும், அவற்றுக்கான தேவை உடையவர்களுக்கும் இடையிலான ஒரு சட்ட அடிப்படையிலான தொடர்பு எனலாம். எடுத்துக்காட்டாக, நிலச் சொந்தக்காரர் ஒருவர் தன்னால் பயன்படுத்த முடியாத அல்லது மேலதிகமாக உள்ள நிலத்தை, ஒரு தொகை பணத்தைப் பெற்றுக்கொண்டு வேளாண்மைக்காக நிலம் தேவைப்படும் இன்னொருவருக்கு ஒற்றிக்குக் கொடுக்கிறார். அவர் வாங்கிய பணத்துக்கான வட்டிக்கு ஈடாக, நிலத்தை பெற்றுக்கொள்பவர் அந்நிலத்தில் வேளாண்மை செய்து அதிலிருந்து பயன் பெற்றுக்கொள்வார். தேசவழமைச் சட்டம், ஒற்றியோடு சம்பந்தப்பட்ட இரு தரப்பாரினதும் நலன்களைப் பாதுகாப்பதற்கான விதிமுறைகளைக் கொண்டுள்ளது. எனினும், தற்காலத்தில், பொதுச் சட்டங்களுக்கு வழிவிட்டு இந்த விதிகள் வழக்கற்றுப் போய்விட்டன.
சொற்பயன்பாடு
தொகுஒற்றி தொடர்பில் பல தனித்துவமான சொற்பயன்பாடுகளைத் தேசவழமையில் காண முடிகிறது.[2] இச் சட்டம் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை என்பதால், இச்சொற்கள் 350 ஆண்டுகளுக்கு மேல் இலங்கையின் வட மாகாணத்தில் வழக்கில் இருந்து வருபவை. ஒற்றி என்னும் சொல்லுக்குச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி, சொத்தை அனுபவிக்கும் பாத்தியதையுடன் கூடிய அடைமானம் எனப் பொருள் தருகிறது.[3] இதே பொருளிலேயே தேசவழமையிலும் இச் சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. ஒற்றியுடன் தொடர்புடைய தரப்பினரைக் குறிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தனது சொத்தைக் கொடுத்துப் பணத்தை வாங்குபவனை, ஒற்றி வைத்தவன், ஒற்றி விற்றவன் ஆகிய சொற்களாலும், அச்சொத்தைப் பெற்றுக்கொண்டு அனுபவிப்பவனை ஒற்றியாளுகிறவன், ஒற்றி கொண்டவன், ஒற்றி பிடித்தவன், ஒற்றி வாங்கினவன், ஒற்றிக்காரன் ஆகிய சொற்களாலும் தேசவழமை குறிப்பிடுகிறது. கொடுக்கப்பட்ட பணத்தைக் குறிக்க ஒற்றிப்பணம், ஒற்றிமுதல் ஆகிய சொற்கள் பயன்படுகின்றன. வாங்கிய பணத்தைக் கொடுத்து ஒற்றி வைத்த சொத்தைத் திரும்பப் பெறுதல் ஒற்றி மீளுதல் எனப்படுகிறது.
ஒற்றி வைக்கக்கூடிய சொத்துக்கள்
தொகுகாணிகளை (நிலம்) ஒற்றி வைப்பது குறித்தே தேசவழமை அதிகம் பேசுகிறது. இன்றுவரை நிலங்களே ஒற்றிக்கு விடப்படுகின்றன. எனினும் முற்காலத்தில் நிலங்களைத் தவிர மரங்கள், மாடுகள், சிறைகள் (அடிமைகள்) போன்றவற்றையும் யாழ்ப்பாணத்தில் ஒற்றி வைத்தனர் என்பது தேசவழமையில் இவை பற்றிக் குறிப்பிடுவதில் இருந்து அறிய முடிகிறது. தென்னை, வேம்பு, பலா, கமுகு போன்ற காய்க்கும் மரங்களை ஒற்றிக்கு வைத்தனர். ஒற்றிக்கு எடுப்பவர் அம்மரங்களைப் பேணி அவற்றில் இருந்து கிடைக்கும் பழங்களையும் பிறவற்றையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். விலங்குகள் ஒற்றிப் பொருளாக இருக்கும்போது, பணம் வாங்கியவர், குறித்த பணத்தைத் திரும்பக் கொடுக்கும்வரை ஏற்கெனவே பேசிக்கொண்டபடி குறித்த விலங்குகளைப் பணம் கொடுத்தவரின் பயன்பாட்டுக்காக அனுப்புவார். எடுத்துக்காட்டாக, பணம் பெற்றுக்கொண்டவர், பெற்றுக்கொண்ட பணத்தின் வட்டிக்காக மாடுகளைப் பணம் கொடுத்தவரின் நிலத்தில் உழவுக்காக ஆண்டுதோறும் அனுப்பவேண்டும். 