குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டம், 2022

இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், தடுத்து வைக்கப்பட்டவர்கள் மற்றும் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களின் கைவிரல்கள் பதிவுகள், உள்ளங்கை அச்சுப் பதிவுகள், கால்தடப் பதிவுகள், புகைப்படங்கள், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன்கள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகள் மற்றும் அவற்றின் பகுப்பாய்வு, கையொப்பங்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்ட நடத்தை பண்புகளை உள்ளடக்கிய தனிப்பட்ட உயிரியல் தரவுகளை சேகரிக்கவும், சேமித்து வைப்பதற்கும், பகுப்பாய்வு செய்ய காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குவதை இந்த சட்ட முன்மொழிவு பிரிவு 2(1)(பி) கட்ட்டாயப்படுத்துகிறது. இவ்வாறு சேகரிப்பட்ட தரவுகளை தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் சேமிக்கும். சிறைக்கைதிகளின் உடல் மற்றும் உயிரியியல் தரவுகளை 75 ஆண்டுகள் சேமித்து வைக்கும் உரிமையை இந்த சட்ட முன்மொழிவு வழங்கியுள்ளது.[1]

ஒரு பெண் அல்லது குழந்தைக்கு எதிரான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது ஏழாண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தவிர, வேறு எந்தக் குற்றத்திலும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இந்த சட்ட முன்மொழிவின் கீழ் அவரது உயிரியல் மாதிரிகளை எடுக்க அனுமதிக்க மறுக்கலாம் என இச்சட்ட முன்மொழுவு கூறுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து அத்தகைய தரவு சேகரிக்கப்பட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் விசாரணையின்றி விடுவிக்கப்பட்ட பிறகு அல்லது நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகு அல்லது வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எழுத்துப்பூர்வமாக கூறாவிட்டால், அத்தகைய தரவுகள் பதிவுகளிலிருந்து அழிக்கப்படலாம் என இச்சட்ட முன்மொழிவு கூறுகிறது.

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்ட முன்மொழிவு 28 மார்ச் 2022 (திங்கள் கிழமை) அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.[2] சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகளின் உடல் அடையாளங்களை காவல்துறையினர் பதிவு செய்வதற்கு அதிகாரம் வழங்கும் இந்த சட்ட முன்மொழிவு, குடிமக்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகவும், அவர்களின் தனியுரிமை உரிமையை மீறுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியது. குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் எந்த சட்டத்தையும் நாடாளுமன்றம் கொண்டு வர முடியாது என்று வாதிட்டுள்ளது.[3]5 ஏப்ரல் 2022 அன்று மக்களவையில் இந்த சட்ட முன் மொழிவு நிறைவேற்றப்பட்டது.[4] 6 ஏப்ரல் 2022 அன்று மாநிலங்களவையில் இச்சட்ட முன்மொழிவு நிறைவேற்றப்பட்டது.[5]

17 ஏப்ரல் 2022 அன்று இந்த சட்ட முன்மொழிவுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.[6][7]எனவே இச்சட்டத்தை இந்திய அரசு 18 ஏப்ரல் 2022 அன்று அரசிதழில் வெளியிட்டது.[8]

பின்னணி

தொகு

1920-ஆம் ஆண்டு முதல் சிறைக் கைதிகளை அடையாளம் காண்பதற்கு, சிறை அதிகாரிகளால், சிறைவாசிகளின் கைவிரல் ரேகைகள் மற்றும் கால்தட பதிவுகளை மட்டுமே பதிவு செய்யப்பட்டது.

தற்போதைய திருததச் சட்ட முன்மொழிவில், தற்போது நடைமுறையில் உள்ள எந்தச் சட்டத்தின் கீழும் தண்டனைக்குரிய குற்றத்திற்காகத் தண்டனை பெற்றவர்கள், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 107, 108, 109 அல்லது 110 இன் கீழ் நடவடிக்கை எடுப்பதற்காக அல்லது அமைதியைப் பேணுவதற்காகவும், பிரிவு 117இன் கீழ் குற்றத்தைத் தடுக்கும் நோக்கில் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகள் அல்லது பழக்கமான குற்றவாளிகளின் கைவிரல்கள் பதிவுகள், உள்ளங்கை அச்சுப் பதிவுகள், கால்தடப் பதிவுகள், புகைப்படங்கள், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன்கள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகள் மற்றும் அவற்றின் பகுப்பாய்வு, கையொப்பங்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்ட நடத்தை பண்புகளை உள்ளடக்கிய தனிப்பட்ட உயிரியல் தரவுகளை சேகரிக்கவும், சேமிக்கவும், பகுப்பாய்வு செய்யவும் வகை செய்யப்பட்டுள்ளது.

விளக்கம்

தொகு

இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், தண்டனை பெற்றவர்கள் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் கைரேகைகள், கால்தடங்கள், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளின் பகுப்பாய்வு, கையொப்பம் மற்றும் கையெழுத்து, உடல் அளவீடுகளைப் படம் பிடித்து பதிவு செய்யவும் நவீன நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய காவல்துறைக்கு அதிகாரம் தேவை என்று இந்திய அரசு வலியுறுத்துகிறது.

