கட்டளைக் கலித்துறை

கட்டளைக் கலித்துறை என்பது கலித்துறையின் வகைகளுள் ஒன்று. கட்டளைக் கலி என்பதற்கு எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி யாப்பு என்று பொருள். துறை என்பது பா இனத்தின் ஒரு வகைக்குரிய பெயர். காரைக்கால் அம்மையார் தான் இவ்வகையை முதலில் பயன்படுத்தினார் என்பர்.

எழுத்தெண்ணிப் பாடுகிற பொழுது ஒற்றெழுத்துகள் (புள்ளி வைத்த எழுத்துகள்) அனைத்தையும் விட்டுவிட்டு, உயிர் அல்லது உயிர்மெய் எழுத்துகளை மட்டும் எண்ணி எழுதுவது வழக்கம். ஒரு (செய்யுள்) அடி நேரசையில் தொடங்கினால் ஒற்று நீக்கி 16 எழுத்துகள் இருக்குமாறும், நிரையசை கொண்டு தொடங்கினால் ஒற்று நீக்கி 17 எழுத்துகள் இருக்குமாறும் பாடுவர். இதன்படி நான்கடிகள் உடைய ஒரு கலித்துறைச் செய்யுள் நேரசையில் தொடங்கினால் ஒரு செய்யுளில் மொத்தம் 64 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் அச்செய்யுளில் மொத்தம் 68 எழுத்துகளும் இருக்கும்.

ஒவ்வொரு அடியிலும் ஐந்து சீர்கள் இருக்கும். அவை செப்பலோசை கொண்டதாக இருக்கும். செப்பலோசை என்பது வெண்டளை கொண்ட சீர்ப்பிணைப்புகள். ஐந்து சீர்களில் இறுதியில் உள்ள சீர் 'விளங்காய்' வாய்பாடு கொண்டிருக்கும். ஏனைய நான்கில் 'விளங்காய்' வாய்பாட்டுச் சீர் வராது. மா, விளம், காய் வாய்பாட்டில் முடியும் சீர்கள் மட்டுமே வரும். பாடல் பொதுவாக 'ஏ' என்னும் எழுத்தில் முடிவது வழக்கம்.

காரைக்கால் அம்மையாரின் கட்டளைக் கலித்துறைப் பாடல்

தொகு

காரைக்கால் அம்மையார் தம் இரட்டைமணிமாலையில் 10 பாடல்களும், சேரநாட்டு அரசரும் கழற்றறிவார் என்று அழைக்கப்படுபவருமான சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்தந்தாதியில் உள்ள 100 பாடல்களும் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்துள்ளன. பொன்வண்ணத்தந்தாதியின் முதல் பாடல் இது.

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
வெண்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.

பாரதிதாசன் பாடல்களில் கட்டளைக் கலித்துறை

தொகு

திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்று இது.

தெள்ளு தமிழ்நடை சின்னஞ் சிறிய இரண்டடிகள்
அள்ளு தொறுஞ்சுவை உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
கொள்ளும் அறம்பொருள் இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற தால்பெற்ற தேயிந்த வையகமே.

மேற்கண்ட கட்டளைக் கலித்துறை பாடல் நேரசையில் அமையப் பெற்றதோடு புள்ளி எழுத்துகளை விட்டு நோக்க ஓரடியில் அமைந்த ஐந்து சீர்களில் 16 எழுத்துகள் அமைந்துள்ளதோடு ஈற்றுச்சீர் ஏகாரத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கண நூல்களில் வீரசோழியம் என்ற நூலும் யாப்பருங்கலக் காரிகையும் நவநீதப் பாட்டியலும் வரையறுத்த பாட்டியலும் அவற்றோடு அளவை விளக்கமும் கட்டளைக் கலித்துறையில் அமைந்த நூல்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டளைக்_கலித்துறை&oldid=3297458" இலிருந்து மீள்விக்கப்பட்டது