யோகான்னசு கூட்டன்பர்கு

(குட்டன்பேர்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யோகான்னசு கூட்டன்பர்கு (Johannes Gensfleisch zur Laden zum Gutenberg;1398 – பிப்ரவரி 3, 1468) ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானியக்) கொல்லர், பொற்கொல்லர், அச்சுப்பதிவாளர் மற்றும் பதிப்பாளர் ஆவார். ஐரோப்பாவில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தவர். இவருடைய இயங்கும் அச்சு இயந்திரமானது நவீன அச்சுக்கலையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டது.[1] இவர் கண்டறிந்த அச்சு இயந்திரம் மறுமலர்ச்சிக்கும், கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தின் பரவலுக்கும், அறிவொளிக் காலம் வளர்ச்சிக்கும், அறிவியல் புரட்சிக்கும், இயந்திரம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கும், பேரளவில் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி பரவவும் உதவியது.[2] அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் அச்சிடப்படும் புத்தகங்கள் உருவாகின. நூலகங்கள் பெருமளவில் தோன்றத் தொடங்கின. உலக மக்களுக்கு அறிவையும், தகவலையும் கொண்டு சேர்க்கும் பணி எளிதானது. ஒட்டுமொத்தத்தில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஐந்து நூற்றாண்டுகளில் உலகம் பல துறைகளில் அபரிமித வளர்ச்சியைக் கண்டது. அச்சியந்திரம் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கியமானதொரு கண்டுபிடிப்பாகும்.

யோகான்னசு கூட்டன்பர்கு
பிறப்புயோகான்னசு கென்சுஃபிளைசு சுர் இலாடன் கூட்டன்பெர்கு
Johannes Gensfleisch zur Laden Gutenberg

அண். 1395
மைன்சு,
இறப்புபிப்பிரவ்ரி , 1468 (அகவை 70)
மைன்சு (Mainz)
தேசியம்இடாய்ச்சு
பணிEngraver, கண்டுபிடிப்பாளர், பதிப்பாளர்
அறியப்படுவதுநகர்த்தக்கூடிய அச்சு இயந்திரம் கண்டுபிடித்ததற்காக
சமயம்கத்தோலிக்கர்
வாழ்க்கைத்
துணை
எல்செ நிசிக்கு சும் கூட்டன்பூர்கு

நகரும் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி அச்சிட்ட முதல் ஐரோப்பியர் கூட்டன்பர்க் ஆவார். மேலும் அச்சுத்துறையில் இவர் பல்வேறு பங்களிப்புகளையும் செய்துள்ளார். பேரளவில் அச்சிடக்கூடிய நகரும் எழுத்துரு, எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட அச்சு மை, மர அச்சுக்கூடம் ஆகியன இவரின் கண்டுபிடிப்புகளாகும். இவருடைய எழுத்துரு உலோகக்கலவையாலான பற்றவைப்பு முறையில் உருவாக்கப்பட்ட எழுத்துருக்களாகும். இவருடைய இக்கண்டுபிடிப்புகள் அணைத்தும் நவீன அச்சுக்க்கலையில் மிக அதிக முறையில் வேகமாகவும் எளிதாகவும், குறைந்த செலவில் புத்தகங்கள் அச்சிட பெரிதும் உதவியது. கூட்டன்பர்க் முதன் முதலில் விவிலியத்தை அச்சிட்டு அதனை பலரும் பயன்படுத்த காரணமானார்.

