கடைவீடு
கடைவீடு (Shophouse) என்பது, தென்கிழக்காசிய நகரங்களில் பொதுவாகக் காணப்படும் நாட்டார் கட்டிடக்கலை சார்ந்த ஒரு கட்டிடவகை ஆகும். கடைவீடுகள் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று மாடிகளைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. நிலத்தளத்தில் வணிகச் செயற்பாடுகளுக்கான பகுதியும், இவற்றுக்கு மேல், வசிப்பதற்கான இடவசதியும் இருக்கும்.[1][2] பெரும்பாலான தென்கிழக்காசிய நகரங்களின் வரலாற்றுப் பகுதிகளின் சிறப்பியல்பாக இந்த கலப்புப் பயன்பாட்டுக் கட்டிட வடிவம் விளங்குகின்றது.[3]
வடிவமைப்பும் அம்சங்களும்
தொகுபயன்பாடு
தொகுகடைவீடுகளின் கீழ்த்தளத்தில் அமையும் கடைகள் சாலை ஓரமாக அமையும் வளைவணிக்கோ (arcade) அல்லது ஐந்து அடி அகலம் கொண்ட நடை பாதைக்கோ திறந்திருக்கும். கடைகளுக்கு மேல் வீடுகள் இருக்கும். கட்டிடங்களின் பக்கச் சுவர்கள் பக்கத்துக் கட்டிடங்களுடன் ஒட்டியபடி காணப்படும். இதனால் கட்டிடங்கள் தொடர்ச்சியான வரிசையாக, அமைந்திருக்கும்.
இக்கட்டிடவகையின் கீழ்த்தளம் அதன் பயன்பாட்டுக்கு ஒத்தவகையில் ஒரு பகுதிப் பொது இடமாகச் செயற்படும். வழக்கமாகவும், வரலாற்று அடிப்படையிலும் இப்பகுதி ஒரு கடையாக இருந்துவந்த போதிலும், இது ஒரு உணவுச்சாலையாகவோ, சேவை வழங்கும் இடமாகவோ, குடிசைக் கைத்தொழிலுக்கான இடமாகவோ இருக்கக்கூடும். வசிப்பதற்கான பகுதி ஒன்று அல்லது இரண்டு குடும்பங்கள் வாழக்கூடியதாகவோ, அல்லது தனியாட்களான தொழிலாளர்கள் சேர்ந்து வாழும் இடமாகவோ இருக்கலாம். முற்காலத்தில் மேற்பகுதியில் அமைந்த வீடுகளையும், கீழுள்ள வணிகப் பகுதியையும் ஒரே குடும்பத்தினரே பயன்படுத்தி வந்தனர். ஆனாலும், இவ்விரு வேறு பகுதிகளையும் உறவினரல்லாத வேறுவேறு ஆட்கள் பயன்படுத்துவது உண்டு.
உயரம்
தொகுதொழில்நுட்பக் காரணங்களால், 19 ஆம் நூற்றாண்டையும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியையும் சேர்ந்த கடைவீடுகள் பொதுவாக ஒன்று தொடக்கம் மூன்று மாடிகளைக் கொண்டவையாகவே அமைந்திருந்தன. இரண்டு மாடிகளே கூடுதலாகக் காணப்பட்டன. மக்கள்தொகை நெருக்கம் கூடிய நகர மையப் பகுதிகளில் மூன்று மாடிக் கடைவீடுகள் கூடுதலாக இருந்தன. வலிதாக்கிய காங்கிறீட்டு போன்ற நவீன கட்டிடப்பொருட்களின் அறிமுகத்துடன், 20 ஆம் நூற்றாண்டின் முன்னரையின் பிற்பகுதியில், போருக்கு முந்திய கடைவீடுகளிற் பல நான்கு மாடிகளைக் கொண்டனவாகவும் கட்டப்பட்டன.
