முசாபர் அகமது

இந்திய-வங்காள அரசியல்வாதி, பத்திரிக்கையாளர் மற்றும் பொதுவுடைமைவாதி

முசாபர் அகமது(5 ஆகத்து 1889 – 18 திசெம்பர் 1973 , மக்களால் காகா பாபு என்று அழைக்கப்பட்டவர்) , ஒரு இந்திய-வங்காள அரசியல்வாதி, பத்திரிக்கையாளர் மற்றும் பொதுவுடைமைவாதி ஆவார் .[1]

முசாபர் அகமது
মুজাফ্‌ফর আহমদ
தாய்மொழியில் பெயர்মুজাফ্‌ফর আহমদ
பிறப்பு(1889-08-05)5 ஆகத்து 1889
நவகாளி மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு18 திசம்பர் 1973(1973-12-18) (அகவை 84)
தேசியம்இந்தியா
மற்ற பெயர்கள்காகா பாபு

பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை

தொகு

இன்றைய வங்க தேசத்தில் உள்ள முசாபர்பூரில் 1889ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தையார் மன்சூர் அலி நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். ஆனால் முசாபர் அகமது சிறுவனாக இருந்தபொழுதே அவர் இறந்துவிட்டார். முசாபர் அகமது சாந்த்விப் கார்கில் உயர்நிலைப்பள்ளியிலும், பின் நவகாளி மாவட்டப் பள்ளியிலும் படித்து 1913ஆம் ஆண்டின் மெட்ரிக்குலேசன் தேர்வில் வெற்றி பெற்றார்.[2]அதே ஆண்டில் ஹூக்ளியில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்த முசாபருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் படிப்பைத் தொடர முடியவில்லை. பின்னர் அவர் கல்கத்தா மாநகராட்சி ஊழியரானார். தொடர்ந்து டியூசன் சொல்லிக் கொடுத்தார். அவருக்கு அச்சமயத்திலேயே வங்காளி, ஆங்கிலம், உருது, அரபு மற்றும் பாரசீக மொழிகளில் நல்ல பரிச்சயம் இருந்தது. அதே சமயத்தில் வங்காளத்தில் பரவி வந்த தேசிய இயக்கம் அவரை ஈர்த்தது. எழுத்து ஆர்வம் கொண்டிருந்த அவர் கல்கத்தாவில் செயல்பட்டு வந்த முஸ்லிம் சாகித்ய சமிதியிலும் பின்னர் வங்காள சாகித்ய சமிதியிலும் உறுப்பினரானார். அரசாங்கத் தலைமை நிலையத்தில் எழுத்தராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

அரசியல் ஈடுபாடு

தொகு

1916ஆம் ஆண்டிலிருந்தே காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் பங்கேற்க ஆரம்பித்த முசாபர் 1917ஆம் ஆண்டில் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியின் மாநாடுகளிலும் பார்வையாளராக கலந்து கொண்டார்.

ஆரம்ப காலங்கள்

தொகு

1918ஆம் ஆண்டு முதல் 1920ஆம் ஆண்டு வரை ‘வங்காள முஸ்லிம் சாகித்ய சமிதியின்’ முழு நேர ஊழியரானார். இதைத் தொடர்ந்து அவரும் அவருடைய நெருங்கிய நண்பர் கவிஞர் நஸ்ரூல் இஸ்லாம் மற்றும் பசுலுல் ஹக் ஆகிய மூவரும் சேர்ந்து ‘நவயுகம்’ என்ற பெயரில் ஒரு பத்திரிகை தொடங்கினர். [3]இதில் தொழிலாளர்களை குறித்து கட்டுரை எழுதுவதற்காக முசாபர் துறைமுகத்திற்கு சென்று அங்குள்ள தொழிலாளிகளை சந்தித்துப் பேசி விவரம் சேகரித்தார். ஒரு முறை தொழிலாளிகள் மீது காவல்துறை கடும் அடக்குமுறையை ஏவியபொழுது இந்தப் பத்திரிகை அதை வன்மையாக கண்டித்தது. இதனால் கோபமடைந்த ஆங்கிலேய அரசாங்கம் அந்தப் பத்திரிகையின் காப்புத்தொகையை பறிமுதல் செய்தது.

பொதுவுடைமைச் சித்தாந்தம்

தொகு

1923ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி கம்யூனிஸ்ட் அகிலத்தைச் சேர்ந்த சௌகத் உஸ்மானி என்பவர் கல்கத்தாவிற்கு வந்த முசாபர் அகமதைச் சந்தித்துப் பேசினார்.1923 ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதியன்று சௌகத் உஸ்மானி கைது செய்யப்பட்டார். ஒரு நாள் கழித்து முசாபர் அகமதுவும் கைது செய்யப்பட்டார். முசாபர் அகமது புது அலிப்பூர் மத்திய சிறைச்சாலையில் பாதுகாப்பு கைதியாக அடைக்கப்பட்டார். பின்னர் டாக்கா மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கான்பூர் கம்யூனிஸ்ட் சதி வழக்கு

