கடித உறை என்பது ஒரு பொதி செய்யும் பொருள் ஆகும். இது தாள் அல்லது அட்டை போன்ற தட்டையான பொருள்களால், வேறு தட்டையான பொருள்களை உள்ளடக்கக் கூடியவாறு உருவாக்கப்படுகின்றது. இவற்றுள் கடிதம், வாழ்த்து அட்டை மற்றும் இது போன்றவற்றை வைத்து மூடி அனுப்புவது வழக்கம். வழமையான கடித உறைகள், சாய்சதுரம், குறுங்கைச் சிலுவை, பட்டம் ஆகிய வடிவங்களில் வெட்டப்பட்ட தாள்களிலிருந்து செய்யப்படுகின்றன. மேற்படி வடிவத் தாள்களை உரிய முறையில் மடித்து வேண்டிய விளிம்புகளைச் சேர்த்து ஒட்டும்போது செவ்வக வடிவிலான கடித உறைகள் கிடைக்கின்றன.

பலவகைக் கடித உறைகள்

1876 ஆம் ஆண்டில் இர்வின் மார்ட்டின் என்பார் "எழுதுபொருள் விற்பனையாளர் கையேடு ஒன்றை வெளியிட்டார். இவர் நியூ யார்க்கில் இருந்த சாமுவேல் ரெயினர் அண்ட் கம்பனி என்னும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரே முதன் முதலில் கடித உறைகளுக்கான வணிக அளவுகளை உருவாக்கியவர். இந்த அளவுகளுக்கு அவர் 0 தொடக்கம் 12 வரை எண்ணிட்டு இருந்தார்.

மேலோட்டம்

தொகு
 
அமெரிக்கசு கலகனின் சாளரக் கடித உறைக்கான காப்புரிமை வரைபடம்.

முன் குறிப்பிட்ட வடிவங்களில் வெட்டப்பட்ட தாள்களைப் பயன்படுத்திக் கடித உறைகளை உருவாக்கும்போது கடைசியாக மடித்து ஒட்டுவதற்காக விடப்படும் மடிப்பு நீளப் பக்கத்தில் அல்லது அகலப் பக்கத்தில் இருக்கலாம். இவ்வாறு இரண்டு வகையாகவும் செய்யப்படும் உறைகள் வெவ்வேறு தேவைகளுக்கு வசதியாக அமைகின்றன. உள்ளடக்க வேண்டிய பொருளை வைத்துக் கடைசி மடிப்பை மடித்து அது பிற மடிப்புக்களுடன் பொருந்தும் இடத்தில் பிசின் கொண்டு ஒட்டுவது வழக்கம். சில வேளைகளில் கடைசி மடிப்பை ஒட்டாமல், உட்புறமாகச் செருகி மூடுவதும் உண்டு. இவ்வாறு ஒட்டாமல் அனுப்பப்படும் அஞ்சல்களைக் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும். வாழ்த்து அட்டைகள், அச்சிட்ட அறிவித்தல்கள் முதலியவற்றை இவ்வாறு மூடாமல் அனுப்புவது உண்டு.

"சாளரக் கடித உறை" என்னும் ஒருவகைக் கடித உறையில் அதன் முன் புறத்தில் செவ்வக வடிவத்தில் ஒரு பகுதி வெட்டப்பட்டு இருக்கும். உள்ளே வைக்கப்படும் கடிதத்தில் அழுதப்பட்டிருக்கும் பெறுனரின் முகவரியை இதனூடாகப் பார்ப்பதற்காகவே இந்த ஒழுங்கு. இதன் மூலம், அனுப்புபவர் பெறுனரின் முகவரியை மீண்டும் உறையின் மீது எழுதுவதைத் தவிர்க்கலாம். பெருமளவில் கடிதங்களை அனுப்பும் வங்கிகள் போன்ற நிறுவனங்கள் இவ்வாற உறைகளைப் பயன்படுத்துகின்றன. உள்ளிருக்கும் கடிதங்களைப் பாதுகாப்பதற்காக, வெட்டப்பட்ட பகுதியை மூடி ஒளிபுகும் அல்லது ஒளி கசியவிடும் தாளை ஒட்டுவது வழக்கம். அமெரிக்கசு எஃப் கலகன் என்பார் முதலில் 1901 ஆம் ஆண்டில் இவ்வுறையை வடிவமைத்து, அடுத்த ஆண்டில் இதற்கான காப்புரிமையைப் பெற்றார். 1905ல் ஐரோப்பாவில் இது போன்ற இன்னொரு முறை கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கடித உறையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், சூடான எண்ணெயை ஊறச் செய்து அப் பகுதியூடாக உள்ளே எழுதப்பட்ட முகவரி தெரியும் அளவுக்கு ஒளி கசியக்கூடியதாக ஆக்குவர்.