1844 ஆம் ஆண்டில் அடிமை முறை முற்றாக ஒழிக்கப்படும் வரை யாழ்ப்பாணத்து உயர்குடியினர் பலர் அடிமைகளை வைத்திருந்தனர். தலைமுறை தலைமுறையாகத் தமது எசமானர்களுக்குச் சேவை செய்துவந்த இந்த அடிமைகள் "சிறை"கள் எனப்பட்டனர். இச்சிறைகளும் எசமானர்களுடைய சொத்துக்களாகவே கருதப்பட்டனர்.[4] இதனால், இச்சிறைகளும் ஒற்றி வைக்கக்கூடிய சொத்துக்களாகக் கருதப்பட்டனர். ஒற்றி வைக்கப்பட்ட சிறைகள் நோய்வாய்ப்படும்போது ஒற்றி கொண்டவர் உரிய நேரத்தில் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில், மருத்துவத்துக்கான பொறுப்பை அச்சிறைகளின் எசமானே ஏற்றுக்கொள்ளவேண்டும் எனத் தேசவழமை கூறுகிறது.[5]
ஒற்றி மீளுதல்
தொகுபெற்றுக்கொண்ட பணத்தைத் திரும்பக் கொடுத்து ஒற்றி வைத்த சொத்தை மீளப் பெற்றுக்கொள்ளல் ஒற்றி மீளுதல் எனப்படுகிறது. ஒற்றிக்கு எடுத்தவரும் சொத்தைத் திரும்ப ஒப்படைத்துக் கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நினைத்த நேரத்தில் ஒற்றி மீள முடியாது. தேசவழமைப்படி இதற்கான சில வழிமுறைகளும், கட்டுப்பாடுகளும் உள்ளன. நிலம் தொடர்பிலான ஒற்றியை மீட்க விரும்பும் ஒருவர் ஒற்றி எடுத்தவர் அடுத்த பருவத்துக்கு வேளாண்மைக்கு ஆயத்தம் செய்யுமுன்னரே தனது விருப்பம் குறித்து ஒற்றிக்கு எடுத்தவருக்கு அறிவிக்க வேண்டும். நிலத்தின் பயன்பாட்டைப் பொறுத்துக் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே ஒற்றி மீட்க முடியும். தேசவழமையின்படி வெவ்வேறு நிலப் பயன்பாட்டுக்கு ஒற்றி மீட்கும் காலங்கள் பின்வருமாறு:[6]
- வரகு புலம் - ஆடி, ஆவணி மாதங்கள்.
- நெல்வயல் - ஆவணி, புரட்டாதி மாதங்கள்.
- பனந்தோப்பு - கார்த்திகை மாதம்.
- கொழுந்துத் தோட்டம் - கார்த்திகை மாதம்.
- புகையிலைத் தோட்டம் - கார்த்திகை மாதம்.
பணம் கொடுத்தவர் நிலத்தைத் திரும்பக் கொடுக்க விரும்பினால், அந்நிலத்தை உரிமைக்காரரிடம் ஒப்படைத்த பின்னர் ஒரு ஆண்டின் பின் தனது பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
தற்காலம்
தொகுபிற்காலத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் மூலம் தேசவழமைச் சட்டத்தின் ஒற்றி குறித்த விதிகள் வழக்கிழந்து விட்டன. தற்போது பொதுச் சட்டங்களின் கீழ் உருவாக்கப்படும் ஈட்டு உறுதிகள் மூலமே இருதரப்பாரின் கடமைகளும், உரிமைகளும் தீர்மானிக்கப்படுகின்றன.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Thambiah, H. W., The Laws and Customs of The Tamils of Jaffna, Women's Education and Research Centre, Colombo, Fourth Print 2009. ப. 206.
- ↑ பத்மநாதன், சி., இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2002. பக். 112-115.
- ↑ சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் "ஒற்றி"க்கான பதிவு[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Thambiah, H. W., The Laws and Customs of The Tamils of Jaffna, Women's Education and Research Centre, Colombo, Fourth Print 2009. ப. 74.
- ↑ பத்மநாதன், சி., இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2002. பக். 114.
- ↑ பத்மநாதன், சி., இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2002. பக். 112,113.
- ↑ Thambiah, H. W., The Laws and Customs of The Tamils of Jaffna, Women's Education and Research Centre, Colombo, Fourth Print 2009. ப. 206.