தொகு

இந்தியாவில் கம்யூனிசக் கருத்துக்கள் பரவி வருவதைக் கண்ட ஆங்கிலேய அரசாங்கம் அது தனது ஆதிக்கத்திற்கு ஆபத்து என்று கருதி அதை முளையிலேயே கிள்ளி எறிவது என்று திட்டமிட்டது. இதன் பொருட்டு கம்யூனிச அகிலத்துடன் நேரடியாகவும், கடிதம் மூலமும் தொடர்பு கொண்டுள்ள இந்தியர் அனைவரையும் சிறையில் அடைக்க ஒரு குற்றப் பட்டியலை தயாரித்தது. அதில் எம். என். ராய், முசாபர் அகமது, எஸ். ஏ. டாங்கே, சிங்காரவேலர் போன்ற பலரை சேர்த்திருந்தது. ஆனால் எம்.என்.ராய் வெளிநாட்டில் இருந்ததால் அவரை கைது செய்ய முடியவில்லை. சிங்காரவேலருக்கு அப்பொழுது கடுமையான டைபாய்டு காய்ச்சல். எனவே அரசாங்க மருத்துவர்கள் அவரை கான்பூருக்கு கொண்டு செல்லக்கூடாது என்று தடை விதித்துவிட்டனர். எனவே அரசாங்கம் பின்வரும் பட்டியலை தயாரித்தது.

  1. முசாபர் அகமது
  2. எஸ்.ஏ.டாங்கே
  3. நளினி குப்தா
  4. சௌகத் உஸ்மானி

ஆகிய நான்கு பேர் மீது கான்பூர் கம்யூனிஸ்ட் சதி வழக்கை அரசாங்கம் நடத்தியது. இந்த நால்வரும் அந்நியர் தூண்டுதலால் சதி செய்து அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்தனர் என்று காவல்துறை குற்றம் சாட்டியது. இந்த விசாரணையின் தீர்ப்பு 1924ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி வழங்கப்பட்டது. முசாபருக்கு 4ஆண்டு சிறைத் தண்டனை, இதரருக்கு வெவ்வேறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.[4] முசாபர் ரேபரெய்லி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்த தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை குறைப்பு கிடையாது, யாருக்கும் கடிதம் எழுத அனுமதி கிடையாது, பிறரிடமிருந்து கடிதங்கள் பெற முடியாது, யாரும் மனு போட்டு அவர்களைச் சந்தித்து பேச முடியாது என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. ஆனால் சிறையில் அடைக்கப்பட்ட சிலமாத காலத்தில் முசாபர் ரத்த வாந்தி எடுத்தார். அவரை பரிசோதித்த ஆங்கிலேய மருத்துவர் அவருக்கு காச நோய் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் இறந்து விடுவார் என்றும் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியதால் முசாபர் 1925ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.இவ்வழக்கு இந்திய மக்களுக்கு பொதுவுடைமை சித்தாந்தத்தை பெறிதும் பிரபலபடுத்தியதாகக் கருதப்படுகிறது .[5]

இந்திய பொதுவுடைமைக் கட்சி

தொகு

சத்யபக்தா என்பவர் முசாபர் அகமதுவுக்கு 30 ரூபாய் மணியாடர் மூலம் அனுப்பிவைத்து தான் கான்பூரில் ஒரு கம்யூனிஸ்ட் மாநாடு நடத்துகிறேன் என்றும் அதில் தாங்கள் கலந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அதையேற்று முசாபர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார். சிங்காரவேலர் தலைமையில் 1925ஆம் ஆண்டில் நடைபெற்ற அந்த மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. எஸ்.வி.காட்டே அதன் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1927ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் (ஏஐடியுசி) மாநாடு நடைபெற்றது. இதில் முசாபர் பங்கேற்றார். பின்னர் அதே ஆண்டில் தில்லியில் நடைபெற்ற ஏஐடியுசி மாநாட்டில் முசாபர் அதன் உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1927ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதியன்று பம்பாய் நகரில் கம்யூனிஸ்ட்களின் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் கட்சிக்கு அமைப்பு விதிகளும், கொள்கைப் பிரகடனமும் உருவாக்கப்பட்டன. முசாபர் இம்மாநாட்டில் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1928ஆம்ஆண்டு டிசம்பர் மாதத்தில் கல்கத்தாவில் தொழிலாளர் - விவசாயிகள் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. முசாபர் மாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவராகச் செயல்பட்டார். கட்சியின் மத்தியகுழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜாரியாவில் நடைபெற்ற ஏஐடியுசி மாநாட்டில் முசாபர் அதன் உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1927ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய தேசிய காங்கிரசின் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கு பெற சென்னை வந்த முசாபர் சிங்காரவேலர் இல்லத்தில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார். 1928ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி தொழிலாளர்- விவசாயிகள் கட்சியின் 3வது மாநாடு வங்கத்தின் 24 பர்கானா மாவட்டம் பாட்பாராவில் நடைபெற்றது. அதில் முசாபர் அகமது கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1929 ஆம் ஆண்டு ஜனவரியில் கம்யூனிஸ்டுகளின் ஒரு ரகசிய கூட்டம் கல்கத்தாவில் நடைபெற்றது. தலைமறைவாகச் செயல்பட்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சி சீரமைக்கப்பட்டது. முசாபர் கட்சியின் நிர்வாகக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முசாபரின் பரிந்துரையின் பெயரில் பி.சி.ஜோஷியும் சோகன் சிங் ஜோசும் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக்கப்பட்டனர்.

