ஓய்வூதியம் (இந்தியா)

ஓய்வூதியம் (pension) என்பது, அரசுத்துறையில் வயது முதிர்வு காலம்வரை நிறைவளிக்கத்தக்க வகையில் பணிபுரிந்து தங்கள் பணியை நிறைவு செய்த ஊழியர்களுக்கு ஓவ்வொரு மாதமும் அரசாங்கம் வழங்கும் தொகை ஆகும். அரச ஊழியர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வுபெறும் காரணம், சட்டரீதியான விதிகளின் கீழ் ஓய்வுபெறுதல் மற்றும் அவருடைய மொத்த பணிக்காலம், ஆகிய தன்மைகளின் அடிப்படையில் பல்வேறு வகையான ஓய்வூதிய வகைகளை ஓய்வூதிய விதிகள் அளிக்கின்றன.

இந்தியாவில் அரசு ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், உள்ளாட்சி நிறுவனங்களின் ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், வயது மூப்பின் காரணமாக ஓய்வு/விருப்ப ஓய்வு/கட்டாய ஓய்வு/கொடிய நோயால் நிரந்தரமாக பணி செய்ய இயலாமை காரணமாக ஓய்வு பெறும்போது, அவர்களது பொருளாதார நலனை ஈடுகட்டும் வகையில் அவர்களுக்கு அரசு மாதாமாதம் ஒருதொகையை ஓய்வூதியமாக வழங்குகிறது..[1][2]

ஓய்வூதிய விதிகளின்படி, ஊழியர்/ஆசிரியர் பணிபுரிந்த காலத்தையும், கடைசியாக பெற்ற ஊதியத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்படும்.[3] [4]ஊழியர்கள்/ஆசிரியர்கள் மீது குற்ற வழக்குகள் மற்றும் கடுமையான குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலோ அல்லது நீதிமன்றத்தால் குற்ற வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு இருந்தாலோ ஓய்வூதிய விதிகளின்படி அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும்.

ஓய்வூதியம் பெறுவதற்கான நிபந்தனைகள் தொகு

ஓய்வு பெற்ற பின்னரும் ஓர் அரசு ஊழியர் மத, இன, சாதி அமைப்பிலான எந்த அமைப்பிலும் தொடர்பு கொண்டு நாட்டின் அமைதிக்கும், உடமைக்கும், உரிமைக்கும் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடாதவராக இருக்க வேண்டும். (தமிழ்நாடு அரசு ஓய்வூதிய விதிகள்).

ஓய்வு பெறும் ஓர் ஊழியர் அரசுக்கோ அல்லது அரசு சார்புடைய நிறுவனத்திற்கோ இழப்பு உருவாக்குபவராக இருக்கக் கூடாது. அவ்வாறு இழப்பு ஏற்படுத்தும் நிகழ்வில் அவர் இழப்பை ஈடுசெய்ய வேண்டும். (தமிழ்நாடு அரசு ஓய்வூதிய விதிகள்).

ஓய்வுதியம் பெறுபவர் ஓய்வுக்குப் பின்னர் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவாராயின், அவருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நிறுத்தப்படும். (தமிழ்நாடு அரசு ஓய்வூதிய விதிகள்).

ஓய்வூதிய வகைகள் தொகு

வயது முதிர்வு ஓய்வூதியம் தொகு

அரசுத்துறையில் பணிபுரிபவர் 58 வயது நிறைவடைந்ததும் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெறவேண்டும். அடிப்படை பணிபுரிபவர் என்றால் 60 வயது முடிந்தவுடன் ஓய்வு பெறவேண்டும். இவ்வாறு ஓய்வு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமே வயது முதிர்வு ஓய்வூதியம் (Superannuation Pension) எனப்படும். ஒவ்வொறு மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள் அந்த மாதத்திற்கு முன் மாதத்தின் கடைசி நாளில் பணியிலிருந்து ஓய்வு பெறவேண்டும். பணி ஓய்வுபெறும் நாளில் ஒருவர் தற்காலிக பணிநீக்கம் தண்டனை பெற்று இருப்பாராயின் அவர் பணியிலிருந்து ஓய்வுபெற இயலாது.

