கனம் கிருஷ்ணையர்

கனம் கிருஷ்ணையர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தென்னிந்திய இசை அறிஞர் ஆவார்.[1]

ஆரம்ப வாழ்க்கை

தொகு

இவரது இயற்பெயர் கிருஷ்ணையர் என்பதாகும். தற்போது அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் தாலூக்காவில் அமைந்திருக்கும் திருக்குன்றம் என்ற ஊரிலே பிறந்தார். இவரது தந்தையார் பெயர் இராமசாமி ஐயர். கிருஷ்ணையருக்கு அண்ணன்மார்கள் நால்வர். அவர்களில் மூத்தவராகிய சுப்பராமையரும் கிருஷ்ணையரும் சங்கீதத்தில் சிறந்து விளங்கினர்.

இசைப்பயிற்சி

தொகு

கிருஷ்ணையர் முதலில் தனது தந்தையார் இராமசாமி ஐயரிடம் இசை பயிலத் தொடங்கினார். பின்னர் தஞ்சாவூர் சமஸ்தான சங்கீத வித்துவானாக இருந்த பச்சைமிரியன் ஆதிப்பையரிடத்திலும் இசை கற்றார். பின்னர் தஞ்சாவூர் சமஸ்தானத்திலேயே ஒரு சங்கீத வித்துவானாக இருந்து வந்தார்.

சவால்

தொகு

கிருஷ்ணையர் தஞ்சாவூர் சமஸ்தானத்தில் பணியாற்றும்போது பொப்பிலி ஸமஸ்தானத்தைச் சேர்ந்த கேசவையா என்னும் பிரபல சங்கீத வித்துவான் ஒருவர் தஞ்சைக்கு வந்தார். அவர் கன மார்க்கத்தில் மிகச் சிறந்த வன்மை பெற்றவர்.

இசையிலே கனம், நயம், தேசிகம் என மூன்று மார்க்கங்கள் உள்ளன. இவற்றுள் கன மார்க்கம் சற்றுக் கடினமானது. அதைப் பாடுவதற்கு நல்ல தேக பலமும் இடைவிடாத பயிற்சியும் தேவை.

பொப்பிலி ஸமஸ்தானத்தைச் சேர்ந்த சங்கீத வித்துவான் கேசவையா தஞ்சாவூர் அரசவையில் கன மார்க்கத்தில் பாடினார். கன மார்க்கத்தின் தன்மையை அரசரும் பிறரும் அறிந்து வித்துவான் கேசவையாவைப் பாராட்டினார்கள். தமிழ்நாட்டில் அக்காலத்தில் கனமார்க்கம் வழக்கத்தில் இல்லை. அதனால், ‘இந்த வித்துவானுடைய உதவியால் யாரேனும் கனமார்க்கத்தை பயிற்சி செய்துகொண்டால் நன்றாக இருக்குமே! நமது ஸமஸ்தானத்திற்கும் கௌரவமாக இருக்குமே!' என்று அரசர் எண்ணினார்.

ஸமஸ்தான வித்துவான்கள் கூடியிருந்த சபையில் தனது விருப்பத்தை அரசர் வெளியிட்டபோது மற்றவர்கள் முன்வராத நிலையில், அப்போது இளைஞராக இருந்த கிருஷ்ணையர் தான் பயிற்சி செய்வதாகக் கூறினார். கிருஷ்ணையர் பொப்பிலி கேசவையாவிடம் கனமார்க்கத்தின் இயல்புகளையும் அதனைச் சார்ந்த சக்கரதானத்தைப் பாடும் முறையையும் தெரிந்துகொண்டார். பின்னர் கபிஸ்தல மென்னும் ஊருக்குச் சென்று இராமபத்திர மூப்பனாரென்னும் செல்வருடைய ஆதரவில் பயிற்சி செய்யத் தொடங்கினார்.

அந்தப் பயிற்சி வரவர முதிர்ச்சி அடைந்தது. கடைசியில் தஞ்சை அரசர் முன்னிலையில் பொப்பிலி கேசவையாவே வியந்து பாராட்டும்படி பாடிக் காட்டினார். அது முதல் இவர் கனம் கிருஷ்ணையர் என்றே வழங்கப் பெற்றார்.

தொழில் வாழ்க்கை

தொகு

இதன் பின்னர் கனம் கிருஷ்ணையர் திருவிடைமருதூர் சமஸ்தானத்தில் சில காலம் அவை வித்துவானாக இருந்தார். அச்சமயத்தில் அங்கிருந்த மற்றொரு இசை வித்துவானாகிய ராமதாசரிடம் இசை பயில வந்த கோபாலகிருஷ்ண பாரதியார் கனம் கிருஷ்ணையரிடத்திலும் சில கீர்த்தனைகளை கற்றுக் கொண்டார்.

பின்னர் உடையார்பாளையம் ஸமஸ்தானாதிபதியாக அப்போதிருந்த கச்சிரங்கப்ப உடையாரால் அழைக்கப் பெற்று கனம் கிருஷ்ணையர் அந்த சமஸ்தானத்துக்குச் சென்றார். பின்னர் தமது வாழ்நாள் முழுவதும் உடையார்பாளையம் சமஸ்தான வித்துவானாகவே பணியாற்றினார். தமிழ் மொழியில் கீர்த்தனைகள் இயற்ற வல்லவரான கனம் கிருஷ்ணையர் பெரும்பாலும் முருகக் கடவுளின் பல்வேறு பெயர்களில் முத்திரை பதித்துள்ளார்.[2]

ஒவ்வொரு நேரத்தில் அவரது உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு அவர் இயற்றிய பல கீர்த்தனைகள் இன்று வரை வித்துவான்களால் பாடப்பட்டு வருகின்றன.

உசாத்துணை

தொகு
  • தமிழ்த்தாத்தா டாக்டர் உ. வே. சா. அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூல். டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூலகம், சென்னை -90.

மேற்கோள்கள்

தொகு
  1. மு. முருகேஷ் (22 ஆகஸ்ட் 2015). "தமிழ்த் தாத்தாவும் இசையும்". தி இந்து (தமிழ் நாளிதழ்). Archived from the original on 2018-02-10. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "GHANAM KRISHNA IYER (19th century)". carnatica.net (in ஆங்கிலம்). Archived from the original on 2016-09-11. பார்க்கப்பட்ட நாள் 2018-02-10.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனம்_கிருஷ்ணையர்&oldid=3928520" இலிருந்து மீள்விக்கப்பட்டது