கான்பூர் சதி வழக்கு

(கான்பூர் போல்ஷிவிக் சதி வழக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரித்தானியா இந்தியப் பேரரசால், இளமைக் காலத்தில் இருந்த இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் மீதும், பொதுவுடைமைவாதிகள் மீதும் 1923-1924ஆம் வருடங்களில் புனையப்பட்ட வழக்கு கான்பூர் சதி வழக்கு அல்லது கான்பூர் போல்ஸ்விக் சதி வழக்கு என்று பொதுவாக அழைக்கப்படுகிறது .

வழக்கின் பின்னணி

தொகு

1923ஆம் ஆண்டு மே மாதத்தில் முசாபர் அகமது, சௌகத் உஸ்மானி, குலாம் உசேன் ஆகிய மூவரும் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். சென்னையில் காவல்துறையினர் சிங்காரவேலரைக் கைது செய்ய வந்தபோது, அவர் டைபாய்டு காய்ச்சலில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பரிசோதித்த ஆங்கிலேய அரசாங்க பெரிய மருத்துவர் சிங்காரவேலரை கான்பூர் கொண்டு செல்ல அனுமதி தரவில்லை.

ஆங்கிலேய அரசாங்கம் ஏற்கெனவே ஒரு திட்டம் வைத்திருந்தது. பெஷாவர் நகரில் ‘மாஸ்கோ வழக்கு’ என்ற கம்யூனிஸ்ட் சதி வழக்கு நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே அந்த வழக்கில் சௌகத் உஸ்மானியையும், முசாபர் அகமதுவையும் சேர்க்க அது திட்டமிட்டிருந்தது. ஆனால் வடமேற்கு எல்லை மாகாணத்தில் பிரதம கமிஷனராக இருந்த சர் ஜான் மாபே என்பவர் இதற்குச் சம்மதிக்க மறுத்தார். இந்த இரண்டு பேரையும் வழக்கில் சேர்த்தால் மீண்டும் துவக்கத்திலிருந்து விசாரணை நடைபெற வேண்டும், எனவே அதைச் செய்ய முடியாது என மறுத்துவிட்டார்.

வழக்கு தொடரப்பட்டவர்கள்

தொகு

இந்தியாவில் கம்யூனிசக் கருத்துக்கள் பரவுவது தனது ஆதிக்கத்திற்கு ஆபத்தானது என்று ஆங்கிலேய அரசாங்கம் கருதியதால் அது அந்த இயக்கத்தை அழிப்பதற்காக கம்யூனிஸ்ட் அகிலத்தோடு நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டுள்ள இந்தியர்கள் அனைவரையும், சிறையிலடைக்க ஒரு குற்றப் பத்திரிகையைத் தயாரித்தது. அந்த சதிவழக்குதான் கான்பூர் சதி வழக்கு. முதலில் 105 பேரை கைது செய்ய வேண்டுமென்று அது திட்டமிட்டது. பின்னர் அது படிப்படியாகக் குறைக்கப்பட்டு இறுதியில் பின்வரும் எட்டு பேர் மீது வழக்கு தொடர முடிவு செய்தது.

  1. எம். என். ராய்
  2. மௌலா பக்ஷ் என்ற சௌகத் உஸ்மானி
  3. முசாபர் அகமது
  4. குலாம் ஹூசேன்
  5. நளினி குப்தா
  6. ராம் சரண்லால் சர்மா
  7. எஸ். ஏ. டாங்கே
  8. சிங்காரவேலர்

இந்த எட்டுப் பேர் மீதும் 1898ஆம் வருடத்திய குற்றப் பிரிவு சட்டத்தின் 196 பிரிவின்கீழ் கீழ்க்காண்போர் மீது மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கைத் தொடரும் படி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் 1923ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி உத்தரவிட்டார்.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தல்

தொகு

இந்த எட்டுப் பேரில் என்.என்.ராய் ஜெர்மனியில் இருந்ததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. அதேபோல் ராம் சரண்லால் சர்மா பிரெஞ்சுப் பிரதேசமான பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுந்திருந்ததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. ஏற்கெனவே சொன்னதுபோல் சிங்காரவேலரை மருத்துவ காரணத்தால் கைது செய்ய முடியவில்லை. குலாம் உசேன் என்பவர் பெஷாவர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷாபி என்பவருக்கு எதிராக சாட்சியம் தருவதாக வாக்களித்து அப்ரூவராக மாறினார். எனவே அவர் கைது செய்யப்படவில்லை. எனவே இறுதியாக சௌகத் உஸ்மானி, முசாபர் அகமது, நளினி குப்தா, எஸ்.ஏ.டாங்கே ஆகிய நால்வர் மீது மட்டும் குற்றப் பத்திரிகை சாட்டப்பட்டது.

