குயுலெக்ஸ் குயின்குபேசியேட்டஸ்

பூச்சி இனம்


குயுலெக்ஸ் குயின்குபேசியேட்டஸ்
ஆண், பெண் கொசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
டிப்டிரா
குடும்பம்:
குலுசிடே
பேரினம்:
குயுலெக்சு
இனம்:
கு. குயின்குபேசியேட்டசு
இருசொற் பெயரீடு
குயுலெக்சு குயின்குபேசியேட்டசு
சேய், 1823

குயுலெக்சு குயின்குபேசியேட்டசு (Culex quinquefasciatus) (ஆரம்பக்கால பெயர்: குயுலெக்சு பேட்டிகன்சு Culex fatigans) எனும் கொசுவானது தெற்கு வீட்டுக் கொசு என அழைக்கப்படுகிறது. நடுத்தர அளவுள்ள இந்த கொசுவானது உலகின்வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிறது. இது வூச்சிரேரியா பெங்கிரப்டி, பறவை மலேரியா, மற்றும் அர்போ தீநுண்மம் (செயின்ட் லூயிஸ் என்சேபாலிட்டிஸ் தீநுண்மம், மேற்கத்திய குதிரை என்செபாலிட்டிஸ் தீநுண்மம், இசீக்கா தீநுண்மம்[1]) மற்றும் மேற்கு நைல் தீநுண்மங்களின்[2] நோய் கடத்தியாக உள்ளது. இது குயுலெக்சு பைபியன்சு இன கூட்டத்தில் உறுப்பினராக வகைப் படுத்தப்படுகிறது[3]. இதனுடைய மரபணு 2010ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்டது. இந்த மரபணு தொகுதியில் 18,883 புரத-குறியீட்டு மரபணுக்கள் உள்ளன.[4]

விளக்கம் தொகு

முதிர்வடைந்த கு. குயின்குபேசியேட்டசு சுமாரான அளவிலான கொசுவாகும். இது பழுப்பு நிறத்தில் காணப்படும். உடல் நீளமானது சுமார் 3.96 முதல் 4.25 மிமீ வரை இருக்கும். பிரதான உடல் பழுப்பு நிறமாக இருக்கும்போது, உறிஞ்சு குழாய் (புரோபோசிசு), மார்பு பகுதி, இறக்கைகள் மற்றும் டார்சி உடலின் மற்ற பகுதிகளை விட அடர் நிறமாக இருக்கும். தலை வெளிர் பழுப்பு நிறமானது, மையத்தில் வெளிர் நிறப் பகுதி உள்ளது. உணர்கொம்புகளும் உறிஞ்சு குழாயும் சம நீளமுடையன. ஆனால் சில நேரங்களில் உணர்கொம்பு உறிஞ்சு குழாயினைவிட சற்று சிறிய அளவில் இருக்கும். கசையிழை 13 பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவை குறைவான செதில்களோடோ அல்லது செதில்கள் இல்லாமல் காணப்படும். மார்பு பகுதி செதில்கள் குறுகி, வளைந்து காணப்படும். அடிவயிற்றில் டெர்கைட்டின் அடிப்பக்கத்தில் வெளிறிய, குறுகிய, வட்டமான பட்டைகள் உள்ளன. ஆண் கொசுவில் காணப்படும் பெரிய பால்ப்ஸ் மற்றும் இறகு போன்ற உணர்கொம்புகள் பெண்களிடமிருந்து வேறுபடுத்தி அறிய உதவுகிறது.[5]

இதனுடைய இளம் உயிரிக்குக் குறுகிய, தடித்த தலை உள்ளது. வாய்த் தூரிகைகளில் காணப்படும் நீண்ட மஞ்சள் இழைகள் கரிமப் பொருட்களை வடிகட்டுவதற்குப் பயன்படுகிறது. அடிவயிறு எட்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. சைபான் மற்றும் சேணம். ஒவ்வொரு பிரிவிலும் தனித்துவமான சீட்டாக்களைக் கொண்டது. சைபான் அடிவயிற்றின் முதுகு பக்கத்தில் உள்ளது. இது அகலத்தை விட நான்கு மடங்கு நீளமானது. சைபனில் பல சீட்டாக்கள் இணைந்து குஞ்சம் போன்று காணப்படும். சேணம் பீப்பாய் வடிவிலானது; அடிவயிற்றின் வயிற்றுப் புறத்தில் அமைந்துள்ளது. இதில் நான்கு நீண்ட குத பாப்பிலாக்கள் பின்னோக்கி நீண்டு காணப்படும்.[2]

