தொல்லியல் அருங்காட்சியகம், லோத்தல்
தொல்லியல் அருங்காட்சியகம், லோத்தல் இந்தியாவின் குசராத் மாநிலத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ளது. இது, அரப்பா கால நகரமான லோத்தலில் 1952 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த அரும்பொருட்களைக் காட்சிக்கு வைப்பதற்காக 1976 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[1]
மூன்று காட்சிக்கூடங்களைக் கொண்ட இந்த அருங்காட்சியகத்தின் முன்பகுதிக் காட்சிக்கூடத்தில், அரப்பா காலத்து லோத்தல் நகரின் அமைப்பை ஊக அடிப்படையில் மீளமைத்து வரையப்பட்ட படத்துடன், இக் களம் பற்றிய விளக்கங்களும், நிலப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இடப் பக்கத்துக் காட்சிக்கூடத்தில், அகழ்வாய்வுகளின்போது கிடைத்த அணிகலன்களுக்கு உரிய மணிகள், களிமண் அணிகலன்கள், முத்திரைகளின் நேர்ப்படிகள், உயிரின ஓடுகள் யானைத் தந்தம் போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்கள், உலோகப் பொருட்கள், மட்பாண்டங்கள் என்பன உள்ளன. வலப் பக்கத்துக் காட்சிக்கூடத்தில் வேட்டைக்குரிய பொருட்கள், சடங்கு சார்ந்த பொருட்கள், மனிதர் மற்றும் விலங்கு உருவங்கள், நிறைப்படிகள், நிறந்தீட்டிய மட்பாண்டங்கள், அளவுத்திட்டத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட லோத்தல் களத்தின் மாதிரியுரு என்பன காட்சிக்கு உள்ளன. அகழ்வாய்வுகளின் போது கிடைத்த 5000 க்கு மேற்பட்ட பொருட்களில் 800 பொருட்கள் வரை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் ஒரு சிறிய உசாத்துணை நூலகமும், வெளியீடுகள் விற்பனைப் பகுதியும் உண்டு.