களவியல் உரையாசிரியர்

களவியல் உரையாசிரியர்: உரைகளில் களவியல் உரையே தொன்மையானது. அவ்வுரையை ‘முதல்உரை’ எனலாம். அது, பல ஆண்டுகள் வாய்மொழியாக வழங்கி வந்து, ஒன்பது தலைமுறைகளுக்குப் பின்னர், எழுத்து வடிவம் பெற்றது. ஆதலின், அவ்வுரையை ‘முதல் உரை’ என்று கூறுவது மிகவும் பொருந்தும்.

முதல் உரையாகிய அவ்வுரை பல உரைகளைத் தோற்றுவிப்பதாய் ஆயிற்று. தனக்குப் பின்னால் தோன்றிய உரைகளுக்கு வழிகாட்டியாயிற்று.பாயிரக்கருத்து உரைத்தல், சொற்பொருள் விரித்தல், தமிழ் மரபு பேணுதல், இலக்கணத் குறிப்புத் தருதல், பழைய பாடல்களை மேற்கோள் காட்டுதல், வினா விடை முறையில் பொருளை விளக்குதல், செய்யுள் நடையில் உரைநடை எழுதுதல், எந்தக் கருத்தையும் தெள்ளத்தெளியக் கூறுதல் போன்ற பல வழிகளில், பிற்கால உரை ஆசிரியர்களுக்கு அவ்வுரை வழிகாட்டியது.

தோற்றம்

தொகு

இலக்கண, இலக்கிய நூல்களை முதல்நூல், வழிநூல், சார்புநூல் என்று ஒன்றோரு ஒன்றைத் தொடர்புபடுத்திக் காட்டுவது வழக்கம்.

    தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார்
    பல்காய னார்பகுத்துப் பன்னினார் - நல்யாப்புக்
    கற்றார் மதிக்கும் கலைக்காக்கை பாடினியார்
    சொற்றார்தம் நூலுள் தொகுத்து

என்ற செய்யுளில் பண்டைய நூல்களைத் தொடர்புபடுத்திக் காட்டுகின்றது. இவ்வாறே உரைநூல்களையும், உரையாசிரியர்களையும் தொடர்புபடுத்தலாம்.

களவியல் உரையாசிரியரின் சிறப்பு

தொகு

களவியல் உரையாசிரியரின் களவியல் உரையின் பாயிரக் கருத்து, தமிழ் மரபு, கருத்துத்தெளிவு, இலக்கணக்குறிப்பு ஆகியவற்றை ஒவ்வொரு வகையிலும், ஒவ்வொரு உரையாசிரியர் பின்பற்றினர்.

  • இளம்பூரணர் பின்பற்றி, தமக்கென ஒரு தனி வகையான நடையை அமைத்துக்கொண்டார்.
  • திருக்கோவையாருக்கு உரை எழுதிய பேராசிரியர் களவியல் உரையின் செய்யுள் போன்ற உடைநடை, வினாவிடை முறை, சொற்பொருள் விளக்கம், நயங்கூறல், அகத்திணைக் கருத்தை விளக்கல் ஆகியவற்றைப் பின்பற்றினார்.
  • தஞ்சைவாணன் கோவைக்கு உரை எழுதிய சொக்கப்ப நாவலர் களவியல் உரையின் உரைநடையைக் கையாண்டார்; அகத்திணைக் கருத்தை மேற்கொண்டார்; நயங்கூறும் முறையைப் பின்பற்றினார்.

பரம்பரை

தொகு

களவியல் உரையாசிரியர், இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், பரிமேலழகர் ஆகிய உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒரு பரம்பரையை உண்டாக்கி அதற்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்லுகின்றனர்.நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களுக்கு உரை எழுதியவர்கள், திருக்குறள் உரையாசிரியர்கள், சைவ சித்தாந்த சாத்திரங்களுக்கு உரை கண்டவர்கள் ஆகியவர்களுக்குள்ளும் பரம்பரைத் தொடர்பு காணலாம். யாப்பு நூல், பாட்டியல் நூல் ஆகியவற்றின் உரையாசிரியர்களுள்ளும் பரம்பரைத் தொடர்பு உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=களவியல்_உரையாசிரியர்&oldid=1398285" இலிருந்து மீள்விக்கப்பட்டது