கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம்
கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் (Institute of Mental Health, Kilpak, Chennai) என்பது தமிழ்நாட்டின் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு அரசு மனநல காப்பகமாகும். பெயருக்கு இது காப்பகமாக இருந்தாலும், தற்போது இது மருத்துவமனையாகவும், பட்டமேற்படிப்புக் கல்வி நிலையமாகவும் செயல்பட்டு வருகிறது.[2] 2012 ஆண்டுவாக்கில் இங்கு 1500க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தனர்.[3]
தமிழ்நாடு அரசு | |
---|---|
அமைவிடம் | கீழ்ப்பாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மருத்துவப்பணி | மனநலமருத்துவமனை |
வகை | முழு சேவை மருத்துவமனை |
படுக்கைகள் | 1800[1] |
நிறுவல் | 1794 |
பட்டியல்கள் |
வரலாறு
தொகு1794 வாக்கில் வாலென்டின் கனோலி என்ற பிரித்தானிய அதிகாரி சென்னை புரசைவாக்கத்தில் சிறு அளவில் துவக்கிய மனநலக் காப்பகமே இந்த மருத்துவமனையின் துவக்கமாக கருதப்படுகிறது.[4] அந்நாள்களில், வெள்ளை அதிகாரிகளும், போர் வீரர்களும் மட்டுமே இந்தப் பித்தர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். இந்த விடுதிக்கான வாடகையும், மருத்துவருக்கான சம்பளத்தையும் கிழக்கிந்திய கம்பெனி கொடுத்துவந்திருக்கிறது. இ்வாறு ஐம்பதாண்டு காலம் விடுதி வாடகைப் பணமாக சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்வரை செலவழிக்கப்பட்டது. இதைக் கணக்குப் பார்த்த மதராஸ் அரசாங்கம், தாமே புதியதாக ஒரு கட்டிடத்தைப் பழைய கீழ்ப்பாக்கம் பகுதியில் கட்டலாம் என முடிவு செய்தது. இதையறிந்த அப்பகுதிவாசிகள் தங்கள் பகுதிக்கு மனநலக் காப்பகம் வருவதை எதிர்த்தனர். தங்களது எதிர்ப்பை 1851 திசம்பரில் அரசாங்கத்துக்கு அளித்த ஒரு மனு மூலமாகத் தெரிவித்தனர். அரசாங்கமும் இதைத் துவக்குவதால் ஏற்படும் எதிர்ப்பைக்கண்டு திட்டத்தை ஒத்திவைத்தது பிறகு அரசானது விடுதிக்கு இடம் தர விரும்புபவர்கள் முன்வரலாம் என்று விளம்பரம் செய்தது. அதன்படி 1856-57 லோகாக்ஸ் கார்டன்ஸ் என்ற இடம் அரசால் வாங்கப்பட்டது. அதன் பிறகு சிப்பாய்ப் புரட்சி ஏற்பட்டதால் இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சிக்கல்கள் தீர்ந்த நிலையில், முன்பு வாங்கப்பட்ட அந்த இடத்தில் விடுதியைக் கட்ட 1867 சனவரியில் அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி 1871 மே 15-இல் விடுதி கட்டிமுடிக்கப்பட்டு 145 நோயாளிகளுடன் செயல்படத் தொடங்கியது. 1891-இல் இருபாலருமாக 627 நோயாளிகள்வரை சிகிச்சைக்கு வந்து சென்றனர்.
1922-இல் பைத்தியக்கார விடுதி என்ற பொருள்தரக்கூடிய ‘லூனாட்டிக் அசைலம்’ என்ற பெயரானது ‘கவர்ன்மென்ட் மென்டல் ஹாஸ்பிட்டல்’ என்று மாற்றப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான மனநல மருத்துவப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. துவக்கக்காலத்தில் காலத்தில் பெரும்பாலும் காவல் நிலையம், நீதிமன்றம் மூலமாக வரும் நபர்கள் மட்டுமே இங்கு உள்ள மனநலக் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டார்கள். 1950-இற்குப் பிறகுதான் இங்கு உறவுக்காரர்களே நேரடியாக நோயாளிகளைக் கூட்டி வரும் முறை கொண்டு வரப்பட்டது.[5] துவக்கத்தில், உள் நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. 1947-ஆம் ஆண்டில்தான் ‘புறப்பிணியாளர் பகுதி’ துவக்கப்பட்டது. அதன்பிறகு, அதிகரித்து வந்த தேவையையொட்டி குழந்தைகள் பிரிவு, பெண் மனநோயாளிகளுக்கான பிரிவு என்று புதிதாகப் பல பிரிவுகள் தொடங்கப்பட்டன. சிறைச்சாலை போல பெரிய கதவுகள், இரும்புக் கம்பிகள் என இருந்த காப்பகத்தின் தோற்றம் படிப்படியாக பின்பு மாற்றப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "பித்தர் இல்லம்". செவ்வி. கீற்று. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகத்து 2018.
- ↑ சென்னை 380: உள்ளத்தின் நலம் காத்த ஆங்கிலேயர்!, நிலவன், இந்து தமிழ், 2019 ஆகத்து 24
- ↑ "கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு". செய்தி. தமிழ் முரசு. 10 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகத்து 2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "கீழ்பாக்கம் பைத்தியம்". கட்டுரை. குங்குமம். 13 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகத்து 2018.
- ↑ டாக்டர் சஃபி (19 ஆகத்து 2018). "மனம் காத்த சென்னைக் காப்பகம்!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 20 ஆகத்து 2018.