ஓநாய் குலச்சின்னம்
ஓநாய் குலச்சின்னம் (Wolf Totem) என்பது 2004 ஆண்டைய சீன அரை வாழ்கை வரலாற்றுப் புதினமாகும். சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் உச்ச காலத்தில், 1967 இல் உள் மங்கோலியாவின் கிராமப்புறங்களுக்கு பெயிஜிங்கில் இருந்து அனுப்பப்பட்ட இளம் மாணவரின் அனுபவங்களைப் பற்றி 2004 ஆம் ஆண்டின் சீன மொழி அரை சுயசரிதை நூல் ஆகும்.[1] வரலாறாக, மானுடவியலாக, சுற்றுச்சூழலாக, புவியியலாக, நாம் வாழும் இந்த வாழ்வு குறித்தான விமர்சனமாக இந்த நாவல் பலநூறு படிப்பினைகளை வாசகர்களுக்கு முன்வைக்கிறது. இப்புதினத்தை ஜியாங் ரோங் என்ற புனைப்பெயரில் லு ஜியாமின் புத்தகத்தை எழுதினார்; புத்தகத்கம் வெளியீடப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகும் அவருடைய உண்மை அடையாளம் பகிரங்கமாக அறியப்படவில்லை .[2]
நூலாசிரியர் | ஜியாங் ரோங் (புனைபெயர்) |
---|---|
உண்மையான தலைப்பு | 狼图腾 (Láng Túténg) |
மொழிபெயர்ப்பாளர் | சி. மோகன் |
நாடு | சீனா |
மொழி | சீன மொழி மற்றும் 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்கப்பட்டுள்ளது. |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | சாங்கியாங் லிட்ரேச்சர் அண்டு ஆர்ட் பப்ளிஷிங் ஹவ்ஸ் |
வெளியிடப்பட்ட நாள் | 2004 ஏப்ரல் |
ஊடக வகை | அச்சு (நூல் அட்டை) |
ISBN | 7-5354-2730-8 |
OCLC | 55622937 |
LC வகை | PL2942.3.A44 L36 2004 |
கதை
தொகுசீனாவில் மாவோவின் காலத்தில் நிகழ்ந்த கலாச்சாரப் புரட்சியைத் தொடர்ந்து 1967 காலகட்டத்தில் முதலாளித்துவ சிந்தனையில் இருப்பவர்களை, குட்டி பூர்ஷ்வா மனநிலையில் இருப்பவர்களை அந்தக் கருத்தியல்களிருந்து மாற்றுவதற்காக கிராமப்புறங்களுக்கு அனுப்புகிறார்கள். பீஜிங் பல்கலைக் கழகத்தின் மாணவர்களான ஜென்னும் அவனது நண்பர்களும் உள் மங்கோலியா மாகாணத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.
ஜென்னுக்கும் அவனது நண்பர்களுக்கும் மேய்ச்சல் நிலம் பற்றி எதுவும் தெரியாது. அங்கிருக்கும் ஆட்டுப் பட்டிகளின் மீதும், குதிரைகளின்மீதும் அடிக்கடி தாக்குதல் நடத்தும் மங்கோலிய ஓநாய்களை அவர்கள் எதிரிகளாகப் பாவிக்கின்றனர். ஆனால், உள்ளூர் மங்கோலிய நாடோடி மக்களோ ஓநாய்களை அப்படிப் பார்க்கவில்லை. நாடோடிகளின் மூத்த குடியான பில்ஜியின் ஞானத்தின் வழி ஜென்னும் அவனது நண்பர்களும் ஓநாய்களை நேசிப்பவர்களாக மாறுகின்றனர்.