வழக்கறிஞர்கள்

தொகு

மணிலால் டாக்டர் என்ற வழக்கறிஞர் முசாபர் அகமதுவுக்காகவும், சௌகத் உஸ்மானிக்காகவும் வாதாடினார். கபில்தேவ் மாளவியா என்ற வழக்கறிஞர் டாங்கேவிற்காகவும், நளினி குப்தாவுக்காகவும் வாதாடினார். முதலில் லண்டனில் இருந்த கம்யூனிஸ்ட் பாதுகாப்புக்குழு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக பிரபல வழக்கறிஞர் முகமது அலி ஜின்னா வைத்தான் கேட்டுக் கொண்டது. ஆனால் அவர் 30 ஆயிரம் ரூபாய் வேண்டுமென்று கேட்டார். ஏனென்றால் அரசாங்க வழக்கறிஞருக்கு அரசாங்கம் தினமும் 1000 ரூபாய் கொடுத்தது. ஜின்னாவுக்கு கம்யூனிஸ்ட் பாதுகாப்புக்குழு அவ்வளவு பணம் தர இயலாத நிலையில் அவர் ஆஜராகவில்லை.

வழக்கின் போக்கு

தொகு

கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்கு 1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் தேதி துவங்கியது. பின்னர் அது செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது.இந்த வழக்கு நடைபெற்று வரும் போது பார்வையாளர் இருப்பிடத்தில் எஸ்.வி.காட்டே மற்றும் அப்துல் ஹலீம் என்ற பெயரிலான இரண்டு கம்யூனிஸ்ட்டுகளும் சத்ய பக்தா என்ற ஒருவரும் அமர்ந்திருந்தனர். காட்டேயும் , ஹலீமும் முசாபர் அகமது மற்றும் டாங்கேவுக்காக உதவிசெய்ய வந்திருந்தனர். அவர்களை விசாரித்த சத்ய பக்தா அவர்கள் இருவருக்கும் கான்பூரில் தங்க இடமில்லை என்று புரிந்து அவர்களை தன் வீட்டிலேயே தங்கும்படி கேட்டுக் கொண்டார். அவர்களும் அதையேற்று வழக்கு முடியும் வரை அவர் வீட்டில் தங்கினர்.

தீர்ப்பின் விபரங்கள்

தொகு

பல மாதங்கள் வழக்கு விசாரணை நடந்து இறுதியில் 1924ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. முசாபருக்கும், மற்ற மூவருக்கும் நான்காண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. முசாபர் அகமது ரேபரேலி மாவட்டச் சிறைக்கும், சௌகத் உஸ்மானி பரேய்லி சிறைக்கும், டாங்கே சீத்தாபூர் மாவட்டச் சிறைக்கும், நளினி குப்தா கோரக்பூர் சிறைக்கும் அனுப்பப்பட்டனர்.

வழக்கின் முக்கியத்துவம்

தொகு

பெசாவர் சதிவழக்கில் அந்த வழக்கு விபரம் வெளியே தெரியக்கூடாது என்று மூடி மறைத்த அரசாங்கம், இந்த வழக்கை பெரிதுபடுத்தி மக்கள் மத்தியில் பயத்தை உண்டுபண்ணுவதற்காக பத்திரிகையாளர்களை நீதிமன்றத்திற்குள் நுழையவும், செய்தி சேகரிக்கவும் அனுமதித்தது. இந்தச் சதிவழக்கின் ஆரம்ப விசாரணை நாளன்று உளவுத்துறை இயக்குநர் கர்னல் சிசில்கேயி என்பவர் செய்தியாளர்களை அழைத்து இந்த வழக்கு முழுவதையும் ‘கான்பூர் போல்ஷ்விக் சதிவழக்கு’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடும் படி கூறினார். இதனால் இந்தியா முழுவதும் போல்ஷ்விக் என்ற வார்த்தை பிரபலமாயிற்று."[1] இந்த வழக்கில் தாக்கல்செய்யப்பட்ட ஆவணங்களின் சுருக்கம் பத்திரிகையில் வெளியானது.

மேற்கோள்கள்

தொகு
  1. Ralhan, O.P. (ed.) Encyclopedia of Political Parties New Delhi: Anmol Publications p.336
"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்பூர்_சதி_வழக்கு&oldid=3498497" இலிருந்து மீள்விக்கப்பட்டது