கங்காணி முறை

கங்காணி முறை என்பது மலாயாவைப் பிரித்தானியர்கள் ஆட்சி செய்த போது, கூலி வேலைகளுக்கு ஆட்களைச் தென்னிந்தியாவில் இருந்து சாதுர்யமாக அழைத்துக் கொண்டு வரும் முறை ஆகும்.[1]

ஆங்கிலேய முதலாளிகள் தங்கள் வேலைகளை எளிமையாக்குவதற்காக இந்த கங்காணி முறையை அமுல்படுத்தினார்கள்.[2] மலாயாவில் இருந்த ஆங்கிலேய முதலாளிகள் பணம் கொடுத்து கங்காணிகளைத் தென்னிந்தியாவிற்கு அனுப்பி ஆட்களைக் கொண்டு வருமாறு பணித்தனர்.[3]

மழையை நம்பி விவசாயத்தில் ஈடுபட்ட கிராமங்களில் நிலவிய வறுமை கங்காணிகளுக்கு சாதகாக அமைந்தது. அனைத்து விதமான நம்பிக்கைகளையும் அளித்து, ஆட்களைப் பிடித்துச் செல்லும் வேலைகளை இந்தக் கங்காணிகள் மிகத் திறமையாகச் செய்து வந்தனர்.

மலாயாவில் எளிதாக சம்பாதித்து குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகிவிடலாம் என்ற கங்காணிகள் ஆசை காட்டியதை நம்பிய தென்னிந்திய மக்கள், மலாயாவுக்குள் ஆயிரக் கணக்கில் அழைத்து வரப்பட்டனர். தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று பல பிரிவு தென்னிந்திய மக்களும் சஞ்சிக்கூலிகளாய் மலாயாவுக்கு கொண்டு வரப்பட்டனர்.

கங்காணிகளை முழுக்க நம்பிய கிராம மக்கள் கடல் கடந்து பயணம் மேற்கொண்டார்கள். மலாயாவிற்குச் சஞ்சிக்கூலிகளாகக் கப்பலில் கொண்டு வரப்பட்டவர்களில் பலர் நோய்வாய்ப்பட்டு கப்பலிலேயே இறந்துபோனார்கள். அப்படி இறந்தவர்களின் உடல்களைக் கடலில் தள்ளிவிட்டார்கள்.

மலாயாவை அடைந்த சஞ்சிக்கூலிகள் ரப்பர், தேயிலை, காபி, கரும்புத் தோட்டங்களில் அடிமைத் தொழிலாளிகளாக்கப்பட்டனர். கங்காணிகள் ஆங்கிலேய முதலாளிகளின் விசுவாசமான கையாட்களாக செயல்பட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு பல கொடுமைகளை இழைத்தனர். இவர்களைக் கறுப்புக் கங்காணிகள் என்று அழைப்பதும் உண்டு.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காணி_முறை&oldid=3237596" இலிருந்து மீள்விக்கப்பட்டது