மக்களவையில் 28 மார்ச் 2022 அன்று உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியால் முன்மொழியப்பட்ட 2022 குற்றவியல் நடைமுறை (அடையாளம்) முன்மொழிவுவை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது, தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறுவதாகவும் உள்ளது எனக்கூறி, எதிர்க்கட்சிகள் இச்சட்ட முன்மொழிவை மக்களவையில் அறிமுகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இச்சட்ட முன்மொழிவை மக்களவையில் முன்வைப்பதற்கு ஆதரவாக 120 மக்களவை உறுப்பினர்களும், எதிராக 58 உறுப்பினர்களும் வாக்களித்தனர். எனவே அன்றே இச்சட்ட முன்மொழிவு மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

குற்றங்களைத் தீர்க்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய தரத்திற்கு ஏற்ப அதைக் கொண்டுவருவதற்கும் இந்த சட்டமுன்மொழிவு அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று மத்திய அரசு கருதுகிறது. கைரேகைகள், கருவிழி ஸ்கேன் மற்றும் முக அங்கீகார அமைப்புகளை தரவுத்தளத்தில் ஒருங்கிணைப்பதை, குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு மற்றும் வலைமைப்பு (CCTNS) எனப்படும் தேசிய தரவுத்தளத்தில் ஒருங்கிணைத்து மின்னணு மயமாக்குவதன் மூலம் அடையாளம் காணும் செயல்முறை முந்தைய இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது என அமைச்சர் கூறினார்.

இந்த சட்டமுன்மொழிவு குற்றவியல் விவகாரங்களில் அடையாளம் காணுதல் மற்றும் விசாரணை நோக்கங்களுக்காக குற்றவாளிகள் மற்றும் பிற நபர்களின் அளவீடுகளை எடுப்பதற்கும், பதிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்றும் விசயங்களைப் பாதுகாப்பதற்கும் அங்கீகாரம் அளிக்கிறது என்று கூறுகிறது. குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா பின்வருவனவற்றையும் கூறுகிறது. விரல் பதிவுகள், உள்ளங்கை-அச்சு மற்றும் கால்-அச்சு பதிவுகள், புகைப்படங்கள், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன், உடல், உயிரியல் மாதிரிகள் மற்றும் அவற்றின் பகுப்பாய்வு போன்றவற்றை உள்ளடக்கிய "அளவீடுகளை" வரையறுக்கவும், அளவீடுகளின் பதிவேடுகளை சேகரித்து, சேமித்து, பாதுகாத்து, பகிர்தல், பரப்புதல், அழித்தல் மற்றும் பதிவேடுகளை அகற்றுதல் ஆகியவற்றுக்கு தேசிய குற்றப்பதிவுப் பணியகத்திற்கு (NCRB) அதிகாரம் அளிப்பது.

எந்த ஒரு நபரும் அளவீடுகளை வழங்குவதற்கு ஒரு நீதித்துறை நடுவருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. ஒரு நீதித்துறை நடுவர் ஒரு குறிப்பிட்ட வகை குற்றவாளிகள் மற்றும் தண்டனை பெறாத நபர்களின் விஷயத்தில் கைரேகைகள், கால் தடங்கள் மற்றும் புகைப்படங்களை சேகரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகளை வழிநடத்தலாம்.

அளவீடுகளை கொடுக்க மறுக்கும் எந்தவொரு நபரின் அளவீடுகளையும் எடுக்க காவல்துறை அல்லது சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. பகுப்பாய்வின் நோக்கங்களுக்காக, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 இன் பிரிவு 53 அல்லது பிரிவு 53A இல் குறிப்பிடப்பட்டுள்ள கையொப்பங்கள், கையெழுத்து அல்லது பிற நடத்தை பண்புகளை பதிவு செய்யவும் இந்த சட்டமுன்மொழிவு காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்தச் சட்டத்தின் கீழ் அளவீடுகளை எடுப்பதற்கு எதிர்ப்பு அல்லது அனுமதி மறுப்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 186 இன் கீழ் குற்றமாகக் கருதப்படும். மத்திய அரசு அல்லது மாநில அரசு, அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிப்பின் மூலம், இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான விதிகளை உருவாக்கலாம்.

சட்ட முன்மொழிவு குறித்தான சர்ச்சைகள்

தொகு

இச்சட்ட முன்மொழிவில் பல விதிகள் வரையறுக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக இச்சட்ட முன்மொழிவு குற்றவாளிகள் மற்றும் பிற நபர்களுக்கான அளவீடுகளை சேகரிப்பதை குறிப்பிடுகிறது. பிற நபர்கள் என்பவர்கள் யார் என்பது குறித்து தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 107, 108, 109 அல்லது 110 இன் கீழ் நடவடிக்கை எடுப்பதற்காக, நல்ல நடத்தைக்காக அல்லது அமைதியைப் பேணுவதற்காக இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117 இன் கீழ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டவர்களை பயோமெட்ரிக் தரவைப் பகிர கட்டாயப்படுத்தப்படுவதை இந்த சட்ட முன்மொழிவு அனுமதிக்கிறது. இந்த விதிகள் தனிநபர்களின் வரம்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதுவரை எந்தவொரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்படாதவர்கள், ஆனால் சந்தேகத்திற்குரியவர்கள் அல்லது ஒன்றைச் செய்ய சாத்தியமானவர்களை இந்த சட்ட முன்மொழிவு உள்ளடக்குகிறது.[9]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு