கம்பன் கழகம்
கம்பன் கழகம் என்னும் அமைப்பு கம்பன் எழுதிய இராமாயணத்தில் உள்ள இலக்கிய அழகையும் நுட்பத்தையும் தமிழர்களிடையே பரப்புகிறது. அந்நோக்கை அடைய இலக்கிய நிகழ்ச்சிகள், போட்டிகள் ஆகியவற்றை நடத்துகிறது.
வரலாற்றுப் பின்னணி
தொகு1937 ஆம் ஆண்டில் முதன்முறையாக, அன்றைய, சென்னை மாகாணத்தில் இராசகோபாலாச்சாரி தலைமையில் இந்திய தேசிய காங்கிரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. 1938 ஆம் ஆண்டில் அவ்வரசாங்கம் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது. அதனை எதிர்த்து தமிழறிஞர்களும் பெரியார் ஈ.வே.இரா. போன்ற சமூகச் செயற்பாட்டாளர்களும் போராடினர். அப்போராட்டத்தில் வடமொழி – வடபுலம் - வடவர் பண்பாட்டு ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்த்து “திராவிடர்நாடு திராவிடர்க்கே” என்னும் சிந்தனை மேலோங்கியது. அச்சிந்தனையின் ஒரு பகுதியாக, இராமாயணம் வடவர் பண்பாட்டை முன்மொழிகிறது எனக்கூறி, பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தினர் இராமாயணத்தை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்நிலையில் கம்பனது இலக்கிய ஆளுமையை தமிழர்களிடையே பரப்புவதற்காக காரைக்குடி சா. கணேசன் கம்பன் கழகம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.[1]
தொடக்கம்
தொகுசா. கணேசன் 1939 ஏப்ரல் 2, 3 ஆகிய நாள்களில் இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் தலைமையில் காரைக்குடியில் கம்பன் விழாவை நடத்தி, கம்பன் கழகத்தைத் தொடங்கினார்.
கம்பன், தான் இயற்றிய இராமகாதையை பங்குனி மாதம் அத்தத் திருநாளில் கவியரங்கேற்றினார் எனக்கூறும் தனிப்பாடல் ஒன்றைச் சான்றாகக் கொண்டு, கி.பி. 886 பிப்ரவரி 23 ஆம் நாளில்தான் அவ்வரங்கேற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும் என சா. கணேசன் கணித்தார். எனவே ஒவ்வோராண்டும் பங்குனி மாதம் அத்தத் திருநாளில் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பன் சமாதி கோயிலில் கம்பன் விழாவின் நிறைவு நாளும் அந்நாளுக்கு முந்தைய பங்குனி மகம், பூரம், உத்திரம் ஆகிய நாள்களில் காரைக்குடியில் கம்பன் விழா தொடக்க நாளும் தொடரும் நாள்களும் காரைக்குடி கம்பன் கழகத்தால் கொண்டாடப்படுகிறது.[2]
தொடர்ச்சி
தொகுசா. கணேசனால் 1939 ஆம் ஆண்டில் காரைக்குடியில் கம்பன் கழகம் தொடங்கப்பட்ட பின்னர், அக்கழகத்தின் நோக்கத்தைத் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் நிறைவேற்றுவதற்காக சென்னை, கோயமுத்தூர் (1972ஆம் ஆண்டில் கோவை இலக்குமி ஆலை அதிபர்களில் ஒருவரான கோவை குப்புசாமி சுந்தரம் என்பவரால் தொடங்கப்பட்டது. [3] திருநெல்வேலி, மதுரை ஆகிய ஊர்களில் கம்பன் கழகம் தொடங்கப்பட்டு , தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.
சான்றடைவு
தொகு- ↑ சிவம் சுகி., கம்பன் நேற்று – இன்று – நாளை, வானதி பதிப்பகம் சென்னை, ஐ.பதி. நவ 2006, பக். 20-23
- ↑ காரைக்குடி கம்பன் கழகப் பணிகள்
- ↑ தமிழ் மணி, தினமணி 2022 10 23 பக்.6