ஓய்வூதியம் தொகுத்துப் பெறல் (தமிழ்நாடு அரசு)
ஓய்வுபெறும் ஒரு அரசு ஊழியர் தன்னுடைய ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை தானாகவே முன்வந்து அரசுக்கு ஒப்புவிப்பு செய்து, ஒரு ஒட்டு மொத்த தொகையைப் பெற்று பயனடைவதே ஓய்வூதியம் தொகுத்துப் பெறல்(Commutation of Pension) எனப்படும். இவ்வாறு தொகுத்துப் பெறும் தொகை ஓய்வூதியர் தன்னுடைய ஓய்வூதியத்தை ஒப்புவிப்பு செய்யும் வயதை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. ஓய்வு பெற்று சில ஆண்டுகள் கழித்து ஒப்புவிப்பு செய்து பெறும் ஒட்டு மொத்தத் தொகை வயதிற்கேற்ப குறைந்து விடும் என்பதால் ஓய்வூதியர்கள் ஓய்வுபெறும் போதே தங்களுடைய ஓய்வூதியத்தை ஒப்புவிப்பு செய்து அதிகப் பணப்பலன் அடைகிறார்கள்.அதிகபட்சமாக ஒரு ஓய்வூதியர் தன்னுடைய ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பாகத்தை ஒப்புவிப்பு செய்யலாம். ஓய்வுபெறும் அரசு ஊழியரின் விருப்ப வசதியை அடிப்படையாகக் கொண்டே, ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெறும் இத்திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஓய்வூதியர் பெறும் ஒட்டு மொத்தத் தொகைக்கு இந்தியாவில் வருமானவரி கிடையாது.[1]
ஒப்புவிக்கத் தகுதியுடைய ஓய்வூதியர்கள
தொகுவயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுபவர்களும் விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறுபவர்களும் இத்திட்டத்திற்காக விருப்பம் தெரிவித்து ஒட்டுமொத்தத் தொகையைப் பெற்று பயனடையலாம். குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் தற்காலிக ஓய்வூதியம் (தமிழ்நாடு) பெறுபவர்கள் இத்தொகையைப் பெற இயலாது. தண்டனையாக அல்லாமல் கட்டாய ஓய்வூதியம் பெறுபவர்களும் இத்திட்டத்தின் மூலமாக பயனடைய வழியுண்டு.
ஒட்டு மொத்தத் தொகையைக் கணக்கிடுதல்
தொகுஓய்வூதியத்தை தொகுத்து ஒட்டு மொத்தத் தொகையைப் பெறுவது ஓய்வு பெறும் நாளில் உள்ள ஓய்வூதியரின் வயதின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக 30.06.2014ல் ஓய்வு பெறும் ஒரு ஓய்வூதியருக்கு ரூபாய் 15000 ஓய்வூதியமாக மாநிலக் கணக்காயரால் அனுமதிக்கப்படுகிறது.அவர் தன்னுடைய ஓய்வூதியத்தில் அதிகபட்சமாக ரூபாய் 5000 மட்டும் அதாவது மூன்றில் ஒரு பாகம் அரசுக்கு ஒப்புவித்து ஒட்டுமொத்தமாக ஒரு தொகையை பெறலாம். ஓய்வூதியர்கள் ஓய்வு பெறும் நாளுக்கு அடுத்த வயதைக் கணக்கிட்டு அரசு ஓர் அட்டவணையை நிர்ணயம் செய்துள்ளது. இவ்வட்டவணை மதிப்பின் ஓராண்டு மதிப்பை ஓய்வூதியர் ஓப்புவிக்கும் தொகையால் பெருக்கி ஒட்டுமொத்தத் தொகை கணக்கிடப்படுகிறது. இந்த கணக்கீட்டின் அடிப்படையில் மேற்கண்ட ஓய்வூதியர் ( 5000 * 12 * 8.371 ) ரூபாய் 5,02,260 மட்டும் ஒட்டு மொத்தத் தொகையாகப் பெறுவார். இவருடைய அடுத்த பிறந்த நாளின் போது வயது 59. அரசு இவ்வயதிற்கு நிர்ணயித்துள்ள தொகுத்துப் பெறல் அட்டவணை மதிப்பு 8.371 ஆகும். [2]. 1.1.2006 க்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு அட்டவணையும் அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு அட்டவனையும் பயன்படுத்தப்படுகிறது.
