கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய
கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய எனப்படுவது இலங்கையின் தென் மாகாணத்தில் காணப்படும் தாழ்நில மழைக்காடுகள் மூன்றின் தொகுப்பாகும். 2004 ஆம் ஆண்டு இத்தொகுப்பை உயிர்வள ஒதுக்கீட்டுப் பகுதியொன்றாக யுனெசுகோ அறிவித்தது.[1] இந்த கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய தொகுதி இலங்கையில் எஞ்சியுள்ள மழைக்காடுகளில் மிகப் பெரியதும் சிங்கராஜக் காட்டுக்கு அடுத்தபடியாக முக்கியம் பெறுவதும் ஆகும்.[2] இக்காட்டுப் பகுதியானது பூக்குந் தாவர இனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தெற்காசியாவிலேயே வளம் மிக்க காடுகளில் உள்ளடங்குகிறது.[3] இக்காட்டுத் தொகுதியானது காலி மாநகரிலிருந்து வடகிழக்காக கிட்டத்தட்ட 35 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. இதன் மற்றொரு எல்லைக்கு அருகாமையில் அக்குரசை நகரம் காணப்படுகிறது. இம்மழைக்காட்டுத் தொகுதியே இப்பகுதியில் ஒடும் கிங், நிள்வளா, பொல்வத்து ஓயா போன்ற ஆறுகளுக்கு நீரேந்துப் பகுதியாக இருக்கிறது. மேலும், இவ்வுயிர்வள ஒதுக்கீட்டுப் பகுதியில் இலங்கைக்குத் தனிச் சிறப்பான தாவரங்கள், விலங்குகள் போன்றன ஏராளமாகக் காணப்படுகின்றன.
கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய | |
---|---|
அமைவிடம் | தென் மாகாணம், இலங்கை |
அருகாமை நகரம் | காலி |
ஆள்கூறுகள் | 6°11′N 80°25′E / 6.183°N 80.417°E |
பரப்பளவு | 10,139 எக்டேயர் |
நிறுவப்பட்டது | 2004 |
நிருவாக அமைப்பு | வனப் பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை |
புவியியற் தன்மைகள்
தொகுஇவ்வுயிர்வள ஒதுக்கீட்டுப் பகுதியில் சமாந்தர மலைத்தொடர்களும் சமவெளிகளும் நிறையவே காணப்படுகின்றன. அவற்றின் உயர்ந்த பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 60 மீற்றர் முதல் 425 மீற்றர் வரை வேறுபடுகின்றன.[4] இப்பகுதியின் வருடாந்த சராசரி வெப்பநிலை 27.0°C ஆக இருக்கும் அதே வேளை ஆண்டின் எக்காலத்திலும் வெறுமனே 4°C-5°C வெப்பநிலை வித்தியாசத்திற்கு மேல் தோன்றுவதில்லை. இக்காடுகள் பெறும் வருடாந்த மழைவீழ்ச்சி 3,750 மிமீ ஆகும். கோண்டுவானாவில் இருந்ததாகக் கருதப்படும் மிகப் பழங்கால உயிரினங்கள் இக்காடுகளில் காணப்படுகின்றன. இக்காடுகளில் உள்ள சில தாவர, விலங்கினங்கள் இந்தோமலாய தாவர, விலங்கினங்களுடன் தொடர்பு பட்டனவாகக் காணப்படுகின்றன.
நீரியற் தன்மைகள்
தொகுஇக்காட்டுத் தொகுதியானது இப்பகுதியின் ஆறுகள், ஓடைகள் பலவற்றிற்கும் முக்கிய நீரேந்துப் பகுதியாகத் தொழிற்படுகிறது. இக்காட்டிலிருந்து மேற்காக ஓடும் கிங் ஆறு, கிழக்காக ஓடும் நிள்வளா ஆறு, தெற்காக ஓடும் பொல்வத்து ஓயா ஆறு போன்றன உற்பத்தியாகும் இடங்கள் இக்காடுகளினுள்ளேயே காணப்படுகின்றன.[4] கன்னெலிய காட்டிலிருந்து உற்பத்தியாகும் சிறிய ஓடைகளுள் கன்னெலி, நனிகித்த, உடுகம போன்றன அடங்குகின்றன. ஹொம தொல எனும் ஓடை நாக்கியாதெனிய காட்டிலிருந்து உற்பத்தியாகும் அதே வேளை கல்பந்தி தொல எனும் ஓடை தெதியகல காட்டிலிருந்து உற்பத்தியாகிறது.