மங்கோலிய மேய்ச்சல் நாகரிகத்தில் எல்லாம் மிகச் சரியாக இருக்கின்றன. அவர்கள் நாடோடிகளாகத் தொடர்ந்து இடம்பெயர்ந்தபடி இருக்கிறார்கள். இடம்பெயர்வதின் வழியேதான் ஒரு நிலப்பரப்பைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைக்க முடியுமென அவர்கள் கண்டறிகிறார்கள். ஓநாய்கள் மான்களை வேட்டையாடுகின்றன. இதனால் மான்களின் இனப்பெருக்கம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மான்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் உள்ளதால் புல்வெளிகள் காப்பாற்றப்படுகின்றன. புல்வெளிகள் காப்பாற்றப்படுவதினால் ஆடுகள், குதிரைகள் ஆகியவற்றை நம்பிவாழும் மனித சமூகம் உயிர் வாழ்கின்றன.
ஆட்டையோ குதிரையையோ தாக்கவரும் ஓநாய்க் கூட்டத்துடன் உக்கிரமாக மங்கோலிய நாடோடியினம் சண்டையிடுகிறது. என்றாலும், அதே நேரத்தில் ஓநாய்கள் தங்களைக் காப்பதற்காக டென்ஞ்சர் கடவுளால் அனுப்பப்பட்ட தூதுவர்கள் என்றே அவரகள் நம்புகிறார்கள். ஓநாய்கள் இன்றி அவர்கள் வாழ்வு இல்லையென அவர்களுடைய ஆயிரம் ஆண்டு மரபிலான அறிவுச் சேகரிப்பு சொல்கிறது. மங்கோலியர்கள் இறந்தபின்பு அவர்களைப் புதைக்காமல் ஓநாய்கள் தின்பதற்காக அடர் புல்வெளிகளில் சடலங்கள் வைக்கப்படுகின்றன. ஓநாய்கள் அந்தச் சடலத்தைத் தின்பதன் வழியேதான் அதற்குரிய ஆன்மா டென்ஞ்சர் கடவுளை அடைய முடியுமென அம்மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
இப்படி எல்லாமே சரியாக நடந்துகொண்டிருந்த நிலையில் கலாச்சாரப் புரட்சியின் தொடர்ச்சியாக கட்சியின் ஆணைப்படி கிழக்கு சீனாவின் தேவைகளுக்காக மனிதர்களின் கால்படாத மங்கோலியப் புல்வெளிகளை விவசாயத்துக்கு மாற்ற பீஜிங்கிலிருந்து வந்த ஆணைக்கினங்க வந்தவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியவேயில்லை. மனிதர்களுக்குத்தான் உலகில் உள்ளது எல்லாம் என்கிறார்கள். ஓநாய்களைக் கொல்வதின் வழி மங்கோலியர்களுக்கு நன்மை செய்வதாகவே அவர்கள் கருதுகிறார்கள். ஓநாய்களின் உயிர்த்திருத்தலின் வழியேதான் மங்கோலிய நிலப்பரப்பு உயிர் வாழ முடியுமென பில்ஜி அவர்களிடம் மன்றாடுகிறார். கட்சித் தலைமை கேட்பதாகயில்லை. அறிவியல் ராக்கெட் யுகத்தில் இவையெல்லாம் அபத்தமென்கிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகால மங்கோலிய ஞானம், நிலப்பரப்பு, ஓநாய்கள், பறவைகள், உயிரினங்கள் என அனைத்தும் முற்றிலும் அழிக்கப்படுகின்றன. இருபதே வருடங்களில் அந்த நிலப்பரப்பு பாலையாகிறது. ஓநாய்கள் இல்லாத நிலத்தில் எலிகள் அரசர்களாகின்றன. பில்ஜி “இதற்குப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்கிறார். பீஜிங் நகரத்தை வாரக் கணக்கில் பனிப்புயல் சூழ்கிறது.
