கருடன் சம்பா (நெல்)

கருடன் சம்பா அல்லது காடைகுழந்தான் பாரம்பரிய நெல் வகையைச் சார்ந்த இது, அனைத்து தரப்பினரும் உணவுக்காகத் தேர்ந்தெடுக்கும் முதன்மையான நெல் வகையாகும். கருடன் (கழுகு) கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை நிறம் காணப்படுவதால் இந்நேல்லுக்கு அப்பெயர் பெற்றதாக கருதப்படுகிறது. வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய இந்த நெல் இரகம், நான்கடி உயரம் வரை வளரக்கூடியது.[1]

கருடன் சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
140 - 150 நாட்கள்
மகசூல்
சுமார் 3500 கிலோ ஒரு ஏக்கர்
தோற்றம்
1911 ஆம் ஆண்டு
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா[1]

பயன்பாடு

தொகு

இந்த கருடன் சம்பா சாப்பாட்டிற்கும், மற்றும் பலகாரங்களுக்கும் ஏற்ற இரகமாகக் கருதப்படுகிறது. பண்டைய காலத்தில் மணப்பாறை முறுக்கு இந்த அரிசியைக் கொண்டு செய்யப்பட்டுப் பிரபலமடைந்ததாகத் தகவல் உள்ளது. விரைவாக வேகக்கூடிய இரகமாக உள்ள இந்த பாரம்பரிய அரிசி வகை, இல்லத்தரசிகளிடம் முதன்மை பெற்றது. சிகப்பு நிறமுடைய இந்நெல், வெள்ளை அரிசி கொண்ட நடுத்தரமான இரகமாகும். மத்தியக் காலப் பயிரான கருடன் சம்பா, 140 நாட்களுக்குள் அறுவடைக்கு வரக்கூடியது. நடவும், நேரடி விதைப்பும், மற்றும் ஒற்றை நாற்று நடவு முறைக்கும் ஏற்றது.[1]

உருவாக்கம்

தொகு

பாரம்பரிய நெல்லில் வரலாற்று சிறப்புமிக்க இந்த நெல் இரகம், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம் முடிகொண்டான் கிராமத்தில் “குழந்தை வேல் உடையார்” என்ற பண்ணையார், 1911 ஆம் ஆண்டில் கருடன் சம்பாவை உருவாக்கி, அந்த நெல்லைக் கொண்டு ஒற்றை நெல் சாகுபடி முறையில் பயிர் செய்துள்ளார். அக்காலகட்டத்தில் அவர் இம்முறையில் நடவு செய்வதை அறிந்து கேலி செய்தவர்கள், பின்பு பயிரைப் பார்த்து மிரண்டுப் போன அவர்கள் பின்னாளில் அம்முறையை பின்பற்றி வேளாண்மை செய்ததாக சொல்லப்படுகிறது.[1]

ஒவ்வொரு நாற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தூர் வந்துள்ளது. சாலையில் போவோர், வருவோரெல்லாம் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். பண்ணைத் தொழிலாளர்கள் திருஷ்டி பொம்மை ஒன்றையும் வைத்திருக்கிறார்கள். 32 சென்டில் ஒவ்வொரு நாற்றாக, முக்கால் அடி சாலை சாலையாக நடவு செய்து ஒரு ஏக்கருக்கு 4,012 கிலோ மகசூல் எடுத்துள்ளார்.[1]

ஒற்றை நெல் சாகுபடி

தொகு

ஒற்றை நெல் சாகுபடி முறையில், மொத்தம் 32 சென்டில் (1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்) ஒவ்வொரு நாற்றாக, ஒன்பது அங்குல இடைவெளியில் சாலைச் சாலையாக நடவு செய்து ஒரு ஏக்கருக்கு 4,012 கிலோ மகசூல் எடுத்துள்ளார். தற்போது இந்த நெல் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டு, மகசூல் அதிகபட்சம் 3,500 கிலோவரையில் இரசாயன உரம், மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல், விவசாயிகள் மகசூல் எடுத்துவருகிறார்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "மிரளவைத்த கருடன் சம்பா". தி இந்து (தமிழ்) - டிசம்பர் 27, 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-12-23.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருடன்_சம்பா_(நெல்)&oldid=3722511" இலிருந்து மீள்விக்கப்பட்டது