31.12.2005 வரை ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியத்தை தொகுத்துப் பெறல் அட்டவனை மதிப்பு
வயது | மதிப்பு | வயது | மதிப்பு | வயது | மதிப்பு |
---|---|---|---|---|---|
17 | 19.28 | 40 | 15.87 | 63 | 9.15 |
18 | 19.20 | 41 | 15.64 | 64 | 8.82 |
19 | 19.11 | 42 | 15.40 | 65 | 8.50 |
20 | 19.01 | 42 | 15.15 | 66 | 8.17 |
21 | 18.91 | 44 | 14.90 | 67 | 7.85 |
22 | 18.81 | 45 | 14.64 | 68 | 7.53 |
23 | 18.70 | 46 | 14.37 | 69 | 7.22 |
24 | 18.59 | 47 | 14.10 | 70 | 6.91 |
25 | 18.47 | 48 | 13.82 | 71 | 6.60 |
26 | 18.34 | 49 | 13.54 | 72 | 6.30 |
27 | 18.21 | 50 | 13.25 | 73 | 6.01 |
28 | 18.07 | 51 | 12.95 | 74 | 5.72 |
29 | 17.93 | 52 | 12.66 | 75 | 5.44 |
30 | 17.78 | 53 | 12.35 | 76 | 5.17 |
31 | 17.62 | 54 | 12.05 | 77 | 4.90 |
32 | 17.46 | 55 | 11.73 | 78 | 4.65 |
33 | 17.29 | 56 | 11.42 | 79 | 4.40 |
34 | 17.11 | 57 | 11.10 | 80 | 4.17 |
35 | 16.92 | 58 | 10.78 | 81 | 3.94 |
36 | 16.72 | 59 | 10.46 | 82 | 3.72 |
37 | 16.52 | 60 | 10.13 | 83 | 3.52 |
38 | 16.31 | 61 | 9.81 | 84 | 3.32 |
39 | 16.09 | 62 | 9.49 | 85 | 3.13 |
1.1.2006 க்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியத்தை தொகுத்துப் பெறல் அட்டவனை மதிப்பு
வயது | மதிப்பு | வயது | மதிப்பு | வயது | மதிப்பு |
---|---|---|---|---|---|
20 | 9.188 | 41 | 9.075 | 62 | 8.093 |
21 | 9.187 | 42 | 9.059 | 63 | 7.982 |
22 | 9.186 | 43 | 9.040 | 64 | 7.862 |
23 | 9.185 | 44 | 9.019 | 65 | 7.731 |
24 | 9.184 | 45 | 8.996 | 66 | 7.591 |
25 | 9.183 | 46 | 8.971 | 67 | 7.431 |
26 | 9.182 | 47 | 8.943 | 68 | 7.262 |
27 | 9.180 | 48 | 8.913 | 69 | 7.083 |
28 | 9.178 | 49 | 8.881 | 70 | 6.897 |
29 | 9.176 | 50 | 8.846 | 71 | 6.703 |
30 | 9.173 | 51 | 8.808 | 72 | 6.502 |
31 | 9.169 | 52 | 8.768 | 73 | 6.296 |
32 | 9.164 | 53 | 8.724 | 74 | 6.085 |
33 | 9.159 | 54 | 8.678 | 75 | 5.872 |
34 | 9.152 | 55 | 8.627 | 76 | 5.657 |
35 | 9.145 | 56 | 8.572 | 77 | 5.443 |
36 | 9.136 | 57 | 8.512 | 78 | 5.229 |
37 | 9.126 | 58 | 8.446 | 79 | 5.018 |
38 | 9.116 | 59 | 8.371 | 80 | 4.812 |
39 | 9.103 | 60 | 8.287 | 81 | 4.611 |
40 | 9.090 | 61 | 8.194 | - | - |
ஒட்டு மொத்தத் தொகை பெற்ற பிறகு ஓய்வூதியம்
தொகுஓய்வூதியத்தைத் தொகுத்து ஒட்டு மொத்தத் தொகை பெற்ற பிறகு, அரசுக்கு ஒப்புவிப்பு செய்த ஓய்வூதியத்தொகையானது ஓய்வூதியரின் ஓய்வூதியத்தில் மாதந்தோறும் குறைக்கப்படும். மேற்கண்ட ஓய்வூதியருக்கு மொத்தமாக அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியம் ரூபாய் 15000 க்குப் பதிலாக ரூபாய் 10000 மட்டுமே ஓய்வூதியமாக கிடைக்கும். ஆனால் இவருக்கு அகவிலைப்படி ரூபாய் 15000க்கே கணக்கிடப்படும்.