ஓய்வு பெறும் நாளில் ஓர் ஊழியர் பெற்று வருகிற ஊதியத்தையும் அவருடைய மொத்த பணிக்காலத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்படுகிறது. 01.04.2003 காலத்திற்கு முன்புவரை 33 ஆண்டுகாலம் மொத்த பணிக்காலமாக கொண்டவர்களுக்கே முழு ஓய்வூதியம் அதாவது அவர் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது ஒருவர் 30 ஆண்டுகள் மொத்த பணிக்காலம் பெற்றிருந்தாலும் முழு ஓய்வூதியம் கிடைக்கும்.

விருப்ப ஓய்வூதியம் தொகு

ஓர் அரசு ஊழியர் 58 அல்லது 60 வயது முடிவதற்கு முன்னர் தானாகவே முன்வந்து விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறுவதற்கு வழங்கப்படுவது விருப்ப ஓய்வூதியம் (Voluntary Retirement Penion) ஆகும்.

கட்டாய ஓய்வூதியம் தொகு

அரசு ஊழியர் ஓருவருக்கு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுவதற்காக அளிக்கப்படும் கட்டாய ஓய்விற்கு வழங்கப்படும் ஓய்வூதியம் கட்டாய ஓய்வூதியம் (Compulsory Retirement Penion) எனப்படும்.

இயலாமை ஓய்வூதியம் தொகு

மருத்துவக்குழுவின் அடிப்படையில் ஓர் அரசு ஊழியர் உடல் அடிப்படையில் பணிபுரிய இயலாதவர் என்றோ மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றோ பரிந்துரைக்கப்பட்டால் அவரை பணியிலிருந்து விடுவித்து வழங்கப்படும் ஓய்வூதியம் இயலாமை ஓய்வூதியம் (Invalid Pension) எனப்படும்.

வாழ்நாள் சான்றிதழ் (Mustring-மஸ்டரிங்) தொகு

ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் ஏப்பிரல் மாதம் முதல் சூன் மாதத்திற்குள், ஓய்வூதியம் வழங்கும் மாவட்ட கருவூலம் அல்லது சார்நிலை கருவூலத்திற்கு நேரில் சென்று ”மஸ்டரிங்” பெற வேண்டும். அவ்வாறு வாழ்நாள் சான்றிதழ் (மஸ்டரிங்) பெறாதவர்களுக்கு ஆகஸ்டு மாதம் முதல் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும்.[5]

ஓய்வூதிய ஆணை காணாமல் போனால் தொகு

ஓய்வூதிய ஆணை (Pension Payment Order Book) புத்தகம் காணாமல் போனால், அரசாணை எண் 30, நிதித்துறை (ஓய்வூதியம்), நாள் 01-02-2010-இன் படி, காவல் துறையில் புகார் அளிக்காமலேயே டூப்ளிகேட் ஓய்வூதிய பட்டுவாடா ஆணை புத்தகத்தை (Duplicate Pension Payment Order Book) உரிய கருவூலம் மூலம் பெற வகை செய்யப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டம் தொகு

இந்திய நடுவண் அரசில் 01-01-2004 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும் (இந்திய அரசின் முப்படையில் சேர்ந்தவர்கள் தவிர), தமிழ்நாடு அரசில் 01-04-2003 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டப் படி ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. http://www.tn.gov.in/dop/p2.htm#Pension
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-04. பார்க்கப்பட்ட நாள் 2014-07-16.
  3. http://www.tn.gov.in/karuvoolam/pension.htm
  4. http://www.pensionersportal.gov.in/PensionCalculators/Calculator.asp பரணிடப்பட்டது 2014-07-04 at the வந்தவழி இயந்திரம் Pension Calculators
  5. http://www.dinamalar.com/news_detail.asp?id=1040170

வெளி இணைப்புகள் தொகு

இவற்றையும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓய்வூதியம்_(இந்தியா)&oldid=3547183" இலிருந்து மீள்விக்கப்பட்டது