இளமை

தொகு
 
Gutenberg in a 16th century copper engraving

கூட்டன்பர்க் ஜெர்மனியில் மைன்ஸ் (Mainz) என்னுமிடத்தில் ஃபிரிலீ லேடன் என்பவருக்கும் அவருடைய இரண்டாவது மனைவியான எல்சு வைரிச் என்பவருக்கும் கடைசி மகனாக 1398 அல்லது 1399 இல் பிறந்தார்.(கூட்டன்பர்க்கினுடைய சரியான பிறப்பு வருடம் தெரியவில்லை. 1938 எனக் கருதப்படுகிறது.) இவருடைய தந்தை ஒரு செல்வந்தராகவும் வணிகராகவும் விளங்கினார். மேலும் மைன்சின் ஆயருக்கு பொற்கொல்லராகவும் பணியாற்றினார். எனினும் இவர் அதிகளவில் துணி வியாபாரமும் செய்து வந்தார்.[3]

ஜான் லீனார்டு என்ற வரலாற்றாசிரியர் கூட்டன்பர்க்கின் இளமையானது பெரும்பாலும் மர்மம் நிறைந்ததாகவே இருந்தது எனக் குறிப்பிடுகிறார். கத்தோலிக்க ஆலயங்களுக்கு தேவைப்படுபவைகளை செய்யும் பட்டறையில் அவருடைய தந்தை வேலை செய்துகொண்டிருந்தார் எனவே கூட்டன்பர்க் வளரும்போதே பொற்கொல்லருக்கான நுணுக்க்கங்களைத் தெரிந்தே வளர்ந்தார்."[4] வரலாற்றாசிரியர், என்ரிச் வாலவ் என்பவர் 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் கூட்டன்பர்க்கினுடைய வழித்தோன்றல்கள்ன் நாணயச் சாலையில் ஒரு முக்கியமான பொறுப்பில் இருந்தனர். அவர்கள் கணிசமான அளவு உலோகத் தொழில்நுட்ப அறிவுபெற்றிருந்தமையால் பல்வேறு நாணயங்களுக்கான உலோக அச்சுகளை அந்நாணயச் சாலைக்கு உருவாக்கித் தந்தனர். இதன் காரணமாக மோசடி வழக்குகளை விசாரிக்கும் அமர்வு நீதிமன்றங்களில் இவர்களுக்கென்று ஓர் இருக்கை வழங்கப்பட்டிருந்தது."[5] கூட்டன்பர்க்கினுடைய தந்தைக்குச் சொந்தமான மாளிகை மைன்சில் செல்வாக்கு பெற்ற ஓர் இடமாக விளங்கியது."[5][6] 1411 இல் ஜெர்மானியப் பிரிவினைக்கு எதிரான எழிச்சியின் காரணமாக நூற்றுக் கணக்கான குடும்பங்கள் இடம்பெயர நேரிட்டது. அதில் கூட்டன்பர்க்கின் குடும்பமும் ஒன்றாகும். கூட்டன்பர்க்கின் குடும்பமும் அல்டவில்லா என்ற இடத்தில் அவரது தாயாருக்குச் சொந்தமான இடத்தில் குடியேற நேரிட்டது. எனவே இளமையிலேயே அதாவது 1430களிலேயே கூட்டன்பர்க் மைன்சு எனுமிடத்தை விட்டு அரசியல் காரணமாக ஸ்ட்ராஸ்பர்க் என்ற இடத்திற்குக் குடியேறினதாகக் கூறப்படுகிறது. வசதியான குடும்பத்தில் பிறந்த குட்டன்பெர்க்கிற்கு தொடக்கம் முதலே வாசிக்கக் கற்றுத்தரப்பட்டது. ஆனால் அப்போதிருந்த புத்தகங்கள் இப்போது இருப்பவை போன்றவை அல்ல. கைகளால் எழுதப்பட்டவை அவற்றை புத்தகங்கள் என்று சொல்வதை விட கையெழுத்துப் பிரதிகள் என்று சொல்லலாம். அவை கிடைப்பதற்கும் அரிதானவை."[5] கூட்டன்பர்க் எர்ஃபர்ட் பல்கலைக் கழகத்தில் தனது கல்வியைத் தொடந்தார்.[7][8]

