முதன்மை பட்டியைத் திறக்கவும்

கிரேக்கத் தொன்மவியல்

(கிரேக்க தொன்மவியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சியுசின் மார்பளவு சிலை

கிரேக்க தொன்மவியல் என்பது பண்டைய கிரேக்கர்களின் தெய்வங்கள் மற்றும் மாவீரர்கள், அவர்களுக்குச் சொந்தமான வழிபாட்டுக் கொள்கை மற்றும் சடங்கு முறைகள், அவற்றின் தோற்றம் மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைக் குறிக்கும் தொன்மங்கள் மற்றும் போதனைகள் ஆகியவற்றின் அமைப்பாகும்.[1] இது மேற்கத்திய நாகரிகத்தின் பண்பாடு, கலை மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அது மேற்கத்திய பாரம்பரியம் மற்றும் மொழி ஆகியவற்றில் ஒரு பகுதியாக உள்ளது. பண்டைய காலத்தில் இருந்து தற்போது வரை உள்ள கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் கிரேக்க தொன்மவியலால் தூண்டுதல் பெற்று அதன் கருப்பொருள்களில் உள்ள சமகால முக்கியத்துவம் மற்றும் பொருத்தத்தைக் கண்டறிந்துள்ளனர்.[2]

கிரேக்கத் தொன்மவியல், உலகின் தோற்றம், ஆண், பெண் தெய்வங்கள், வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் தொன்ம உயிரினங்கள் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது. ஓமர், ஈசியோட் போன்ற பண்டைய கிரேக்கக் கவிஞர்களின் நூல்கள் அனைத்தும் கிரேக்கத் தொன்மவியலை மையமாக் கொண்டுள்ளன.

உலகம் மற்றும் தெய்வங்களின் தோற்றம்தொகு

உலகின் தோற்றம் பற்றி பல கிரேக்கக நூல்கள் கூறியிருந்தாலும் ஈசியோடின் தியோகோனி நூலில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தகவல்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதலில் சாவோசு என்ற வெறுமை இருந்தது. அதில் இருந்து கையா (பூமி), எரோசு (காதல்), அபிசு (டார்டரசு) மற்றும் எரேபசு ஆகியோர் தோன்றினர்.[3] பிறகு ஆண் துணையின்றி கையாவிற்கு யுரேனசு பிறந்தார். அவர்கள் இருவரின் மூலம் கோயசு, கிரியசு, குரோனசு, ஐபரியோன், இயாப்டசு மற்றும் ஓசனசு ஆகிய ஆறு ஆண் டைட்டன்களும் நெமோசைன், போபே, ரியா, திய்யா, தீமிசு மற்றும் டெத்திசு ஆகிய ஆறு பெண் டைட்டன்களும் என மொத்தமாக பன்னிரு டைட்டன்கள் பிறந்தனர். அதன் பிறகு அவர்களுக்குப் பிறந்த ஒற்றைக் கண் கொண்ட சைக்ளோப்சுகள், நூறு கைகள் கொண்ட எகாடோஞ்சிர்கள் ஆகியோரை யுரேனனசு பாதாள உலகமான டார்டரசில் அடைத்து விடுகிறார். இதனால் கையா கோபமடைகிறார். பிறகு கையாவின் மகன் குரோனசு, தன் தாய் வேண்டுகோளின் படி யுரேனசின் பிறப்புறுப்பை அறுத்தெறிகிறார். அதன் பிறகு குரோனசு, டைட்டன்களின் அரசனாக மாறினார். அவர் மனைவி ரியா டைட்டன்களின் அரசியானார்.