மீரட் சதி வழக்கு

தொகு
 
மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 25 கைதிகள்.பின் வரிசை (இடமிருந்து வலமாக): கே. என்.சேகல், எஸ். எஸ். ஜோஷ், எச். எல். ஹட்சின்சன், சௌகத் உஸ்மானி, பி. எஃப். பிராட்லி, ஏ. பிரசாத், ஏ. பிரசாத், ஜி. அதிகாரி. நடு வரிசை: ஆர். ஆர். மித்ரா, கோபன் சக்ரவர்த்தி, கிஷோரி லால் கோஷ், எல். ஆர்.கதம், டி. ஆர். தெங்டி, கவ்ரா ஷங்கர், எஸ். பேனர்ஜி, கே. என். ஜோக்லேகர், பி. சி. ஜோஷி, முசாபர் அகமது, டி. கோஸ்வாமி, ஆர்.எஸ். நிம்ப்கர், எஸ்.எஸ். மிராஜ்கர், எஸ். ஏ. டாங்கே, எஸ்.வி. காட்டே, கோபால் பாசக்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் வேகமாக பரவுவதைக் கண்ட ஆங்கிலேய அரசாங்கம் அதிர்ச்சியடைந்து 1929ஆம் ஆண்டு முசாபர் உள்ளிட்டு 31 பேரைக் கைது செய்து மீரட் சிறைச்சாலையில் அடைத்து கம்யூனிஸ்ட் சதி வழக்கு ஒன்றை நடத்தியது. அதாவது அவர்கள் ஆங்கிலேய அரசாங்கத்தை சதி செய்து கவிழ்க்க முயற்சித்தார்கள் என்று கூறி இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நான்காண்டு காலம் நடைபெற்றது. இறுதியில் முசாபர் அகமதுவுக்கு ஆயுள் தண்டனையும், இதரர்களுக்கு வெவ்வேறு கால தண்டனையும் விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் முசாபருக்கும் மற்றவருக்கும் தண்டனை குறைக்கப்பட்டு 1934 ஆம் ஆண்டில் அனைவரும் விடுதலையானார்கள்.

பத்திரிக்கையாளராக

தொகு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு முடிந்ததும் முசாபர் 1926 ஜனவரி முதல் வாரத்தில் கல்கத்தா திரும்பினார். அதன் பின் அவரால் ஏற்கெனவே நடத்தப்பட்டு வந்த ‘லாங்கல்’ என்ற வங்காள வார இதழை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின் அது ‘கனவாணி’ என்று பெயர் மாற்றப்பட்டது. சிறிது காலம் கழித்து அதன் ஆசிரியர் பொறுப்பையும், பதிப்பாளர் பொறுப்பையும் முசாபரே ஏற்றுக் கொண்டார். இந்த பத்திரிகையில்தான் முசாபர் மார்க்ஸ், எங்கெல்சு எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வங்க மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

இந்திய விடுதலைக்குப் பின்

தொகு

1948ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது, கைது செய்யப்பட்ட அவர், 1951ஆம் ஆண்டில்தான் விடுதலையானார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் 110 பேர் கொண்ட தேசிய கவுன்சிலின் உறுப்பினராக 1964ஆம் ஆண்டு வரை செயல்பட்டார். 1962ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய- சீன எல்லை மோதல் ஏற்பட்ட போது முசாபர் ஆறு மாத காலம் சிறையில் இருந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்

தொகு

1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தத்துவார்த்த மாறுபாடு காரணமாக இரண்டாக உடைந்தபோது அவர் சுந்தரய்யா, ஜோதிபாசு, புரமோத்தாஸ் குப்தா, இஎம்எஸ் போன்ற தோழர்களுடன் சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார். அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் கைது செய்யப்பட்ட அவர் 16மாதம் கழித்துத்தான் விடுதலை செய்யப்பட்டார்.

இறப்பு

தொகு

தன் இறுதிக் காலம் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்த அவர் தனது 84காம் வயதில் , 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி காலையில் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Prof. Muzaffar Ahmed: An Interview". The Daily Star (in ஆங்கிலம்). 16 December 2014. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
  2. Roy, Ranjit (2012). "Ahmed, Comrade Muzaffar". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  3. Ali Nawaz (2012), "Nabajug, The", in Sirajul Islam and Ahmed A. Jamal (ed.), Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.), Asiatic Society of Bangladesh
  4. Suchetana Chattopadhyay, An Early Communist: Muzaffar Ahmad in Calcutta, Tulika Books, Delhi 2011
  5. Ralhan, O.P. (ed.) Encyclopedia of Political Parties New Delhi: Anmol Publications p.336
"https://ta.wikipedia.org/w/index.php?title=முசாபர்_அகமது&oldid=3658782" இலிருந்து மீள்விக்கப்பட்டது