கலிக்கோ நெசவுப்பொருள் அருங்காட்சியகம்
கலிக்கோ நெசவுப்பொருள் அருங்காட்சியகம் இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களில் ஒன்றான குஜராத்தின் தலை நகரமான அகமதாபாத்தில் அமைந்துள்ளது. சாராபாய் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் இந்த அருங்காட்சியகம் அகமதாபாத்தில் உள்ள, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களுள் ஒன்றாகும்.
வரலாறு
தொகுஇந்த அருங்காட்சியகம் தொழிலதிபரான அம்பாலால் சாராபாய், அவரது உடன் பிறந்தாளான கிரு சாராபாய் ஆகியோரால் 1949 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. அகமதாபாத் அக்காலத்தில் நெசவுத் தொழிலுக்குப் புகழ் பெற்றிருந்தது. கலிக்கோ நெசவுப்பொருள் அருங்காட்சியகம் முதலில், அகமதாபாத்தின் நெசவுத் தொழிலில் முக்கிய இடம் வகித்த கலிக்கோ நெசவாலை வளாகத்தில் அமைந்திருந்தது. க்கட்சிப் பொருட்களில் எண்ணிக்கை அதிகரித்தபோது அருங்காட்சியகம், சாகிபவுக் பகுதியில் இருந்த சாராபாய் இல்லத்துக்கு மாற்றப்பட்டது.
காட்சிப் பொருட்கள்
தொகுஇங்குள்ள காட்சிப் பொருட்களில், 15 முதல் 19 ஆம் நூற்றாண்டுவரை முகலாய அரசர்களும், மாகாண ஆட்சியாளரும் அணிந்த துணி வகைகள் அடங்குகின்றன. இவற்றுடன், பல பகுதிகளையும் சேர்ந்த பூத்தையல் வேலைப்பாடுகளைக் கொண்ட துணி வகைகளும், கட்டிச் சாயம் தோய்த்த துணிவகைகளும், சமயம் சார்ந்த துணிவகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காட்சிக் கூடங்களில், சடங்குகள் சார்ந்த கலைப் பொருட்கள் சிற்பங்கள், சிற்றோவியங்கள், தென்னிந்திய உலோககச் சிலைகள் போன்ற காட்சிப் பொருட்களும் உள்ளன. இவைதவிர நெசவுத் தொழில் நுட்பங்களுக்கான காட்சிக் கூடமும், ஒரு நூலகமும் இங்கே உள்ளன.