சாலை முகப்பு அகலம்
தொகுகடைவீடுகளின் முகப்பு ஒடுக்கமானது. ஆனால், இதன் ஆழம் மிகவும் கூடியதாக இருக்கக்கூடும். சில பின் சாலை வரை நீண்டிருப்பதும் உண்டு. முகப்பு ஒடுக்கமாக இருப்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஒரு காலத்தில் முகப்பு அகலத்தின் அடிப்படையில் வரி விதிக்கப்பட்டதால் முகப்பு அகலத்தைக் குறைவாக வைத்திருந்தனர் என்பது ஒரு கருத்து. கட்டிடத்தின் அகலம், கிடைக்கக்கூடிய மர வளையின் நீளத்தில் தங்கியிருந்ததால் அந்நீளமே கட்டிடத்தின் அகலத்தைத் தீர்மானித்தது என்பது இன்னொரு கருத்து. எல்லாக் கடைவீடுகளும் ஒடுக்கமானவை எனினும் அனைத்தும் ஒரேயளவு அகலம் கொண்டவை அல்ல. அகலத்தில் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன.
நடை வழிகள்
தொகுசாலையோரம் அமையும் மேலே மூடிய நடைவழிகள் கடைவீட்டு நிலப்பகுதியுள் அமைந்த, ஆனால், பொதுப் பயன்பாட்டுக்கானவை. இவை நடந்து செல்பவர்களுக்கு வெய்யில். மழை ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு வழங்குகின்றன. இந்த வழக்கம் மிகவும் பழைய காலத்திலிருந்தே தென்சீனப் பகுதிகளில் நடைமுறையில் இருந்தது. 1573ல் இரண்டாம் பிலிப்பு இதற்கான ஒரு சட்டத்தையும் இயற்றினார். பழங்கால மணிலாவிலும், நடை வழிகளுடன் கூடிய இரண்டு மாடி வீடுகள் கட்டப்பட்டன.[4] 1822 இல் இயற்றப்பட்ட சிங்கப்பூருக்கான ராபிள்சு சட்டவிதிகள் குறிப்பிட்ட பகுதிகளில் சாலையோரம் அமைந்த எல்லாக் கட்டிடங்களும் குறிப்பிட்ட அளவு அகலம் கொண்ட மூடிய நடைவழிகளைக் கொண்டிருக்க வேண்டும் என விதித்தது. இந்த நடைமுறை பிரித்தானிய மலாயாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியது. இவ்விதிகளின்படி 7 அடி "விறாந்தை வழியும்", 5 அடி "நடை வழியும்" கட்டாயமாக்கப்பட்டது.[5]
கடைவீட்டு வடிவத்தின் படிமலர்ச்சியிலும், அதன் பாதுகாப்பிலும் சட்டங்களின் பங்கு முக்கியமானது. கட்டிட உரிமையாளர்கள் தமது நிலத்தைக் கூடிய அளவு தனிப்பட்ட பயன்பாட்டுக்கு உட்படுத்தவே விரும்புகின்றனர். தற்காலத்திலும், கடைக்காரர்கள் தமது வணிகப் பொருட்களை நடை வழிகளிகளில் வைத்து அதைத் தடை செய்வதைத் தடுக்க உள்ளூராட்சிச் சபைகள் அவ்வப்போது நடவடிக்கைகளை எடுக்கவேண்டி உள்ளது.
தென்கிழக்காசியாவின் சில பகுதிகளில் காணப்படும் கடைவீடுகளில் நடை வழிகள் காணப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, பாங்காக் நகரில் சில பழைய கடைவீடுகள் மேலே மூடப்படாத நடை வழிகளைக் கொண்டுள்ளன. புதிதாகக் கட்டப்படுபவற்றில் இக்கட்டிடக்கூறு காணப்படுவதில்லை.
உள் முற்றங்கள்
தொகுசூரிய ஒளியையும், காற்றோட்டத்தையும் கட்டிடத்துக்குள் வர விடுவதற்காக அமைக்கப்படும் பல வகையான திறந்த முற்றங்கள் கடைவீடுகளில் முக்கியமான அம்சங்கள் ஆகும். இவை பின்புற முற்றங்களாகவோ, சிறிய காற்று வழிகளாகவோ, உள் முற்றங்களாகவோ அமையக்கூடும். அவற்றின் அளவைப் பொறுத்து, பூஞ்செடிகள் நட்டு அழகுபடுத்துவதற்கான இடங்களாகவோ, தோய்த்த துணிகள் உலர்த்துவதற்கான இடங்களாகவோ, சமையல் புகை வெளியேறுவதற்கான வழிகளாகவோ, வேறு பல வீட்டுச் செயற்பாடுகளுக்கான பகுதிகளாகவோ பயன்படுகின்றன.