வாழ்க்கை சுழற்சி தொகு

முதிர்ந்த கு. குயின்குபேசியேட்டசு பெண் கொசு இரவு நேரத்தில் ஊட்டச்சத்து நிறைந்த தேங்கி நிற்கும் தண்ணீரைத் தேடிச்சென்று முட்டையிடும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம் உயிரிகள் தண்ணீரில் உள்ள கரிமப் பொருட்களை உணவாக உண்ணுகின்றன. இவற்றின் முழு வளர்ச்சியானது 30° செண்டிகிரேடு வெப்பநிலை உள்ள நீரில் ஐந்து முதல் எட்டு நாட்களில் நிறைவடைகிறது. வளர்நிலையின் நான்காவது பருவ முடிவில் உணவு உண்பதை நிறுத்திக்கொண்டு கூட்டுப்புழு நிலைக்குச் செல்கிறது. 36 மணி இடைவெளிக்குப் பிறகு 27° செண்டிகிரேடு வெப்பநிலையில் முதிர் உயிரியாக வெளிவருகிறது. வளர்ச்சிக் காலமானது வெப்பநிலையைப் பொறுத்து மாறுபடும். ஆண் பெண் கொசுக்கள் சர்க்கரை நிறைந்த உணவை தாவரங்களிலிருந்து பெற்றுக்கொள்கின்றன. இனச்சேர்க்கைக்குப் பிறகு, பெண் கொசுக்கள் பாலூட்டிகள் மற்றும் பறவைகளின் இரத்த உணவை நாடுகிறது. முதுகெலும்புகளின் இரத்தம் கொசுவின் முட்டை வளர்ச்சிக்கு மிக அவசியம். பெண் கொசு தன் வாழ்நாளில் ஐந்து மிதவைத் தொகுதி முட்டைகள் வரை இடும். ஒவ்வொரு மிதவைத் தொகுதியிலும் ஆயிரக்கணக்கான முட்டைகள் உள்ளன. வாழிடக் காலநிலையினைப் பொறுத்து முட்டைகளின் எண்ணிக்கை மாறுபடும். [2]

நோய் கடத்தி தொகு

கு குயின்குபேசியாட்டசு கொசு மனிதர்களுக்கும் காட்டு மற்றும் வீட்டு விலங்குகளுக்கும் பல நோய்களை ஏற்படுத்தும் காரணிகளைப் பரப்பும் கடத்தியாகச் செயல்படுகிறது. இது ஏற்படுத்தும் நோய்களாக நிணநீர் ஃபைலேரியாஸிஸ், பறவை மலேரியா, செயின்ட் லூயிஸ் என்செபாலிடிஸ், வெஸ்டர்ன் எக்வைன் என்செபாலிடிஸ் மற்றும் மேற்கு நைல் காய்ச்சல் உள்ளது. இது இசிக்கா தீநுண்மத்தின் கடத்தியாகவும் உள்ளது.[6] இது இரத்த உணவிற்காக விலங்குகளைக் கடிக்கும்போது நோய்க்கிருமிகளைப் பரப்புகிறது. தெற்கு அமெரிக்காவில், இது செயின்ட் லூயிஸ் என்செபாலிடிஸ் தீநுண்மத்தின் முதன்மை கடத்தியாகும். இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும், இது நிணநீர் ஃபைலேரியாசிஸை ஏற்படுத்தும் நூமாடோடான வுசெரியா பேன்கிராஃப்டியின் முதன்மை கடத்தியாகும். இளம் உயிரிகளுக்குப் புகலிடம் கொடுப்பதன் மூலம் இது ஹெல்மின்த் ஒட்டுண்ணிகளின் இடைநிலை விருந்தோம்பியாக செயல்படுகிறது.[7]ஹவாயில், இது ஏவியன் மலேரியாவின் (பிளாஸ்மோடியம் ரெலிக்டம் ) முதன்மை கடத்தியாகும். வரலாற்று அழிவுகள் மற்றும் ஹவாயின் பூர்வீக தேனீ வளர்ப்பு இனங்களில் குறிப்பிடத்தக்கக் குறைவிற்கு இந்த கொசு காரணமாக உள்ளது. இது மலேரியா ஒட்டுண்ணியின் முதன்மையான விருந்தோம்பியாகும்; ஏனெனில் மலேரியா ஒட்டுண்ணியின் பாலியல் சுழற்சி இந்த கொசுவில் நடைபெறுகிறது. [8]

