கருங்குயில்

கருங்குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கு. கிளாமோசசு
இருசொற் பெயரீடு
குக்குலசு கிளாமோசசு
(உலாதம், 1801)

கருங்குயில் (குக்குலசு கிளாமோசசு) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு சிற்றினமாகும். இந்த சிற்றினம் சகாரா கீழமை ஆப்பிரிக்காவில் பரவலாகக் காணப்படுகின்றது. இச்சிற்றினத்தின் கீழ் இரண்டு துணையினங்கள் உள்ளன. இந்த குயில் மிகவும் பரந்த வரம்பைக் கொண்டுள்ளது. எனவே இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1]

விளக்கம்

தொகு

கருங்குயில் நடுத்தர அளவிலான குயிலாகும். ஆண் பெண் இனங்கள் ஒரே மாதிரியானவை. இறகுகள் கிளையினங்களில் மாறுபடும். குக்குலசு கிளாமோசசு கிளாமோசசின் மேல் பகுதி கருப்பு நிறத்தில் பச்சை, பலகைச்-சாம்பல் இறக்கைகளுடன் கருப்பு முனை வெள்ளை வாலுடன் இருக்கும். சில சமயங்களில் வெளிப்புற இறகுகள் பட்டை அல்லது வெள்ளை புள்ளி அல்லது பழுப்பாகக் காணப்படும். குக்குலசு கிளாமோசசு கபோனென்சிசு பெரும்பாலும் கருப்பு நிறத்தில் சிவப்பு தொண்டை மற்றும் வயிற்றுப் பகுதியில் கருப்பு மற்றும் வெள்ளை பட்டையுடன் காணப்படும்.[2]

பரவலும் வாழிடமும்

தொகு

குக்குலசு கிளாமோசசு கபோனென்சிசு என்ற துணையினம் மத்திய ஆபிரிக்காவில் வசிக்கின்றது. அதேசமயம் தென்னாப்பிரிக்காவின் துணையினமான குக்குலசு கிளாமோசசு கிளாமோசசு வலசைப் போகக்கூடியது. செப்டம்பர் முதல் திசம்பர் வரை தென்னாப்பிரிக்காவிற்கு இனப்பெருக்கம் செய்ய வலசைச் செல்லும். மார்ச் மாதத்தில் மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவிற்கு நகரும். இந்த இனத்தின் வரம்பு லைபீரியாவிலிருந்து கிழக்கில் எத்தியோப்பியா மற்றும் அங்கோலா மற்றும் தென்னாப்பிரிக்கா வரை பரவியுள்ளது. இது ஒரு வனப்பகுதி பறவை. ஆனால் அடர்ந்த காடுகளின் உட்புறத்தைத் தவிர்க்கிறது. அகாசியா வனப்பகுதி, முட்செடிகள், ஆற்றங்கரை வனப்பகுதி, தோட்டங்கள் மற்றும் கிராமங்களைச் சுற்றியுள்ள மரங்களை விரும்புகிறது.[2]

சூழலியல்

தொகு

கருங்குயில் முக்கியமாகக் கம்பளிப்பூச்சிகளை உண்கிறது. பறந்து செல்லும் பூச்சிகள், வண்டுகள், வெட்டுக்கிளிகள் உள்ளிட்ட பிற பூச்சிகள், கறையான்கள், எறும்புகள் மற்றும் பறவைகளின் முட்டைகளையும் சாப்பிடுகிறது.[3]

கருங்குயில் குஞ்சு ஒட்டுண்ணி வகையாகும். இதன் முக்கிய புரவலன்களாக புதர் கீச்சான்கள், குறிப்பாக வெப்பமண்டல பூபோ மற்றும் கருஞ்சிவப்பு-மார்பக கீச்சான் உள்ளது. [2] பூபூவின் கூட்டில் முட்டையிடும் போது, முட்டைகள் சுமார் பதினான்கு நாட்களுக்குப் பிறகு, பூபூவின் முட்டைகளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு குஞ்சு பொரிக்கும். பொதுவாகக் குஞ்சு பொரித்த முப்பது மணி நேரத்திற்குள் கருங்குயில் குஞ்சுகள் மற்ற முட்டைகளைக் கூட்டைவிட்டு வெளியேற்றிவிடும். பின்னர், சுமார் பதினாறு நாட்களில் கூட்டை விட்டு வெளியேறுகிறது. வளர்ப்பு பெற்றோர்கள் மூன்று வாரங்களுக்கு இக்குஞ்சுகளுக்கு உணவளிக்கும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 BirdLife International (2017). "Cuculus clamosus". IUCN Red List of Threatened Species 2017: e.T22683866A111671934. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22683866A111671934.en. https://www.iucnredlist.org/species/22683866/111671934. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. 2.0 2.1 2.2 Payne, Robert B.; Sorensen, Michael D. (2005). The Cuckoos. OUP Oxford. pp. 481–485. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-850213-5.
  3. 3.0 3.1 Erritzøe, Johannes; Mann, Clive F.; Brammer, Frederik; Fuller, Richard A. (2012). Cuckoos of the World. Bloomsbury Publishing. p. 449. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-4267-7.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்குயில்&oldid=3488792" இலிருந்து மீள்விக்கப்பட்டது