அடுத்த பதினைந்தாண்டுகளில் கூட்டன்பர்க்கினுடைய வாழ்க்கை பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. 1434 இல் கூட்டன்பர்க் எழுதிய ஒரு கடித்தத்தில் அவர் ஸ்டிராஸ்பர்க்கில் இருப்பதாகவும் அங்கு தனது தாயாருடைய உறவினர்கள் சிலருடன் தொடர்பில் இருப்பதாகவும் குறிபிட்டிருந்தார். மேலும் அங்கு தான் பொற்கொல்லர் சங்கத்தில் ஓர் உறுப்பினராகப் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. 1437 இல் இரத்தினக் கற்கள் மெருகேற்றும் வணிகத்தில் அவர் ஒரு செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். மேலும் 1436/37 களில் இவர் ஸ்டிராஸ்பர்க்கில் என்னெலின் எனுமிடத்தில் இவருடைய திருமண முறிவு வழக்கு ஒன்று நடைபெற்றதாக செய்தி வெளியானது.[9] 1419 இல் இவருடைய தந்தை இறந்து போனார்.

அச்சுக் கூடம்

தொகு
 
Early wooden printing press, depicted in 1568. Such presses could produce up to 240 impressions per hour.[10]
 
Gutenberg Bible, அமெரிக்கக் காங்கிரசு நூலகம், Washington, D.C.

கூட்டன்பர்க் வளர்ந்து வந்த சமயத்தில் அச்சுப்பால் அச்சுமுறை என்ற புத்தகங்களை அச்சடிக்கும் ஒரு புதிய முறை அறிமுகமானது ஒரு மரப்பலகையில் ஒவ்வொரு எழுத்தாக செதுக்கி எழுத்துகள் எழும்பி நிற்கும்படி செய்ய வேண்டும். பின்னர் அந்த எழுத்துகளில் மை தடவி அவற்றை தாளில் அழுத்தினால் ஒரு பக்கம் அச்சாகும். இந்த முறையில் ஒரே பக்கத்தைப் பல பிரதிகள் அச்சிடலாம். ஆனால் ஒவ்வொரு பக்கத்திற்கும் என ஒரு பலகை தேவை. மேலும் அதைத் தயாரிக்க அதிக நேரமும் தேவைப்பட்டது. அவற்றை வேறு பக்கங்களுக்கும் பயன்படுத்த முடியாது. எனினும் கைகளால் எழுதுவதைக் காட்டிலும் அச்சுப்பால அச்சுமுறை வேகமானது. புதிய முறையில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையும், எழுத்துப் படிவங்களையும் படிப்பதில் குட்டன்பெர்க்கிற்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் அவற்றை செல்வந்தர்களால் மட்டுமே வைத்துக்கொள்ள முடிந்தது. அனைவருக்கும் பயன்படும்படியும், படிக்கும்படியும் புத்தகங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். ஒரு பாழடைந்த கட்டடத்தின் ஓர் அறையை சுத்தம் செய்து விட்டு அங்கு ரகசியமாக பரிசோதனைகள் செய்யத் தொடங்கினார். கைவசம் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது. அப்போதுதான் செல்வந்தரான ஜோஹனச் ஃபஸ்ட் என்பவரின் நட்பு அவருக்கு கிடைத்தது. அச்சியந்திரத்தை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட ஃபஸ்ட் குட்டன்பெர்க்கிறகு தேவையான பணம் கொடுத்து உதவினார். புதிய உற்சாகத்துடன் தனது ஆராய்ச்சிகளைத் தொடங்கிய குட்டன்பெர்க் பல முயற்சிகளுக்குப் பிறகு நகரும் எழுத்துருவை உருவாக்கினார். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சு என்று உருவாக்கினால் அவற்றை வேண்டிய மாதிரி தேவைகேற்ப மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதை கண்டறிந்தார். பின்னர் பலகைக்குப் பதில் உலோகத்தாலான அச்சு சிறந்தது என்பதையும் கண்டறிந்தார்.