கடித உறையின் உறுப்புகள்

தொகு
 
கடித உறை ஒன்றின் உறுப்புக்களைக் காட்டும் படம்.

கடித உறையொன்றில் இரண்டு பக்கங்கள் உள்ளன. பொருத்துக்கள் எதுவும் இல்லாத பக்கம் முன்பக்கம் என்றும், பொருத்துக்களுடன் கூடிய பக்கம் பின் பக்கம் எனவும் கூறப்படும்.

கடித உறை செய்யப்படும் போதும், பின்னர் அதனை மூடி ஒட்டும்போதும் மடிக்கப்படும் பகுதிகள் மூடிகள் (flaps) எனப்படும். பொதுவான கடித உறைகளில் மூன்று விதமான மூடிகள் காணப்படுகின்றன. இவை கீழ் மூடி, பக்க மூடி, மேல் மூடி என்பனவாகும். ஒரு உறையில் மேல் மூடி கீழ் மூடி என்பன தலா ஒவ்வொன்று இருக்கும். பக்க மூடிகள் இரண்டு இருக்கும். கீழ் மூடியும் பக்க மூடிகளும் உற்பத்தியின்போதே மடித்து ஒட்டப்பட்டிருக்கும். மேல் மூடி திறந்து இருக்கும். உறையைப் பயன்படுத்துபவர்கள் வேண்டியவற்றை உள்ளே வைத்தபின் மடித்து ஒட்டுவார்கள்.

மூடிகள் மடிக்கப்படும் இடம் மடிப்புகள் எனப்படுகின்றன. ஒவ்வொரு மூடிக்கும் ஒரு மடிப்பு இருக்கும். மூடியின் பெயருக்கு ஏற்றாற்போல் மடிப்புக்களும் மேல் மடிப்பு, கீழ் மடிப்பு, பக்க மடிப்பு எனப்படுகின்றன. ஏதாவது இரண்டு மூடிகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி ஒட்டப்பட்டிருக்கும் இடம் பொருத்து ஆகும்.

மேல் மடிப்புக்கும், கீழ் மூடியின் மேல் விளிம்புக்கும் இடைப்பட்ட பகுதி கழுத்து எனப்படும். கழுத்துப் பகுதியோடு பொருந்திவரும் பக்க மூடிகளின் பகுதி தோள் என்று அழைக்கப்படுகின்றது.

கடித உறை வகைகள்

தொகு
 
கடித உறைகளின் சில வகைகளை இங்கே காணலாம். படத்தில் உறைகளின் பின்புறம் காட்டப்பட்டுள்ளது.

கடித உறைகள் எந்த அளவிலும் எவ்வடிவிலும் செய்யப்படலாம். எனினும், பொதுவாக விற்பனைக்கு இருக்கும் உறைகள் குறிப்பிட்ட சில பாணிகளிலும் அவ்வப் பாணிகளுக்கு உரிய தரப்படுத்திய அளவுகளிலும் காணப்படுகின்றன. பொதுப் பயன்பாட்டுக்கு உரிய கடித உறைகள் அவற்றின் மூடிகளின் வடிவம், பொருத்துக்களின் வகை என்பவற்றைப் பொறுத்து ஆறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:

