கடல்சார் வரலாறு

கடல்சார் வரலாறு என்பது, கடலில் மனிதருடைய நடவடிக்கைகளின் வரலாறும் அது குறித்த கற்கைப்புலமும் ஆகும். இதில் நாடு, பிரதேசம் என்பன சார்ந்த வரலாறுகள் முக்கியத்துவம் பெற்றிருந்தபோதிலும், உலகளாவிய அணுகுமுறையைக் கொண்ட வரலாற்றின் ஒரு கூறைப் பரந்த அளவில் உட்படுத்துகின்ற ஒரு துறையாக இது விளங்குகிறது. ஒரு கல்வித்துறை என்ற வகையில், புவியின், பெருங்கடல்கள், கடல்கள், நீர்வழிகள் போன்றவற்றுடன் மனித குலத்துக்கு உள்ள பல்வேறு தொடர்புகள் பற்றி விளங்கிக்கொள்வதற்கான் முயற்சியில் பல்வேறு துறைகளையும் இது பயன்படுத்துகிறது. கப்பற்றுறை வரலாறு, கப்பல்கள், கப்பற் போக்குவரத்து, கப்பலோட்டுதல், கடலோடிகள் என்பவை குறித்த கடந்தகால நிகழ்வுகளைப் பதிவுசெய்து விளக்குகிறது.[1]

தெற்கு ஆங்கிலக் கரையோரம் உள்ள வைட் தீவுக்கு அப்பால் காணப்படும் "பிளையிங் கிளவுட்" எனப்படும் அதிவேகப் பாய்க்கப்பலைக் காட்டும் ஓவியம். ஜேம்சு ஈ. பட்டர்சுவேர்த்து வரைந்தது.

கடல்சார் வரலாறு, பல்வேறுபட்ட விடயங்களைத் தன்னுள் அடக்குவது. மீன்பிடி, திமிங்கில வேட்டை, பன்னாட்டுக் கடலாண்மைச் சட்டம், கடற்படை வரலாறு, கப்பல்களின் வரலாறு, கப்பல் வடிவமைப்பு, கப்பல்கட்டுதல், பல்வேறு கடல்சார் அறிவியல் (கடலியல், நிலப்படவரைவியல், நீரமைவு வரைவியல் போன்றவை) தொடர்பான வரலாறுகள், கடலாய்வு, கடல்சார் பொருளியலும் வணிகமும், கப்பல் போக்குவரத்து, கடலோர விடுதிகள், கலங்கரை விளக்கங்களின் வரலாறு, இலக்கியங்களில் கடல்சார் கருப்பொருட்கள், ஓவியங்களில் கடல்சார் கருப்பொருட்கள், மாலுமிகள், கடற்பயணிகள், கடல்சார் சமுதாயங்களின் சமூக வரலாறு போன்றவை இதற்குள் அடங்கும்.[2]

பண்டைக்காலம் தொகு

 
தாயக அமெரிக்கர் குடைபடகுகள் செய்யும் காட்சி. இவர்கள் பல நூற்றாண்டுகளாகவே இவ்வாறான படகுகளை உருவாக்கி வருகின்றனர்.

வணிகம், போக்குவரத்து, போர் போன்ற ஏதோவொரு நோக்கத்துக்காக, நிலத்தில் பயணம் செய்வதிலும், கூடுதல் நகர்திறனை (mobility) வழங்கியதன்மூலம், கப்பலோட்டுதல், நாகரிக வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பாய்களைக் கொண்ட கப்பலொன்றைக் காட்டும் மிகப்பழைய சான்று, குவைத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிறந்தீட்டிய வட்டத்தட்டு ஆகும். இது கி.மு ஐந்தாம் ஆயிரவாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தது.[3]

பண்டைக் கடல்சார் வரலாற்றுக் காலத்துக்கு முன்னர் உருவான முதல் படகுகள் மரக்குற்றிகளைக் குடைந்து செய்யப்பட்ட சிறிய குடைபடகுகள் என்று கருதப்படுகிறது. இவை தனித்தனியாக வெவ்வேறு கற்காலச் சமுதாயங்களினால் உருவாக்கப்பட்டுக் கரையோர மீன்பிடித்தலுக்கும், பயணங்களுக்கும் பயன்பட்டது. பசிபிக் வடமேற்கைச் சேர்ந்த தாயக மக்கள் மரவேலையில் திறமை பெற்றவர்கள். 80 அடி (24 மீட்டர்) உயரமான குலக்குறிக் கம்பங்களைச் செய்வதில் பெயர்பெற்ற இவர்கள் 60 அடி (18 மீட்டர்) நீளமான குடைபடகுகளைச் செய்து நாளாந்தத் தேவைகளுக்கும் சடங்குகளுக்கும் பயன்படுத்தியுள்ளனர்.[4]

ஆசுத்திரேலியாவின் வாழிடங்களை விளக்கும் கருதுகோள் ஒன்றின்படி, கடற்பயணம் செய்யக்கூடிய மிகப் பழைய கப்பல்கள் 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. "Maritime History, Archaeology and Travel Research Project". Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2015-08-02.
  2. John B. Hattendorf, editor in chief, Oxford Encyclopedia of Maritime History, (Oxford, 2007), volume 1, introduction.
  3. en:Sailing#History
  4. "Pacific Northwest Coastal Indians website". Archived from the original on 2017-08-23. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்சார்_வரலாறு&oldid=3706773" இலிருந்து மீள்விக்கப்பட்டது