கனகராயன் செட்டி
கனகராயன் செட்டி என்பவர், யாழ்ப்பாண அரசன், கூழங்கைச் சக்கரவர்த்தி எனப்படும் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தி காலத்தில் தமிழ்நாட்டின் செங்குன்றம் என்னும் ஊரில் இருந்து யாழ்ப்பாணத்தில் குடியேறியதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறும் ஒருவர்.[1] இவரை அரசன் தெல்லிப்பழை என்னும் ஊரிற் குடியேற்றியதாக வைபவமாலை கூறுகின்றது. இவரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டே 18 ஆம் நூற்றாண்டில் கடைசிப் பகுதியில் தண்டிகைக் கனகராயன் பள்ளு என்னும் சிற்றிலக்கியம் எழுதப்பட்டது.
குடியேற்றக் காலம்
தொகுகனகராயன் உள்ளிட்ட உயர்குடியினர் யாழ்ப்பாணம் வந்த காலம், அதற்கான காரணம் என்பன குறித்து இக்குடியேற்றம் பற்றி ஆராய்ந்த அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. வைபவமாலை இக்குடியேற்றத்தை முதலாம் ஆரியச் சக்கரவர்த்தியுடன் தொடர்புபடுத்தியிருந்தாலும், இதிலிருந்து தெளிவான காலக்கணிப்பைப் பெற முடியாதுள்ளது. வரலாற்று ஆய்வாளர் வ. குமாரசாமி இது 13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிகழ்ந்திருக்கும் என்கிறார். செ. இராசநாயகம், 14 ஆம் நூற்றாண்டின் மாலிக்கபூரின் படையெடுப்பினால் ஏற்பட்ட நிலைமைகளைத் தொடர்ந்தே இவ்வுயர்குடியினர் தமிழ்நாட்டை விட்டு யாழ்ப்பாணத்துக்குக் குடிபெயர்ந்ததாகக் கருதுகிறார்.
குறிப்புகள்
தொகு- ↑ மயில்வாகனப் புலவர், யாழ்ப்பாண வைபவமாலை (குல. சபாநாதன் பதிப்பு), இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 1995. பக். 28.