குறைக்கப்பட்ட ஓய்வூதியம் திரும்பப் பெறுதல்
தொகுஓய்வூதியர் ஓய்வூதியத்தை தொகுத்து ஒட்டு மொத்தத் தொகை பெற்ற நாள் முதல் 15 ஆண்டுகள் வரை அவருக்கு ஓய்வூதியம் குறைவாக வழங்கப்படும். 15 ஆண்டுகள் முடிந்த பிறகு அவர் முழு ஓய்வூதியம் பெற தகுதி பெறுவார். ஓய்வூதியம் வழங்கும் அலுவலரே முழு ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை வழங்குவார். ஓய்வூதியர் இரண்டாவது முறையாக ஓய்வூதியத்தை தொகுத்து ஒட்டு மொத்தத் தொகை பெற இயலாது.
குற்றச்சாட்டு நிலுவையும் ஓய்வூதியம் தொகுத்துப் பெறலும்
தொகுஓய்வூதியக் கருத்துரு மாநிலக்கணக்காயர் அலுவலகம் அனுப்பிய பின்னர் ஓய்வூதியர் மீது குற்றச்சாட்டு ஏதேனும் எழுமாயின் அக்குற்றச்சாட்டு முடிவு செய்யப்பட்ட பிறகுதான் அவர் ஓய்வூதியத்தை தொகுத்துப் பெற முடியும். குற்றச்சாட்டின் முடிவாக தண்டனை வழங்கும் பொருட்டு ஒருவருக்கு ஓய்வூதியம் குறைக்கப்பட்டால் குறைக்கப்பட்ட ஓய்வூதியத்தின் அடிப்படையில் ஒட்டு மொத்தத் தொகை கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும். ஓய்வூதியத்தை தொகுத்துப் பெறும்போது ஓய்வூதியர் மீது குற்றச்சாடுகள் ஏதும் நிலுவையில் இருக்கக்கூடாது. மாநிலக் கணக்காயரால் ஒட்டு மொத்தத் தொகை அனுமதிக்கப்பட்டு அத்தொகை ஓய்வூதியருக்கு பட்டுவாடா செய்யப்படும் முன்னர் ஏதேனும் குற்றம் சுமத்தப்பட்டாலும் ஒப்பளிக்கப்பட்ட அத்தொகையை ஓய்வூதியருக்கு பட்டுவாடா செய்யக்கூடாது. குற்றச்சாட்டு நிலுவையில் இருக்கும் நிலையில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதாகக் கருதப்படும்.
நிபந்தனையின்பேரில் ஓய்வு பெற அனுமதிக்கப்பட்ட ஓய்வூதியர்களும் தங்கள் ஓய்வூதியத்தைத் தொகுத்து ஒட்டு மொத்தத் தொகை பெறலாம். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தண்டனையாக முடிவு செய்யப்பட்டால் தண்டனை ஆணை எந்த நாளில் வழங்கப்படுகிறதோ அந்த நாளில் ஓய்வூதியரின் வயதை அடிப்படையாகக் கொண்டு ஒட்டு மொத்தத் தொகை கணக்கிடப்படும். மாறாக அவர் குற்றமற்றவர் என்று முடிவு செய்யப்பட்டால் அவர் ஓய்வு பெற்று இருக்கவேண்டிய இயல்பான நாளிலேயே அவருடைய வயதின் அடிப்படையில் ஒட்டுமொத்தத் தொகை கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
ஓய்வூதியர் இறப்பும் ஓய்வூதியம் தொகுத்துப் பெறலும்
தொகுமாநிலக் கணக்காயரால் அங்கீகரிக்கப்பட்ட திரண்ட தொகையை பெறுவதற்குள் ஒவூதியர் இறக்க நேரிட்டால் அவர் நியமித்துள்ள வாரிசுதாரருக்கு அத்தொகையை வழங்கப்படும். இறந்தவர் வாரிசு எவரையும் நியமிக்காமல் இருப்பின் உயிரோடு இருக்கும் வாரிசுகளுக்கு அத்தொகை சமமாக பங்கிட்டு கொடுக்கப்படும்.குற்றச்சாட்டு நிலுவையில் இருக்கும் நிலையில் ஒருவர் இறக்க நேரிட்டாலும் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதாகக் கருதப்பட்டு., நியமிக்கப்பட்டவருக்கோ அல்லது வாரிசுதாரருக்கோ ஒட்டுமொத்தத் தொகை வழங்கப்படும்