கமிக்காசே

(கமிக்காஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கமிக்காசே (Kamikaze (神風? [kamikaꜜze] (கேட்க); "இறைநிலை" அல்லது "சக்திக் காற்று"), அலுவக முறையாக Tokubetsu Kōgekitai (特別攻撃隊 "சிறப்புத் தாக்குதல் பிரிவு"?), சுருக்கமாக Tokkō Tai (特攻隊?), வினைச் சொல்லாக Tokkō (特攻 "சிறப்புத் தாக்குதல்"?) என்பது இரண்டாம் உலகப் போரின்போது பசிபிக் போர்க் கட்டம் நெருங்கிக் கொண்டிருந்தபோது நேச நாடுகளின் கடற்கலங்களுக்கு எதிராக சப்பானியப் பேரரசின் இராணுவ விமானிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஆகும். இது மரபுவழிப் போர் மூலம் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட அதிக திறனுடன் போர்க் கப்பல்களை அழிக்க வடிவமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது 3,860 கமிக்காசே விமானிகள் கொல்லப்பட்டதோடு, கிட்டத்தட்ட 19% கமிக்காசே தாக்குதல்கள் கப்பல்களை மோதின.[1]

11 மே 1945 அன்று "யு.எஸ்.எஸ் பங்கர் கில்" மீதான கமிக்காசே தாக்குதலுக்கு வானூர்தியைச் செலுத்திய விமானி

கமிக்காசே வானூர்தி அடிப்படையில் விமானியால் வழிநடத்தப்பட்ட வெடிக்கும் ஏவுகணைகளாகவும், நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட அல்லது வழக்கமான விமானத்திலிருந்து மாற்றப்பட்டும் இருந்தது. விமானிகள் எதிரியின் கப்பல்கள் மீது வெடிபொருள்,வெடிகுண்டுகள், நீர்மூழ்கிக் குண்டுகள், முழுவதும் நிரம்பிய எரிபொருள் கலன்கள் ஆகியவற்றை நிரப்பிய தங்கள் வானூர்தியை மோதி செயலிழக்க முயற்சித்தல் "உடல் தாக்குதல்" (体当たり; 体当り, taiatari) என்று அழைக்கப்பட்டது. வழக்கமான தாக்குதலைவிட துல்லியம் சிறப்பாகவிருந்ததுடன், ஆயுதங்களின் சுமை அளவும் வெடிப்பும் பெரிதாகவிருந்தது. கமிக்காசே வழக்கமான தாக்குதலாளிகளை முடக்குவதுடன் தாக்குதலின் குறிக்கோளை அடையவும் நீண்ட சேதத்தை விளைவிக்கவும் செய்தது. பெரும் எண்ணிக்கையில் நேச நாட்டுக் கப்பல்களை, குறிப்பாக விமானம் தாங்கி கப்பல்களை, முடக்குதல் அல்லது அழித்தலின் நோக்கததிற்கு விமானிகளினனும் வானூர்திகளினதும் தியாகம் நியாயமான காரணம் என சப்பானியப் பேரரசினால் கருதப்பட்டது.

சில மோசமான தோல்விகள் சப்பானுக்கு ஏற்பட்டதன் பின்னர் ஒக்டோபர் 1944 இல் இத்தாக்குதல்கள் ஆரம்பித்தன. காலாவதியான வானூர்திகள், அனுபவம் வாய்ந்த விமானிகள் இழப்பு ஆகியன வான்வழி ஆதிக்கத்தை சப்பான் இழந்தது. பேரியப் பொருளாதார ரீதியாக, நேச நாடுகளுக்கு ஈடான தொழில்துறை திறன் வேகமாகக் குறைதல், போர் திறனும் குறைதல் ஆகியவற்றால் சப்பான் அவதிக்குட்பட்டது. இப்பிரச்சனைகளால், சப்பானிய அரசாங்கம் சரணடைவதற்கு தயக்கத்தை வெளிக்காட்டியது. ஒட்டுமொத்தமாக இக்காரணிகள், சப்பானியத் தீவுகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த நேச நாட்டுப் படைகளுக்கு எதிராக கமிக்காசே தந்திரோபாயத்தைப் பயன்படுத்தின.

11 மே 1945 அன்று விமானி செய்சு யசுனொரி (மேலே உள்ள படம்) மூலம் கமிக்காசே தாக்குதலுக்குள்ளான "யு.எஸ்.எஸ் பங்கர் கில்". மொத்த 2,600 பேரில் 389 பேர் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போக, 264 பேர் காயமுற்றனர்.[2]

கமிக்காசே என்பது பொதுவான வான்வழித் தாக்குதலைக் குறிப்பதாயினும், இச் சொலின் பயன்பாடு பல தற்கொலைத் தாக்குதல்களைக் குறிக்கவும் பயன்பட்டது. சப்பானியப் படைகள் வான்வழி அற்ற சப்பானிய சிறப்புத் தாக்குதல் படைகளுக்காக நீர்மூழ்கிகள், மனித நீர்மூழ்கிக் குண்டுகள், வேகப் படகுகள், நீராடிகள் ஆகியவற்றின் தேவைகளுக்காகவும் கமிக்காசே திட்டமிடப்பட்டன அல்லது பயன்படுத்தப்பட்டன.

சப்பானிய படைக் கலாச்சாரத்தில் தோல்வி, பிடிபடுதல், அவமானப்படல் என்பவற்றைவிட பாரம்பரிய மரணம் என்பது ஆழமாக உள்வாங்கப்பட்டிருந்தது. சாமுராய் வாழ்விலும் புசிடோ (வீரனின் வழி) குறியீடுகளான; மரணம் வரை விசுவாசம், புகழ் ஆகியனவற்றை சப்பானியர்கள் உணர்ந்து கொண்டுள்ளபடி இது முக்கிய பாரம்பரியங்களில் ஒன்று ஆகும்.[3][4][5][6][7]

விளக்கமும் சொல்லிலக்கணமும்

தொகு

கமிக்காசே என்ற சப்பானியச் சொல் பொதுவாக "இறைநிலைக் காற்று" என மொழிபெயர்க்கப்படுகிறது ("கமி" [kami] எனும் சொல் கடவுள், சக்தி, இறைநிலை எனவும், "காசே" [kaze] எனும் சொல் காற்று எனவும் அர்த்தமாகும்). இச் சொல்லின் மூலம் 1274, 1281 களில் ஏற்பட்ட பாரிய சூறாவளிக் (கமிக்காசே சூறாவளி) குறித்தது. இச்சூறாவளி குப்லாய் கான் தலைமையின் கீழ் இடம்பெற்ற சப்பான் மீதான மங்கோலியப் படையெடுப்பை சிதறச் செய்தது.

உசாத்துணை

தொகு
  1. Zaloga, Steve. Kamikaze: Japanese Special Attack Weapons 1944–45. p. 12.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Bunker Hill CV-17, Fotographic History of the U.S Navy
  3. David Powers, "Japan: No Surrender in World War Two"
  4. John W. Dower, War Without Mercy: Race & Power in the Pacific War p1 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-394-50030-X
  5. John W. Dower, War Without Mercy: Race & Power in the Pacific War p216 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-394-50030-X
  6. Haruko Taya Cook and Theodore F. Cook, Japan At War: An Oral History p264 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56584-014-3
  7. Meirion and Susie Harries, Soldiers of the Sun: The Rise and Fall of the Imperial Japanese Army p 413 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-394-56935-0

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kamikaze
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமிக்காசே&oldid=3771195" இலிருந்து மீள்விக்கப்பட்டது