தாவரங்கள்
தொகுகன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய காட்டுத் தொகுதியானது பூக்குந் தாவர இனங்கள் தொடர்பில் தனிச் சிறப்புக்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. இலங்கையின் தாழ்நில மழைக்காடுகளுக்குத் தனிச் சிறப்பான தாவரங்களுள் 17 வீதமானவை இக்காட்டுத் தொகுதியில் மாத்திரமே காணப்படுகின்றன.[3] இங்கு பதியப்பட்டுள்ள பலகைத் தாவர இனங்கள் 319 இல் 52 வீதமானவை தனிச் சிறப்பானவையாகும். இக்காட்டுத் தொகுதியின் தாவரவியற் தன்மைகள் இலங்கையின் தாழ்நில மழைக்காடுகளுக்கு உரியனவாகும்.[3][4] தூன-இருசிறகி-நாக மரத் தொகுதிகளிலான பூக்குந் தாவர சமுதாயங்கள் இக்காடுகளெங்கும் பொதுவாகக் காணப்படுகின்றன.
இக்காடுகளில் ஏராளமான மூலிகைத் தாவரங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் மஞ்சற்கொடி (சிங்களத்தில் வெனிவெல்கெட்ட), சீந்தில் முதலியன நிறையவே காணப்படுகின்றன.[4][5] இவை தவிர இன்னும் பல அரிய தாவர இனங்கள் இக்காட்டுப் பகுதியில் காணக் கிடைக்கின்றன.
விலங்குகள்
தொகுகன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய காட்டுத் தொகுதியிலும் அதனை அண்டிய சிறு காட்டுப் பகுதிகளிலும் 220 வகையான விலங்கினங்கள் வாழ்வதாகப் பதியப்பட்டுள்ளது.[3] அவற்றுள் 41 விலங்கினங்கள் தனிச் சிறப்பானவையாகும். இக்காட்டுத் தொகுதியில் 86 முலையூட்டி இனங்கள் வாழ்கின்றன. அவற்றுள் சுண்டெலியினங்கள், கொறிணிகள், ஊனுண்ணிகள் மற்றும் முதனிகள் பலவும் காணப்படுகின்றன.[4] இலங்கைக்குத் தனிச் சிறப்பான பறவையினங்கள் 26 இல் 20 இனங்கள் இக்காட்டுத் தொகுதியில் காணப்படுகின்றன.[4] அவற்றுள் இலங்கைக் காட்டுக்கோழி, செம்முகப் பூங்குயில் போன்றனவும் அடங்கும்.[5] கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய காட்டுத் தொகுயிலிருந்து ஊற்றெடுக்கும் ஆறுகளிலும் ஓடைகளிலும் இலங்கைக்குத் தனிச் சிறப்பான நன்னீர் மீன்களில் 20 சதவீதமானவை வாழ்கின்றன. இக்காடுகளில் வாழும் நச்சுப் பிராணிகளில் 36 வகையான பாம்பினங்கள் வாழ்கின்றன. அவற்றுள் 6 குடும்பங்களைச் சேர்ந்த 17 இனங்கள் இப்பகுதிக்குத் தனிச் சிறப்பானவையாகும். மேலும், இம்மழைக்காடுகளில் 23 பல்லியினங்கள் வாழ்வதாகப் பதியப்பட்டுள்ளது.