 
Movable metal type, and composing stick, descended from Gutenberg's press.

1450 களில் இவருடைய அச்சுக்கூடம் செயல்படத் துவங்கியது. ஜெர்மானிய மொழிக் கவிதை ஒன்று முதன்முதலாக இவருடைய அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. இதுவே முதன் முதலில் அச்சில் வந்த பதிப்பாகும்.[11] தாம் கண்டுபிடித்த முறையைக் கொண்டு இலத்தீன் மொழியில் விவிலியத்தை அச்சடிக்கும் பணியைத் தொடங்கினார். 1455-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள் நவீன அச்சு முறையில் உருவான உலகின் முதல் புத்தகம் உருவானது. இலத்தீன் மொழியில் இரண்டு பதிப்புகளில் விவிலியம் வெளியானது. ஒவ்வொன்றும் 300 பக்கங்கள் கொண்டது ஒவ்வொரு பக்கத்திலும் 42 வரிகள் கொண்டது. குட்டன்பெர்க் கண்டுபிடித்த இயங்கக்கூடிய அச்சு முறையில் உருவானது என்பதால் அது 'குட்டன்பெர்க் விவிலியம்' (Gutenberg Bible) என்றே அழைக்கப்பட்டது. அந்த முறையில் 180 பிரதிகள் வரை அச்சிடப்பட்டிருக்கலாம் என்று ஒரு குறிப்பு கூறுகிறது அவற்றில் தற்பொழுது 22 பிரதிகள் எஞ்சியிருப்பதாக நம்பப்படுகிறது.

வழக்குகள்

தொகு

1455-ஆம் ஆண்டில் பாம்பெர்க் புத்தக சந்தையில் தாம் அச்சிட்ட விவிலியம் பிரதிகளை குட்டன்பெர்க் விற்பனை செய்தார். ஆனால் புத்தக சந்தையில் கிடைத்த பணம் பெரிய தொகை இல்லை என்பதால் தான் ஃபஸ்டிடம் கடன் வாங்கிய பணத்தை குட்டன்பெர்க்கால் திருப்பித்தர இயலவில்லை. பொறுமையிழந்த ஃபஸ்ட் ஆர்ச்பிஷப் நீதிமன்றத்தை அனுகினார். விவிலியம் புத்தகங்களை வெளியிடுவதில் ஃபஸ்டுக்கு பங்குத்தொகை தரவேண்டியிருந்தது. எனவே ஃபஸ்ட் குட்டன்பெர்க்கின் மீது வழக்குத் தொடர்ந்தார். தனக்கு சேர வேண்டிய பணத்திற்காக நீதிமன்றத்தின் துணையுடன் குட்டன்பெர்க்கின் அச்சுக் கூடத்தையும் பாதி விவிலிய நூல்களையும் அப்படியே பெற்றுக்கொண்டார்.

வழக்கில் தொல்வியடைந்தாலும் மனம் தளராமல் கூட்டன்பர்க் 1459 இல் பாம்பர்க்கில் ஒரு சிறிய அச்சுக்கூடத்தை நிறுவி விவிலியத்தை அச்சிட்டு வழங்கலானார். ஆனால் அந்நூலில் கூட்டன்பர்க்கின் பெயரோ நாளோ குறிக்கப்படவில்லை. மேலும் இவருடைய அச்சுக்கூடத்தில்ல் 754 பக்கங்கள் கொண்ட கத்தோலிய அகராதியையும் வெளியிட்டார். இதே நேரத்தில் 1457, ஆகஸ்டில் தனது மைனஸ் புத்தகக்கடையில் முதன்முதலில் பெயர் மற்றும் நாள் குறிக்கப்பெற்ற ஐரோப்பாவின் முதல் புத்தகங்களை ஃபஸ்ட் வெளியிட்டார். கூட்டன்பர்க்கின் தொழில்நுட்பமுறையில் அச்சிடப்பட்ட அந்நூல்களில் எங்கும் கூட்டன்பர்க்கின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

