எழினி

(கண்ணன் எழினி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எழினி என்னும் பெயருடன் சங்ககாலத்தில் பல மன்னர்கள் வாழ்ந்துவந்தனர். இவர்களைப் பாடிய புலவர்களைக் கொண்டும், அந்த மன்னர்களைப் பற்றி அவர்கள் தரும் செய்திகளிலிருந்தும் இவர்கள் வெவ்வேறு மன்னர்கள் எனத் தெரிகிறது.

ஏழு வள்ளல்களில் ஒருவனாக அதியமானை ஒரு புலவர் காட்டுகிறார், அவனை அவர் ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதிகன் எனக் குறிப்பிடுகிறார்.[1]

இந்த அதியமானின் மகன் எழினியை மற்றொரு புலவர் அந்த ஏழு வள்ளல்களில் ஒருவன் என்கிறார்[2].

  • அதியமான் மரபினர் முதன் முதலாகத் தமிழ்நாட்டுக்குக் கரும்பைக் கொண்டுவந்து பயிரிட்டனர்[3].
  • எழினி என்னும் சொல் திரைச்சீலையைக் குறிக்கும் [4][5][6] எனவே எழினி என்னும் பெயர் குடிமக்களுக்குப் பாதுகாப்பு வழங்குபவன் எனப் பொருள்படும்.

பலர்

தொகு
  1. பொகுட்டெழினி (அதியமானின் மகன்)
  2. வாய்வாட் பொய்யா எழினி (அதியமானின் தகடூரைத் தாக்கிப் போர்க்களத்திலேயே மாண்டுபோனவன்)
  3. கொடும்பூண் எழினி (குதிரைமலை அரசன், கடையெழு வள்ளல்களில் ஒருவன்)
  4. பொலம்பூண் எழினி (தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனிடம் தோற்றோடியவன்)
  5. கல்லா எழினி (மத்தி அரசனால் பல் பிடுங்கப்பட்டவன்)
  6. கண்ணன் எழினி (தன் நாட்டைத் தாக்கிய பகைவரை ஓட்டியவன் என்று மாமூலனாரால் குறிப்பிடப்படுபவன்.
  7. எழினியாதன் (குமரி மாவட்டம் வாட்டாற்றுப் பகுதியில் வாழ்ந்த சங்ககால வள்ளல். மாங்குடி கிழார் என்னும் புலவர் இவனது வள்ளண்மையைப் பாராட்டிப் பாடியுள்ளார்.)

வரலாற்றுச் செய்தி

தொகு
  1. ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேற் கூவிளங்கண்ணி கொடும்பூண் எழினி[7].
  2. போர் வல் யானைப் பொலம்பூண் எழினி என்பவன் தலையாலங்கானப் போரில் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் தோற்றோடியவன்[8].
  3. பந்து புடைப்பு அன்ன பாய்பரிக் குதிரை, சில்பரிக் குதிரைப் பல்வேல் எழினி, கெடலருந் துப்பின் விடுதொழில் முடிமார், கனை எரி நடந்த கல் காய் கானத்து, மறவர்[9].
  4. முனை எழ முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின், மறம் மிகு தானை கண்ணன் எழினி[10].
  5. மத்தி என்பவன் வேந்தன் ஏவியதன் பேரில் தொலைவிலுள்ள நாட்டுக்குச் சென்று கல்லா எழினி என்பவனின் பல்லைப் பிடுங்கிக் கொண்டுவந்து தன் ஊர் வெண்மணிவாயில் கோட்டைக் கதவில் பதித்துக்கொண்டான்[11].
  6. வாய்வாட் பொய்யா எழினி என்று போற்றப்படும் இவன் நாட்டில் நல்லாட்சி நடத்திவந்தான். ஆடு மாடு மேய்ப்போர் அச்சமின்றிக் காட்டில் தங்கும் வகையில் இவன் குடிமக்களுக்குப் பாதுகாப்பு நல்கிவந்தான். காட்டில் தங்கும்போது விலங்குகள் தாக்காதவாறும், நாட்டிலுள்ள செல்வத்தைப் பகைவர் பறிக்காதவாறும் இவன் பாதுகாப்பு அளித்துவந்தான். இவன் அதியமானின் தகடூரைத் தாக்கியபோது போர்க்களத்திலேயே கொல்லப்பட்டான்[12].
  7. அதியமான் மகன் பொகுட்டு எழினிக்கு இரண்டு பகையாம். ஒன்று அவன் தோளை மகளிர் நோக்கம் தாக்குமாம். மற்றொன்று மற்றவர்களோடு சேர்ந்து மகிழ்ந்து உண்ட கையோடு தாக்கிவிடுவானோ என்று அவன் செல்லும் ஊர்களிலெல்லாம் அவனைப் பகைக் கண்ணோடு பார்ப்பார்களாம்[13].

ஔவையார் தன்னிடமிருந்த மாக்கிணை என்னும் பறையை முழக்கிக்கொண்டு, விடியல் பொழுதில் கொடும்பூண் எழினி வாயிலில் நின்று அவன் புகழைப் பாடினாராம். பகைவர் கோட்டைகளைக் கைப்பற்றி அவர் நாட்டில் கழுதை ஏர் பூட்டி உழுது வரகும் கொள்ளும் விதைத்தானாம். உடனே வெளிவந்த அவன் பாசிவேர் போல் கிழிந்திருந்த ஔவையின் ஆடைக்கு மாற்றாடையாக நுண்ணூல் கலிங்கம் தந்து விருந்து படைத்தானாம் [14]. உப்பு வண்டி மேட்டில் ஏறும்போதும் பள்ளத்தில் இறங்கும்மோதும் முன்னும் பின்னும் கவியாமல் இருப்பதற்காக வண்டியில் சேம-அச்சு என்று ஒரு மரத்தைக் கட்டித் தொங்கவிட்டிருப்பர். எழினி ஔவையைச் சேம-அச்சு போல் பேணிவந்தானாம்[15].

சான்று மேற்கோள்

தொகு
  1. இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படை 100-103
  2. பெருஞ்சித்திரனார் தம் தொகுப்பில் ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல் கொடும்பூண் எழினி என்கிறார்
  3. புறம் 396
  4. முல்லைப்பாட்டு 64
  5. மணிமேகலை 5,3
  6. சீவக சிந்தாமணி 716
  7. பெருஞ்சித்திரனார் – புறம் 158
  8. நக்கீரர்அகம் 36
  9. தாயங்ககண்ணனார் – அகம் 105
  10. மாமூலனார் அகம் 197
  11. மாமூலனார் அகம் 211
  12. அரிசில் கிழார் – புறம் 230
  13. ஔவையார் – புறம் 96
  14. ஔவையார் – புறம் 392
  15. ஔவையார் – புறம் 102
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழினி&oldid=2566228" இலிருந்து மீள்விக்கப்பட்டது