குரோனசு தன் மகன் சியுசால் வீழ்த்தப்படும் போது மகனால் வீழ்த்தப்பட்ட தந்தை என்ற கருத்து மீண்டும் திரும்புகிறது. குரோனசு தன் தந்தைக்கு துரோகம் இழைத்ததால் தனக்கும் தன் பிள்ளைகளால் அவ்வாறே நிகழுமோ என்று பயந்த குரோனசு, தனக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளையும் விழுங்கி விடுகிறார். ஆறாவதாகப் பிறந்த சியுசைக் காப்பாற்ற எண்ணிய ரியா, அவனுக்குப் பதிலாக ஒரு கல்லில் துணியைச் சுற்றி குழந்தை என்று கொடுக்க, குரோனசும் அதை விழுங்கிவிடுகிறார். பிறகு சியுசு ஆடவனாக வளர்ந்த பிறகு, ஒரு பானத்தை குரோனசிடம் கொடுத்துக் குடிக்க வைக்கிறார். அதனால் ஏற்பட்ட வாந்தி மூலம் ரியாவின் குழந்தைகள் அனைவரும் விடுதலை அடைந்தனர். பிறகு சியுசு, குரோனசிடம் போருக்கு வருமாறு அறைகூவல் விடுத்தார். பிறகு சியுசு, டார்டரசில் அடைபட்டு இருந்த சைக்ளோப்சுகள் மற்றும் எகாடோஞ்சிர்கள் ஆகியோரை விடுவித்தார். அவர்களின் உதவியுடன் சியுசு மற்றும் அவரது சகோதரர்கள் வெற்றி பெற்றனர். தோல்வி அடைந்த குரோனசு மற்றும் பிற டைட்டன்கள் அனைவரும் டார்டரசில் அடைக்கப்பட்டனர்.[4]

சியுசும் அதே கருத்தால் பாதிக்கப்பட்டார். தன் முதல் மனைவி மெட்டிசிற்குப் பிறக்கும் குழந்தை தன்னை விட வலிமையானதாக இருக்கும் என்று பயந்த சியுசு அவரை விழுங்கிவிட்டார்.[5] ஆனால் மெட்டிசு ஏற்கனவே கருத்தரித்து இருந்தார். பிறகு மெட்டிசின் குழந்தை ஏதெனா, சியுசின் தலையைப் பிளந்து கொண்டு உடல் முழுவதும் கவசத்துடன் பிறந்தது.[6]

டிரோயன் போரும் பிந்தைய நிகழ்வுகளும்தொகு

கிரேக்கம் மற்றும் டிரோய் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்த போர் மற்றும் அதன் பிந்தைய நிகழ்வுகளுடன் கிரேக்கத் தொன்மவியல் முடிவடைகிறது. காவிய கவிதைகளின் தொகுப்பான டிரோயன் போர் சுழற்சி, போருக்கு வழிவகுத்த நிகழ்வுகளைத் தொகுக்கிறது. அவை ஏரிசு மற்றும் தங்க ஆப்பிள், பாரிசு தீர்ப்பு, எலனின் கடத்தல், ஆலிசில் இபிகெனியாவின் தியாகம் ஆகியனவாகும்.

டிரோயன் போரில் வரும் புகழ்பெற்ற வீரர்கள்:

டிரோயன் அணி:

 • ஏனியசு
 • எக்டர்
 • பாரிசு

கிரேக்கர்கள் அணி:

 • அயக்சு
 • அச்சிலெசு
 • அரசன் அகமெம்னோன்
 • மெனிலயுசு
 • ஒடிசியசு

மேற்கோள்கள்தொகு

 1. "Volume: Hellas, Article: Greek Mythology". Encyclopaedia The Helios. (1952). 
 2. J.M. Foley, Homer's Traditional Art, 43
 3. Hesiod, Theogony, 116–138
 4. Hesiod, Theogony, 713–735
 5. Guirand, Felix (1987) [1959]. "Greek Mythology". in Guirand, Felix. New Larousse Encyclopedia of Mythology. Trans. Richard Aldington and Delano Ames. Hamlyn. பக். 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-600-02350-8. 
 6. Guirand, p. 108
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேக்கத்_தொன்மவியல்&oldid=2759309" இருந்து மீள்விக்கப்பட்டது