உயிரிச்சூழ்நிலையியல் தொகு

இந்த கொசுக்கள் தேங்கி நிற்கும் வடிகால்கள், வடிகுட்டைகள், கசிவுகளுடன் கூடிய கழிவுநீர்த் தொட்டிகள், கசிவுப் பள்ளங்கள் மற்றும் அனைத்து மாசுபட்ட கரிம நீர் சேகரிப்பு இடங்களில் இனப்பெருக்கம் செய்கிறது. உகந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில், இதன் வாழ்க்கைச் சுழற்சி 7 நாட்களில் முடிந்து விடுகிறது. இந்த வாழ்க்கைச் சுழற்சியின் நிலைகளாக, முட்டை, இளம் உயிரி, கூட்டுப்புழு, முதிர்ந்த உயிரி என நான்கு நிலைகளை உடையது.

கு. குயின்குபேசியாட்டசின் விருப்ப உணவாக பறவைகளின் இரத்தம் உள்ளது. ஆனால் மனிதர்களையும் கடித்து இரத்தம் உறிஞ்சும் தன்மையுடையது. இவை மரங்கள் மற்றும் உயரமான இடங்களில் ஓய்வெடுக்கும்.[9]

மேற்கோள்கள் தொகு

  1. ‘Very bad news for Brazil’: Zika virus found in second mosquito species by STEPHANIE NOLEN (RIO DE JANEIRO — The Globe) published on July 21, 2016
  2. 2.0 2.1 2.2 Hill, Stephanie; Connelly, Roxanne (2009). "Features Creatures: Southern house mosquito". University of Florida. பார்க்கப்பட்ட நாள் 19 March 2014.
  3. Turell, MJ (2012). "Members of the Culex pipiens complex as vectors of viruses". Journal of the American Mosquito Control Association 28 (4 Suppl): 123–6. doi:10.2987/8756-971X-28.4.123. பப்மெட்:23401952. 
  4. Arensburger, P.; Megy, K.; Waterhouse, R. M.; Abrudan, J.; Amedeo, P.; Antelo, B.; Bartholomay, L.; Bidwell, S. et al. (2010). "Sequencing of Culex quinquefasciatus Establishes a Platform for Mosquito Comparative Genomics". Science 330 (6000): 86–88. doi:10.1126/science.1191864. பப்மெட்:20929810. 
  5. "Brown House Mosquito (Culex quinquefasciatus)". OzAnimals.com. பார்க்கப்பட்ட நாள் 19 March 2014.
  6. Kathy Keatley Garvey. 2016. Are Culex Mosquitoes Potential Vectors of the Zika Virus? Bug Squad, Happenings in the Insect World, http://ucanr.edu/blogs/blogcore/postdetail.cfm?postnum=20369, March 2, 2016.
  7. Albuquerque, Cleide MR; Cavalcanti, Vânia MS; Melo, Maria Alice V; Verçosa, Paulo; Regis, Lêda N; Hurd, Hilary (1999). "Bloodmeal microfilariae density and the uptake and establishment of Wuchereria bancrofti infections in Culex quinquefasciatus and Aedes aegypti". Memórias do Instituto Oswaldo Cruz 94 (5): 591–596. doi:10.1590/S0074-02761999000500005. பப்மெட்:10464399. 
  8. Farajollahi, Ary; Fonseca, Dina M.; Kramer, Laura D.; Marm Kilpatrick, A. (October 2011). ""Bird biting" mosquitoes and human disease: A review of the role of Culex pipiens complex mosquitoes in epidemiology". Infection, Genetics and Evolution 11 (7): 1577–1585. doi:10.1016/j.meegid.2011.08.013. பப்மெட்:21875691. 
  9. Prada, Paulo (2016). "Research indicates another common mosquito may be able to carry Zika". Reuters.

வெளி இணைப்புகள் தொகு