ஜென் இருபது வருடம் கழித்து மறுபடியும் அங்கு போகும்போது அதிநவீன இருசக்கர வாகனங்களும், செயற்கைக்கோள் தொலைக்காட்சி குடை ஏற்பிகளையும் அவன் காண்கின்றான. அந்த நிலத்தின் இயற்கையின் சமத்துவத்தைப் பேணும் பிரதிநிதிகளாக இருந்த ஓநாய்கள் அந்த மண்ணின் மூதாதையர்களின் கனவுகளில் மட்டுமே வாழ்கின்றன.[3]
திறனாய்வு எதிர்வினைகள்
தொகுஜியாங் எந்த விருது விழாக்களில் கலந்து கொள்ளவோ அல்லது எந்த விளம்பரத்தில் கலந்து கொள்ளவோ மறுத்துவிட்டாலும், ஓநாய் குலச்சின்னம் நூலானது பத்துக்கும் மேற்பட்ட இலக்கியப் பரிசுகளையும் அத்துடன் பிற அங்கீகாரங்களையும் பெற்றது:
- "2004 ஆண்டின் சிறந்த பத்து நூல்கள்" என்ற பட்டியலில் இந்த நூலை பன்னாட்டு செய்தி வார இதழான Yazhou Zhoukan பட்டியலிட்டது.[4]
- 2005 ஆம் ஆண்டில் 2 வது "21 ஆம் நூற்றாண்டு டிங் ஜூன் செமினிகல் லிட்டரரி பரிசுக்கு" பரிந்துரைக்கப்பட்டது.[5]
- 2007 நவம்பரில் முதல் மேன் ஆசிய இலக்கிய பரிசை, பெற்றது.[6]
தமிழ் மொழிபெயர்ப்பு
தொகுதமிழில் இப்புதினமானது ஓநாய் குலச்சின்னம், என்ற பெயரில் சி. மோகனால், 671 பக்கங்களில் மொழிபெயர்கப்பட்டு, அதிர்வு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்புக்காக 2013 ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியத் தோட்ட விருது மொழிபெயர்ப்பு பிரிவில் வழங்கப்பட்டது.
திரைப்படமாக
தொகுவொல்ப் டோட்டாம் (Wolf Totem) என்ற பெயரில் 2015 ஆம் ஆண்டு இந்த புதினத்தை அடிப்படையாகக் கொண்ட சீன மொழி திரைப்படம் எடுக்கப்பட்டது. இதை சீன-பிரெஞ்சு கூட்டு தயாரிப்பில், பிரெஞ்சு இயக்குநர் ஜீன்-ஜாக்ஸ் அன்னுடு இயக்கினார்.
சலனப் படமாக
தொகு2015 நவம்பரில், லீ விஷன் பிக்சர்ஸ் த லயன் கிங் இயக்குநர் ராப் மின்கோஃப் உடன் இரண்டு படங்களுக்கான ஒப்பந்தம் செய்தது, அதில் இப்புதினத்தை அடிப்படையாகக் கொண்ட காவிய சலனப்படத்தை பீட்டர் வெண்டனியை பங்குதாரராக கொண்டு உருவாக்கும் திட்டத்தைக் கொண்டது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ French, Howard (2005-11-03), "A Novel, by Someone, Takes China by Storm", The New York Times, பார்க்கப்பட்ட நாள் 2007-04-20
- ↑ Bougon, Francois (2008-03-11), "Chinese ex-prisoner now global literary star", The China Post, archived from the original on 2008-03-19, பார்க்கப்பட்ட நாள் 2008-03-14
- ↑ "ஓநாய்கள் இல்லாத நிலத்தில் எலிகள்தான் அரசர்கள்!". கட்டுரை. தி இந்து. 13 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2017.
- ↑ Zhang, Hailing (2005-01-16), "2004亞洲週刊十大好書揭曉 (Announcement of Yazhou Zhoukan's 10 Best Chinese Books of 2004", Yazhou Zhoukan, archived from the original on 2019-06-03, பார்க்கப்பட்ட நாள் 2007-04-20
- ↑ "第二届"21世纪鼎钧双年文学奖"揭晓 (Announcement of the 2nd '21st Century Ding Jun Semiannual Literary Prize')", Sina News, 2005-04-05, archived from the original on 2005-09-09, பார்க்கப்பட்ட நாள் 2007-04-20
- ↑ "Chinese author scoops book prize", BBC News, 2007-11-11, பார்க்கப்பட்ட நாள் 2008-03-14
- ↑ Mercedes Milligan. "Le Vision, Rob Minkoff Partner for Animated Wolf Totem". பார்க்கப்பட்ட நாள் 5 September 2016.