கரடித்தோல் தொப்பி

கரடித்தோல் தொப்பி (Bearskin) என்பது உரோமத்தால் ஆன உயரமான தொப்பி. இது சடங்குமுறைப் படைத்துறைச் சீருடையின் ஒரு பகுதியாகப் பயன்படுகிறது. மரபு வழியாக இது எறிகுண்டு வீரர்களின் தலையணியாகப் பயன்பட்டது. இன்றும், பல்வேறு நாடுகளின் படைகளைச் சேர்ந்த எறிகுண்டு வீரர்களும் காவற்படை வீரர்களும் இத்தொப்பியை அணிகின்றனர்.

இத்தாலியப் படையில் முதலாவது சார்டினியாப் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவர் கரடித்தோல் தொப்பியுடன் காணப்படுகிறார்.
கரடித்தோல் தொப்பி அணிந்த பிரெஞ்சு படைத்துறை அதிகாரி ஒருவர்.

தோற்றம்

தொகு

17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த எறிகுண்டு வீரர்கள், உரோமத்தால் மூடப்பட்ட துணித் தொப்பிகளை அணிந்தனர். பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை சிலகாலம் இப்பழக்கம் இல்லாதிருந்தது. அக்காலத்தில், பிரித்தானியா, பிரான்சு, எசுப்பானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த படையினர் துணியாலான உச்சியைக் கொண்ட உயரமான உரோமத் தொப்பிகளை அணியத் தொடங்கியிருந்தனர். இத் தொப்பிகள் சில வேளைகளில் முன்புறம், வேலைப்பாடுகளுடன் கூடிய தகடுகளைக் கொண்டிருந்தன. படை வீரர்கள் உயரமாகத் தெரிவதற்காகவும், அணிவகுப்பிலும், போர்க்களத்திலும், வீரர்கள் கவர்ச்சியான தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள் என்பதற்காகவுமே இவ்வாறான தொப்பிகளை அணிந்தனர்.

கரடித்தோல் தொப்பிகள் விலை கூடியவை என்பதாலும், பணிக்காலங்களில் இவற்றைப் பேணுவது கடினமாக இருந்ததாலும், 19 ஆம் நூற்றாண்டில் இதைச் சடங்குமுறைப் பணிகளை மேற்கொண்டிருந்த காவலர்களுக்கும், பிற அணிகளுக்குமே பயன்படுத்தினர். எனினும், கிரீமியப் போரின்போது பிரித்தானியக் காலாட்படையினரும், வேறு சில படைப் பிரிவினரும் கரடித்தோல் தொப்பியை அணிந்தனர். 1902 ஆம் ஆண்டில் காக்கியாலான படைத்துறைச் சீருடை அறிமுகமாகும் வரை இது நீடித்தது.

பெல்சியப் படை

தொகு

1914 ஆம் ஆண்டுவரை பெல்சியப் படைத்துறையின் எறிகுண்டுப் படையணியின் அணிவகுப்புக்கான சீருடையில் கரடித்தோல் தொப்பி இடம்பெற்று இருந்தது. இப்போது, சில சடங்குமுறைத் தேவைகளுக்கு மட்டும் இத்தொப்பியை மீண்டும் அறிமுகம் செய்துள்ளனர்.

பிரித்தானியப் படை

தொகு

வாட்டர்லூ சண்டையைத் தொடர்ந்து, எறிகுண்டுக் காவல் படையினர் கரடித்தோல் தொப்பிகளை அணிய அனுமதிக்கப்பட்டனர். இந்த மரபைப் பின்னர் மற்ற இரண்டு காவல் படைப் பிரிவுகளுக்கும் விரிவாக்கினர். அரச இசுக்காட் டிரகூன் காவலரும், ஃபுசிலியர் படைப்பிரிவைச் சேர்ந்த அலுவலர்களும் கரடித்தோல் தொப்பியைத் தமது சடங்குமுறைச் சீருடையின் ஒரு பகுதியாக அணிந்தனர்.

 
கரடித்தோல் தொப்பி அணிந்து அணிவகுத்துச் செல்லும் ஐரியக் காவலர், 12 சூன் 2005.

பிரித்தானியக் காலாட்படைக் காவலர் அணியும் கரடித்தோல் தொப்பி 18 அங்குல உயரமும், 1.5 இறாத்தல் நிறையும் கொண்டது. இது கனடா நாட்டு கறுப்புக் கரடியின் உரோமத்தால் செய்யப்படுகிறது. பெண் மண்ணிறக் கரடிகளின் உரோமம் தடிப்பாகவும், அடர்த்தியாகவும் இருப்பதால், உயர் அலுவலர்களின் தொப்பிகளைக் கனடா நாட்டு மண்ணிறக் கரடிகளின் உரோமத்தால் செய்து பின்னர் கறுப்புச் சாயம் பூசுகின்றனர். ஒரு முழுக் கரடியின் தோல் ஒரு தொப்பிக்கு மட்டுமே பயன்படுகின்றது. பிரித்தானியப் படைத்துறையினர் தமக்குத் தேவையான கரடித்தோல் தொப்பிகளைப் பிரித்தானியத் தொப்பி உற்பத்தி நிறுவனம் ஒன்றிடமிருந்து பெறுகின்றனர். இத் தேவைக்காக இந்நிறுவனம், ஒரு ஆண்டுக்கு 50 தொடக்கம் 100 வரையான கரடித் தோல்களை ஒன்றுக்கு £650 வீதம் கொடுத்து வாங்குகின்றனர். முறையாகப் பேணினால் இத் தொப்பிகள் பல பத்தாண்டுகள் வரை பயன்படக்கூடியவை. தற்போது பயன்பாட்டில் உள்ள சில தொப்பிகள் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை கொண்டவை.