இறுதி வாழ்க்கை

தொகு

உலகின் அறிவு வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்குமான உன்னத கண்டுபிடிப்பை செய்தும் அதிலிருந்து எந்தவித பலனையும் பெறாமல் ஏழ்மையில் இறந்து போனார் குட்டன்பெர்க். 1468-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் இயற்கை எய்திய அவர் ஒரு பிரான்சிக்கன் தேவலாயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அந்த தேவலாயம் இரண்டு முறை இடிக்கப்பட்டது இப்போது அவர் புதைக்கப்பட்ட இடம் எது என்பது கூட சரிவரத் தெரியவில்லை. 1504 இல் பேராசிரியர் இவோ விட்டிங்க் என்பவரே தனது நூலில் கூட்டன்பர்க் பற்றி குறிப்பிட்டிருந்தார். 1567 ஹென்ரிச் பாண்டலியன் என்பவரது புகழ்பெற்ற ஜெர்மானியர்கள் என்ற புத்தகத்தில்தான் முதன் முதலில் கூட்டன்பர்க்கினுடைய படம் கற்பனையாக வரையப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. See People of the Millenium பரணிடப்பட்டது 2012-03-03 at the வந்தவழி இயந்திரம் for an overview of the wide acclaim. In 1999, the A&E Network ranked Gutenberg no. 1 on their "People of the Millennium" countdown பரணிடப்பட்டது 2010-08-29 at the வந்தவழி இயந்திரம். In 1997, Time–Life magazine picked Gutenberg's invention as the most important of the second millennium பரணிடப்பட்டது 2010-03-10 at the வந்தவழி இயந்திரம்; the same did four prominent US journalists in their 1998 resume 1,000 Years, 1,000 People: Ranking The Men and Women Who Shaped The Millennium பரணிடப்பட்டது 2012-03-03 at the வந்தவழி இயந்திரம். The Johann Gutenberg entry of the Catholic Encyclopedia describes his invention as having made a practically unparalleled cultural impact in the அனோ டொமினி.
  2. McLuhan 1962; Eisenstein 1980; Febvre & Martin 1997; Man 2002
  3. St. Christopher's பரணிடப்பட்டது 2014-11-04 at the வந்தவழி இயந்திரம் - Gutenberg's baptismal church
  4. "Lienhard, John H". Uh.edu. 2004-08-01. பார்க்கப்பட்ட நாள் 2012-08-15.
  5. 5.0 5.1 5.2 Wallau, Heinrich. Johann Gutenberg. The Catholic Encyclopedia. Vol. 7. New York: Robert Appleton Company, 1910. [1]
  6. Hanebutt-Benz, Eva-Maria. "Gutenberg and Mainz". பார்க்கப்பட்ட நாள் 2006-11-24.
  7. Martin, Henri-Jean (1995). "The arrival of print". The History and Power of Writing. University of Chicago Press. p. 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-50836-6.
  8. Dudley, Leonard (2008). "The Map- maker's son". Information revolutions in the history of the West. Northampton, MA: Edward Elgar. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84720-790-6.
  9. "Gutenberg und seine Zeit in Daten (Gutenberg and his times; Timeline)". Gutenberg Museum. Archived from the original on 2006-12-22. பார்க்கப்பட்ட நாள் 2006-11-24.
  10. Wolf 1974, ப. 67f.
  11. Klooster, John W. (2009). Icons of invention: the makers of the modern world from Gutenberg to Gates. Santa Barbara, CA: ABC-CLIO. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-34745-0.

உசாத்துணை

தொகு

மேலதிக வாசிப்புக்கு

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Johannes Gutenberg
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகான்னசு_கூட்டன்பர்கு&oldid=4041199" இலிருந்து மீள்விக்கப்பட்டது