முகப்பு
தொகுகடைவீட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவற்றை அழகூட்டப் பயன்படுத்திய நிறங்கள் கவர்ச்சி ஊட்டுபவையாக உள்ளன. பழைய கடைவீடுகள் பெரும்பாலும் சாந்து பூசப்பட்டு மங்கலான வெண்ணிறம் பூசப்பட்டிருந்தது. கடும் நீலம், காவி போன்றனவும் அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்தன. 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இளஞ் சிவப்பு, இள நீலம், இளம் மஞ்சள் போன்ற மென் நிறங்கள் மக்களால் விரும்பிப் பயன்படுத்தப்பட்டன. அண்மைக் காலத்தில் பல கடைவீடுகள், குறிப்பாகப் புதுப்பிக்கப்பட்ட கடைவீடுகள் கடுஞ் சிவப்பு, கறுப்பு, வெள்ளி நிறம், பொன் நிறம், ஊதா போன்ற கடும் நிறங்கள் தீட்டப்பட்டுக் காணப்படுகின்றன.
பழைய கடைவீடுகளின் முகப்பு அலங்காரம் மலாய், சீன, ஐரோப்பிய மரபுகளின் கூறுகளிலிருந்து பெறப்பட்டவையாகக் காணப்பட்டன.[6] ஐரோப்பிய புதிய செந்நெறி "அம்பு - முட்டை" அலங்காரப் பட்டி, அலங்கார அரைத் தூண்களில் அயனிய, கொரிந்தியத் தூண் போதிகைகள் போன்றவை அலங்காரக் கூறுகளாகப் பயன்பட்டன. செதுக்கப்பட்ட மரத்தட்டிகள், முகப்புப் பலகைகள், தட்டிகள், அலங்கார வெட்டு வேலைகள் போன்றவற்றுக்கான மரவேலை நுட்பங்கள் மலாய் கட்டிட மரபில் இருந்து பெறப்பட்டவை. இவற்றுடன் சீனத் தொன்மங்கள் சார்ந்த அலங்காரக் கூறுகளும் கடைவீடுகளில் பயன்பட்டன. கடைவீடுகளின் அலங்காரம் வீட்டு உரிமையாளர்களின் வசதியைப் பொறுத்தது. நகரத்துக் கடைவீடுகள் கூடிய அலங்கரங்களுடன் விளங்கிய அதேவேளை நாட்டுப்புறக் கடைவீடுகள் குறைந்த அலங்காரங்களைக் கொண்டவையாகக் காணப்பட்டன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Shophouse, nét riêng của Park Hill பரணிடப்பட்டது 2016-03-19 at the வந்தவழி இயந்திரம் Một shophouse thường có ít nhất hai tầng Trúc Linh, VnEconomy 14:59 - 22/7/2015 வார்ப்புரு:Vi
- ↑ Zhu, Jieming, Sim, Loo-Lee, Liu, Xuan, D., Place-Remaking under Property Rights Regimes: A Case Study of Niucheshui, Singapore, IURD Working Paper Series, Institute of Urban and Regional Development, UC Berkeley, 2006, p.13. Accessed 2012-3-30.
- ↑ Chua, Beng Huat, and Edwards, Norman, Public space: design, use, and management, National University of Singapore, Centre for Advanced Studies, Singapore University Press, 1992, p. 4-5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9971-69-164-7
- ↑ Mai-Lin Tjoa-Bonatz, "Shophouses in Colonial Penang", Journal of the Royal Asiatic Society, Volume LXXI Part 2, 1998, pp 122-136
- ↑ Lim, Jon S.H., "The Shophouse Rafflesia: An Outline of its Malaysian Pedigree and its Subsequent Diffusion in Asia", Journal of the Royal Asiatic Society, Volume LXVI Part 1, 1993, pp 47-66. ISSN 0126-7353
- ↑ "Malaysia: shophouses of Georgetown, where East meets West | Minor Sights". www.minorsights.com. பார்க்கப்பட்ட நாள் 2016-08-13.