எதிர்ப்பு

தொகு

1888 ஆம் அண்டு ஆகத்து 3 ஆம் தேதியிட்ட "த நியூ யார்க் டைம்சு", கரடித்தோல்களின் பற்றாக்குறை காரணமாகக் கரடித்தோல் தொப்பிகளின் பயன்பாடு படிப்படியாகக் கைவிடப்படலாம் எனச் செய்தி வெளியிட்டது. இக் கட்டுரையில் கரடித்தோல் தொப்பி ஒன்றுக்கு £7–5 வரை (2007 ஆம் ஆண்டுக் கணக்குப்படி இது £600) செலவாவதாகவும், இது, படை அணிவகுப்புத் தேவைகளுக்காவன்றி வேறு பயன் இல்லாத ஒன்று என்றும், பழைய வழக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு இவ்வளவு செலவு ஆகிறது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

1997 ஆம் ஆண்டில் ஒழுக்கம் சார்ந்த காரணங்களுக்காகக் கூடிய விரைவில் கரத்தோல் தொப்பியின் பயன்பாட்டைக் கைவிடப்போவதாகப் பாதுகாப்புக் கொள்வனவுக்கான பிரித்தானிய அமைச்சர் கில்பர்ட் பிரபு அறிவித்தார். ஆனால், இத்தொப்பிகளுக்கான மாற்றாக எதுவும் இருக்கவில்லை.

2005 ஆம் ஆண்டில், பாதுகாப்பு அமைச்சு, செயற்கை உரோமத்தால் செய்த தொப்பிகளைச் சோதனைக்காகப் பயன்படுத்துவதற்குத் தொடங்கியது. ஏற்கெனவே படைத்துறையில் பயன்பட்டு வந்த நீரெலி தொப்பிகளுக்கும், சிறுத்தைத் தோல்களுக்கும் பதிலாகச் செயற்கைப் பொருட்கள் பயன்பட்டு வருகின்றன. 2005 மார்ச்சு மாதத்தில், பாராளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான கிறிசு முல்லின், கரடித்தோல் தொப்பிகளை உடனடியாகத் தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இத்தொப்பிகளுக்கு எந்தவிதமான படைத்துறை முக்கியத்துவமும் கிடையாது என்றும், இதன் பயன்பாடு கொடூரத்தன்மை கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

விலங்குகளை நெறிமுறைப்படி நடத்துவதற்கான மக்கள் என்னும் விலங்குகளின் உரிமைகளுக்கான குழுவும் இத் தொப்பிகள் தொடர்ந்தும் பயன்பட்டு வருவதற்குத் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. 2006 ஆம் ஆண்டில் புனித பால் பேராலயத்துக்கு அருகில் உள்ள புனித பால் ஹில் பகுதியில், இந்த அமைப்பச் சேர்ந்த 70 பேர் ஆடை எதுவும் இன்றி ஆர்ப்பாட்டம் செய்தனர். உண்மையான கரடித்தோலுக்குப் பதிலாகச் செயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துமாறு இவர்கள் கோரி வருகின்றனர்.

கரடிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கான, கனடா அரசாங்கத்தின் திட்டப்படி, தாயக இனுயிட் வேட்டைக்காரர்கள் ஆயிரக் கணக்கான கரடிகளைக் கொல்வதாகவும், இதில் 100 கரடிகளின் தோல்களை மட்டுமே தாம் பயன்படுத்துவதாகவும் படைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

 
டேனிய அரச மெப்பாதுகாவலர்படையைச் சேர்ந்த வீரர்கள்.
 
ஐக்கிய அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த பான்ட் குழுவினர். தலைமை வகிக்கும் வீரர் கரடித்தோல் தொப்பி அணிந்துள்ளார்.

கரடித்தோல் தொப்பியை இன்னும் பயன்படுத்தும் நாடுகள்

தொகு
பிரித்தானியப் படைத்துறை

1 பிரிவு ஆளுனரின் காவலர் - கானெக்ட்டிக்கட் தேசிய காவலர் - சடங்குமுறைப் பிரிவு

குறிப்புகள்

தொகு
  1. World Uniforms in Colour volume 1—The European Nations: Rinaldo D'Ami ISBN 85059 031 0
  2. Uniform of the Royal 22e Régiment photo
  3. GGFG – About
  4. The Canadian Guards – photos

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரடித்தோல்_தொப்பி&oldid=3765946" இலிருந்து மீள்விக்கப்பட்டது