காயுஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை

திருத்தந்தை புனித காயுஸ் (Pope Saint Caius or Gaius) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 283 திசம்பர் 17 முதல் 296 ஏப்பிரல் 22 வரை ஆட்சி செய்தார்.[1] இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் யுட்டீக்கியன். திருத்தந்தை புனித காயுஸ் கத்தோலிக்க திருச்சபையின் 28ஆம் திருத்தந்தை ஆவார்.

  • காயுஸ் (இலத்தீன்: Caius or Gaius) என்னும் பெயருக்கு "மகிழ்ச்சி நிறைந்தவர்" என்பது பொருள்.
திருத்தந்தை புனித காயுஸ்
Pope Caius
28ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்திசம்பர் 17, 283
ஆட்சி முடிவுஏப்பிரல் 22, 296
முன்னிருந்தவர்யுட்டீக்கியன்
பின்வந்தவர்மர்செல்லீனுஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்காயுஸ்
(Caius or Gaius)
பிறப்புதெரியவில்லை
தெரியவில்லை
இறப்பு(296-04-22)ஏப்ரல் 22, 296
உரோமை நகரம், உரோமைப் பேரரசு
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாஏப்பிரல் 22
ஏற்கும் சபைஉரோமன் கத்தோலிக்கம்
பகுப்புஆயர், திருத்தந்தை

வரலாற்றுக் குறிப்புகள்

தொகு

கிறித்தவ மரபுப்படி, திருத்தந்தை காயுஸ், இத்தாலி நாட்டுக்குக் கிழக்கே அட்ரியாட்டிக் கடலோரமாக உள்ள தல்மாசியா பகுதியில் சலோனா நகரில் (இன்றைய ஸ்ப்ளிட் நகருக்கு அருகே அமைந்துள்ள சோலின்) பிறந்தவர். அவருடைய தந்தையின் பெயரும் காயுஸ் ஆகும். மேற்குடியைச் சார்ந்த திருத்தந்தை காயுஸ் உரோமைப் பேரரசன் தியோக்ளேசியனின் உறவினர் என்று கூறப்படுகிறது.

"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் பண்டைக்கால ஏடு தரும் குறிப்பின்படி, திருத்தந்தை காயுஸ் புனித சூசன்னா மற்றும் புனித திபூர்சியுஸ் ஆகியோரால் மனமாற்றம் பெற்ற பலருக்குத் திருமுழுக்கு கொடுத்தார். கிபி ஆறாம் நூற்றாண்டு வரலாற்று ஏடு ஒன்று தரும் தகவல்படி, கிபி 280 அளவில் புனித சூசன்னா கோவில் இருக்கும் இடத்தில் அமைந்த ஒரு வீட்டில் கிறித்தவர்கள் வழிபாட்டுக்காகக் கூடினர். அந்த வீட்டு உரிமையாளர்கள் காயுஸ் மற்றும் கபீனுஸ் என்னும் இரு சகோதரர்கள். அந்தக் காயுஸ் ஒருவேளை திருத்தந்தை காயுசாக இருக்கலாம். கபீனுஸ் என்னும் பெயர்தான் புனித சூசன்னாவின் தந்தையின் பெயராகவும் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதாரத்தின்படி, திருத்தந்தை காயுஸ் புனித சூசன்னாவின் தந்தையின் சகோதரர் ஆவார்.[2]

திருச்சபையில் ஆயர் பணியை ஏற்குமுன்னர் ஒருவர் அதற்கு முன்னிலையாக அமைந்த பட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று சட்டம் வகுத்தார். அதாவது, வாயில் காப்பவர், வாசகர், பேயோட்டுநர், பீடப்பணியாளர், துணைத் திருத்தொண்டர், திருத்தொண்டர், குரு ஆகிய பட்டங்களைப் பெற்றபின்னரே ஒருவர் ஆயர் என்னும் பட்டத்தைப் பெறலாம் என்று சட்டம் இயற்றப்பட்டது.

திருத்தந்தை காயுஸ் உரோமை மறைமாவட்டத்தைப் பல பிரிவுகளாகப் பகுத்து, திருத்தொண்டர் பொறுப்பில் ஒப்படைத்தார்.

அவரது ஆட்சிக்காலத்தில் புதிய கோவில்கள் கட்டப்பட்டன. கல்லறைத் தோட்டங்களும் உருவாக்கப்பட்டன. அவரது ஆட்சியின்போது உரோமையை ஆண்ட பேரரசன் தியோக்ளேசியன் ஆவார். அம்மன்னரது ஆட்சியின் பிற்பகுதியில் கிபி 303இல் கிறித்தவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

இறப்பும் அடக்கமும்

தொகு

திருத்தந்தை காயுஸ் 296ஆம் ஆண்டு ஏப்பிரல் 22ஆம் நாள் இறந்தார். அவர் இறந்தபோது, உரோமை ஆப்பியா நெடுஞ்சாலையில் அமைந்திருந்த கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டத்தின் திருத்தந்தையர் அடக்கப்பகுதியில் இடம் எஞ்சியிருக்கவில்லை என்று தெரிகிறது. ஏனென்றால் அவருடைய உடல் திருத்தந்தையர் அடக்கப்பகுதியின் அருகே இன்னொரு பகுதியில் வைக்கப்பட்டது.

1854இல் ஜோவான்னி பத்தீஸ்தா ரோஸ்ஸி என்னும் இத்தாலிய அகழ்வாளர் திருத்தந்தை காயுசின் கல்லறையில் இருந்த கல்லெழுத்தைக் கண்டுபிடித்தார். அப்போது காயுசின் முத்திரை மோதிரமும் கிடைத்தது. திருத்தந்தை எட்டாம் அர்பன் காயுசின் உடலை 1631இல் உரோமை புனித காயுஸ் கோவிலுக்கு மாற்றினார். அக்கோவில் 1880களில் அழிந்ததைத் தொடர்ந்து அவ்வுடல் பார்பெரீனி சிறுகோவிலில் வைக்கப்பட்டது.

திருவிழா

தொகு

திருத்தந்தை புனித காயுசின் திருவிழா அவர் இறந்த நாளாகிய ஏப்பிரல் 22ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அதே நாளில் திருத்தந்தை சொத்தேர் என்பவரின் திருவிழாவும் அனுசரிக்கப்படுகிறது.

ஆதாரங்கள்

தொகு
  1. திருத்தந்தை காயுஸ்
  2. "புனித சூசன்னா". Archived from the original on 2015-07-28. பார்க்கப்பட்ட நாள் 2011-12-07.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
காயுஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் உரோமை ஆயர்
திருத்தந்தை

283–296
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயுஸ்_(திருத்தந்தை)&oldid=3549196" இலிருந்து மீள்விக்கப்பட்டது