  1. பரோனியல் வகை: இது ஏறத்தாள சதுர வடிவமானது. கூரான மூடிகளையும் மூலைவிட்டப் பொருத்துக்களையும் கொண்டது.
  2. வணிக வகை: செவ்வக வடிவமானது. நீளப்பக்கம் திறந்த வணிகப்பாணி மூடியுடன் கூடியது. மூலைவிட்டப் பொருத்துக்களைக் கொண்டது.
  3. விபரப்பட்டியல் வகை: பொதுவாக அகலப்பக்கத்தில், பணப்பை வகையிலான திறந்த மூடியுடன் அமைந்தது. நடுப் பொருத்துக் கொண்டது.
  4. சதுர வகை: பெரிய செங்கோண வடிவ மூடியும், பக்கப் பொருத்துக்களும் கொண்டது.
  5. ஏ-பாணி வகை: நீளப் பக்கத்தில் திறந்த மூடி கொண்டது. பொதுவாகப் பெரிய மூடியும், பக்கப் பொருத்தும் உடையது.
  6. கையேடு வகை: நீளப் பக்கம் திறந்த மூடியுடையது. மூடி செங்கோண அமைப்பில் சிறிதாக இருக்கும். பக்கப் பொருத்துக்கள் கொண்டவை.

அஞ்சலகத் தேவைகள்

தொகு

பன்னாட்டு அஞ்சல் தரவிதிகளின்படி ஒரு கடிதம் அனுப்புவதற்கான உறை குறைந்தது 90 x 140 சமீ அள்வு இருக்கவேண்டும். அஞ்சலட்டை, வான்தாள்கடிதங்கள் என்பவற்றின் நீளம் அவற்றின் அகலத்தை 2 இன் வர்க்கமூலத்தால் பெருக்கிவரும் அளவுக்குச் சமமாக இருக்க வேண்டும். இத் தேவைகள் அஞ்சல்களைத் தரம் பிரிப்பதை இலகுவாக்குவதற்காக ஏற்பட்டவை. இதே விதிகள், கடித உறைகளில், முகவரி, அஞ்சல்தலைகள், தரம்பிரிக்கும் பொறிகள் இடும் குறிகள் என்பவற்றுக்கான இடங்களையும் ஒதுக்கியுள்ளது. அஞ்சல் குறிகளைப் பயன்படுத்துன் நாடுகள் சிலவற்றில், இந்த அஞ்சல் குறிகள் எல்லாக் கடித உறைகளிலும் ஒரே இடத்தில் எழுதப்படுவதை உறுதி செய்வதற்காக கடித உறைகளில் அவற்றை எழுதுவதற்கு உரிய கோடுகள் அல்லது பெட்டிகளை அச்சிட்டு விற்பனை செய்கிறார்கள். ஆசுத்திரேலியாவின் அஞ்சல்துறை, அஞ்சல் குறிகளை எழுதுவதற்காக உறைகளின் கீழ் வலதுபக்க மூலையில், செம்மஞ்சள் நிறத்தில் நான்கு பெட்டிகளை அச்சிடுமாறு ஊக்குவிக்கிறது. இது எழுத்துக்களை அடையாளம் காணும் மென்பொருட்களைப் பயன்படுத்தித் தரம்பிரிப்பதற்கு இலகுவாக உள்ளது.

பன்னாட்டுத் தர அளவுகள்

தொகு

பன்னாட்டுத் தரம் ஐ.எசு.ஓ 269, 'ஐ.எசு.ஓ 216 குறிப்பிடும் தாள்களின் தர அளவுகளுடன் பயன்படுத்துவதற்காக உறைகளின் பல்வேறு தர அளவுகளை வரையறுக்கின்றது.

வடிவம் அளவு (மிமீ) பொருந்தும் உள்ளடக்க வடிவம்
டி.எல் 110 × 220 1/3 ஏ4
சி7/சி6 81 x 162 1/3 ஏ5
சி6 114 × 162 ஏ6 (அல்லது ஏ4 பாதியாக இரு தடவை மடிக்கப்பட்டது)
சி6/சி5 114 × 229 1/3 ஏ4
சி5 162 × 229 ஏ5 (அல்லது ஏ4 பாதியாக ஒரு தடவை மடிக்கப்பட்டது)
சி4 229 × 324 ஏ4
சி3 324 × 458 ஏ3
பி6 125 × 176 சி6
பி5 176 × 250 சி5
பி4 250 × 353 சி4
ஈ3 280 × 400 பி4
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடித_உறை&oldid=3206422" இலிருந்து மீள்விக்கப்பட்டது