குடியிருப்புப் படிநிலையமைப்பு
குடியிருப்புப் படிநிலையமைப்பு (Settlement hierarchy) என்பது, மனிதக் குடியிருப்புக்களை மக்கள்தொகையையும் வேறு அம்சங்களையும் கருத்திலெடுத்து அவற்றை ஒரு படிநிலை அமைப்பில் ஒழுங்குபடுத்தும் ஒரு வழிமுறையாகும்.
மக்கள்தொகை எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அதற்கேற்றவாறு குடியிருப்பின் பரப்பளவு பெரிதாகவும், படிநிலையமைப்பில் உயர்ந்த நிலையிலும் இருப்பதுடன், குடியிருப்பில் கிடைக்கக்கூடிய வசதிகள் கூடுதலாகவும் இருக்கும். குடியிருப்புப் படிநிலையமைப்பில் ஒரு குடியிருப்பின் இடம் அதன் செல்வாக்கு மண்டலத்திலும் தங்கியுள்ளது. வசதிகள் கூடுதலாக இருக்கும்போது தொலைவிடக் குடியிருப்புக்களில் இருந்து மக்கள் இங்கே வருவர். அதனால் அக்குடியிருப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதுடன், அப்பகுதியின் குடியிருப்புப் படிநிலையமைப்பில் உயர்ந்த இடத்தையும் பெறும்.
குடியிருப்புப் படிநிலையமைப்புக்கான எடுத்துக்காட்டு
தொகுஇந்த எடுத்துக்காட்டில், தனியாக அமைந்துள்ள வீடுகள் படிநிலையின் மிகவும் கீழ் நிலையில் உள்ளது. உலகநகரத்தொகுதி (ecumenopolis) மிகக்கூடிய மக்கள்தொகையுடன் மிகவுயர்ந்த நிலையில் உள்ளது.[1] (இந்தக் குடியிருப்புப் படிநிலைகள் கான்சுடன்டினோசு அப்போசுட்டலோசு டொக்சியாடிசு என்பவரின் நூலைத் தழுவியது.)
- உலகநகரத்தொகுதி (Ecumenopolis) - இது ஒரு கோட்பாட்டு அமைப்பு. இதில் உலகம் முழுவதிலும் உள்ள, குறைந்தது ஒன்றோடொன்று இணைந்து பல ஆயிரம் கிலோமீட்டர்களை அடக்கும் ஒரு மிகப்பெரிய நகர்ப்புறத் தொடரியம் ஒன்றை இது குறிக்கும்.
- பெருநகரக் குழுமம் (Megalopolis) - பல நகரத்தொகுதிகளின் சேர்க்கையால் அமைந்தது. 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டது.
- நகரத்தொகுதி (Conurbation) - பல பெரிய மாநகரங்களினதும் அவற்றின் புறநகர்ப் பகுதிகளினதும் சேர்க்கை. 3 மில்லியன் முதல் 10 மில்லியன் வரையான மக்கள்தொகையைக் கொண்டது.
- பெருநகரப் பகுதி (Metropolis) - ஒரு பெரிய மாநகரத்தையும் புறநகர்ப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இதற்குள் பல சிறிய மாநகரங்களும் நகரங்களும் அடங்கியிருக்கலாம். 1 மில்லியன் முதல் 3 மில்லியன் வரையான மக்கள்தொகை கொண்டது.
- பெரிய மாநகரம் (Large city) - கூடிய மக்கள்தொகையையும், பல வசதிகளையும் கொண்ட ஒரு மாநகரம். ஒரு மில்லியனுக்கும், 3 இலட்சங்களுக்கும் இடைப்பட்ட மக்கள்தொகை கொண்டது.
- மாநகரம் (City) - பெரிய மாநகரத்திலும் குறைவான வசதிகளையும், 1 இலட்சத்துக்கும் 3 இலட்சத்துக்கும் இடைப்பட்ட மக்கள்தொகையையும் கொண்டது.
- பெரிய நகரம் (Large town) - 20 ஆயிரத்துக்கும், ஒரு இலட்சத்துக்கும் இடைப்பட்ட மக்கள்தொகை கொண்டது.
- நகரம் (Town) - ஆயிரத்துக்கும், 20 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட மக்கள்தொகை கொண்டது.
- ஊர் (Village) - சிறிய கடை, ஒரு அஞ்சல்நிலையம் போன்ற குறைவான வசதிகளைக் கொண்டது. 100 முதல் ஆயிரம் வரையான மக்கள் வாழக்கூடியது.
- சிற்றூர் (Hamlet) - மிகக்குறைவான வசதிகளையும், 100க்குக் குறைந்த மக்கள்தொகையையும் கொண்டது.
- தனித்த வீடுகள் (Isolated dwelling) - ஓரிரு வீடுகளையும், குடும்பங்களையும் கொண்டது.
குடியிருப்புப் படிநிலையமைப்புக் கருத்துரு தொடர்பான சிக்கல்கள்
தொகுகுடியிருப்பின் அளவைப் படிநிலைப்படி வகைப்படுத்துவதற்குப் பயன்படுத்துதல் எல்லா வேளைகளிலும் சரியாக அமைவதில்லை. சில மாநகரங்கள், சில நகரங்களிலும் குறைவான மக்கள்தொகை கொண்டனவாக இருக்கின்றன. அத்துடன் குடியிருப்புப் படிநிலையமைப்பில் எத்தனை படிநிலைகள் இருக்கவேண்டும் என்பது குறித்தோ அவற்றை எவ்வாறு அழைக்கவேண்டும் என்பது குறித்தோ இணக்கப்பாடு கிடையாது. குடியிருப்புக்களைக் குறிக்கும் பல சொற்களுக்குச் (எ.கா: ஊர், நகரம்) சட்ட அடிப்படையிலான வரைவிலக்கணங்கள் இல்லை, அல்லது வேறுபட்ட ஆட்சியெல்லைகளுக்குள் முரண்பாடான வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன.
படிநிலையமைப்பும் தகுதிநிலையும்
தொகுஏற்றுக்கொள்ளப்பட்ட குடியிருப்புப் படிநிலையமைப்பு ஒன்றில், படிநிலையானது தகுதிநிலையைக் குறிப்பால் உணர்த்துகிறது.[2] இது படிநிலையமைப்பில் குடியிருப்பொன்றின் நிலையை வலுவாக்குகின்றது. ஒரு குடியிருப்பின் தகுதிநிலை பல காரணங்களால் தீர்மானிக்கப்படலாம். அரசர் அல்லது ஒரு உயர்நிலைப் பிரபு ஒருவரின் இருப்பிடமாக அமைவதனால், அல்லது ஒரு முக்கிய மத நிறுவனம் ஒன்றின் அமைவிடமாக அமைவதன் மூலம் அக்குடியிருப்புக்களுக்கு உயர் தகுதிநிலை ஏற்படுவதுண்டு.