மனித நடமாட்டமும் பாதுகாப்பும்
தொகுஇக்காட்டுத் தொகுதியைச் சூழவுள்ள 78 கிராமங்களில் கிட்டத்தட்ட 10,000 மக்கள் வாழ்கின்றனர்.[6] கட்டுமரம் சாரா உற்பத்திகள், நெல் வேளாண்மை, தேயிலை, இறப்பர், கறுவாப் பெருந்தோட்டங்கள், விலங்கு வளர்ப்பு மற்றும் ஏனைய வகைப் பயிர்த் தொழில்களும் காடு சார் குடிசைக் கைத்தொழில்களும் இக்காடுகளைச் சுற்றி நிகழும் முதன்மையான பொருளாதார முயற்சிகளாகும். இக்காட்டுத் தொகுதியினுள்ளேயே நுகேகொட, ரஜகல, தெதியகல ஆகிய பௌத்தத் துறவு மடங்கள் காணப்படுகின்றன. 1988 ஆம் ஆண்டு தடை செய்யப்படும் வரையில் இக்காட்டுத் தொகுதியில் மரங்களைத் தறித்தல் சுதந்திரமாக நிகழ்ந்து வந்தது.[3] இதில் நன்மையான விடயம் யாதெனில், இங்கு காணப்படும் தாவரங்களினதும் விலங்குகளினதும் உயிர்ப்பல்வகைமை நல்ல முறையில் பேணப்படுவதாகும். சிங்கராஜக் காட்டுக்கும் கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய காட்டுத் தொகுதிக்கும் இடையில் இணைப்புக் காடொன்றை உருவாக்குவதன் மூலம் அவற்றுக்கிடையில் விலங்குகளின் சுதந்திர நடமாட்டத்துக்கு வழிவகுப்பது பற்றி ஆராயப்பட்டு வருகிறது.[7] இங்கு காணப்படும் இலங்கைக்குத் தனிச் சிறப்பான பறவையினங்கள் தற்போது மிக அரியனவாகிவிட்டன.[8] இங்குள்ள தாவர இனங்களில் 27 வகையானவை அழிவை எதிர்நோக்குவனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 45 வீதமானவை அரிய தாவரங்கள் என்னும் வகைப்படுத்தலில் அடங்குகின்றன.[3]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்
தொகு- ↑ "யுனெசுகோ 19 புதிய உயிர்வள ஒதுக்கீட்டுகளைப் பாதுகாக்கிறது". ens-newswire.com (சுற்றாடற் செய்திச் சேவை). 2004 நவம்பர் 2 இம் மூலத்தில் இருந்து 2008-07-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080719104125/http://www.ens-newswire.com/ens/nov2004/2004-11-02-04.asp. பார்த்த நாள்: 2009-06-09.
- ↑ டி லிவேரா, லங்கிகா (2007 செப்டெம்பர் 9, ஞாயிற்றுக்கிழமை). "இழந்த மழைக்காடுகளை மீளவளர்த்தல்". The Sunday Times (Sri Lanka). http://sundaytimes.lk/070909/Plus/plus0011.html. பார்த்த நாள்: 2009-06-09.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 பண்டாரதிலக்க, எச்.எம். (2003). "உயிர்வள ஒதுக்கீடாகத் திட்டமிடப்படும் கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய வனத் தொகுதியின் முகாமைத்துவத்தில் சமூகப் பங்களிப்பு" (PDF). இலங்கை தேசிய விஞ்ஞான அமைய சஞ்சிகை. தேசிய விஞ்ஞான அமையம். Archived from the original (PDF) on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2009-06-09.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 (சிங்கள மொழி) சேனாரத்ன, பி.எம். (2005). இலங்கைக் காடுகள் (1 ed.). சரசவி வெளியீட்டகம். pp. 107–112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-573-401-1.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ 5.0 5.1 "கன்னெலிய, தெதியகல, நாக்கியாதெனிய ஒதுக்கீட்டு வனங்கள்". globosapiens.net. globosapiens.net. பார்க்கப்பட்ட நாள் 2009-06-09.
{{cite web}}
:|first=
missing|last=
(help) - ↑ "கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய (KDN)". unesco.org. யுனெசுகோ. பார்க்கப்பட்ட நாள் 2009-06-09.
- ↑ "இலங்கையின் சிங்கராஜ மழைக்காட்டு வழி". rainforestrescue.org.au. மழைக்காட்டு மீட்பு. Archived from the original on 2009-09-15. பார்க்கப்பட்ட நாள் 2009-06-09.
- ↑ "BirdLife IBA Factsheet". birdlife.org. BirdLife International. 2009. Archived from the original on 2009-01-02. பார்க்கப்பட்ட நாள் 2009-06-09.