மாங்குடி மருதனார்

தமிழ் சங்க இலக்கிய புலவர்
(மாங்குடி கிழார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாங்குடி மருதனார் என்பவர் சங்ககால நல்லிசைப் புலவர்களில் ஒருவர். இவர் பத்துப்பாட்டு எனும் பெயரில் தொகுக்கப்பட்ட பத்து செய்யுள் நூல்களுள் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை இயற்றியவர். மதுரைக் காஞ்சியில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியுள்ளார்.

மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர்

தொகு

சங்ககாலப் புலவர்கள் மட்டும் மன்னர்களைப் பாடவில்லை. மன்னர்களும் புலவோரை மதித்துப் பாடினர். ”.....மாங்குடி மருதனைத் தலைமையாகக் கொண்ட நல்லிசைப் புலவர்கள் எனைப் பாடாமல் போவார்களாக......” எனும் வஞ்சினக் கூற்றாகிய மன்னனின் வரிகளே இதற்குச் சான்று பகர்கின்றன.

மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவன் தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். இவனும் ஒரு புலவன். இவன் தனது பாடலில் புலவர்கள் தன் அவையில் மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்டு பாடியதைக் குறிப்பிட்டுள்ளான். (புறநானூறு 72)

மாங்குடி மருதனார் தரும் வரலாற்றுச் செய்திகள்

தொகு
ஊர்
மாங்குடி என்னும் ஊர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ளது. சங்ககாலத்தில் இந்த மாங்குடியில் வாழ்ந்த புலவர் மாங்குடி கிழார். இவர் மாங்குடி மருதனார். என்றும் சில பாடல்களில் குறிப்பிடப்படுகிறார். சங்கப்பாடல் தொகுப்பில் இவரது பாடல்கள் 13 உள்ளன.
பாடல்கள்
அகநானூறு 89,
குறுந்தொகை 164, 173, 302,
நற்றிணை 120, 123,
புறநானூறு 24, 26, 313, 335, 372, 396
மதுரைக்காஞ்சி

இவர் தமது பாடலில் பல அரசர்களையும் குடிமக்களையும் பற்றிய செய்திகளைத் தந்துள்ளார்.

மதுரைக்காஞ்சி நூலில் கூறப்பட்டுள்ள செய்திகள்
மதுரை மாநகரின் கடைத்தெரு, அந்தணர், சமணர், பௌத்தர் முதலானோரின் பள்ளிகள், முதலானவற்றின் சிறப்பு
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் நெல்லூர் (திருநெல்வேலி), முதுவெள்ளிலை, தலையாலங்கானம், முதலான போர்க்களங்களில் வெற்ற வெற்றிகள்
உள்நாட்டில் கலகம் செய்த தென்பரதவரை அடக்கியது
இவனது முன்னோன் நிலந்தரு திருவின் நெடியோன் இருபெரு வேந்தர்களையும், வேளிரையும் ஒருசேர வென்றது,
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி புணர்கூட்டு என்னும் தமிழ்ச்சங்கம் வைத்திருந்தது
பொதியமலைக் குற்றாலத்துத் தட்சிணாமூர்த்தியை தென்னவன் பெயரிய துன்னருந் துப்பின் தொன்முது கடவுள் என் குறிப்பிடுவது
பெரும்பெயர் நன்னன் ஓணநன்னாள் எனக் கூறுகையில் திருமாலை நன்னன் எனக் குறிப்பிடுவது
பிறபாடல்களில் கூறப்பட்டுள்ள செய்திகள்
தொன்றுமுதிர் வேளிர் வாழ்ந்த கடலோரக் குன்றூர்த் தெய்வத்தின்மீது ஆணையிட்டுத் தலைவன் சத்தியம் செய்வது [1]
நான்மறை முதல்வரைக்கஃ கொண்டு வேள்வி செய்தது [2]
கோதை, குட்டுவன், எவ்வி, பழையன் மாறன், மானவிறல்வேள், வாட்டாற்று எழினியாதன், வாணன், கோசர், மழவர், பற்றிய குறிப்புகள்

அடிக்குறிப்பு

தொகு
  1. குறுந்தொகை 164
  2. புறநானூறு 26
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்குடி_மருதனார்&oldid=3439577" இலிருந்து மீள்விக்கப்பட்டது