குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை

(குளிக்கரை பிச்சையப்பா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குழிக்கரை சேதுப்பிள்ளை பிச்சையப்பா பிள்ளை (Kulikkarai Sethuppillai Pichaiappa Pillai, 19 மார்ச் 1913 – 29 அக்டோபர் 1979) ஒரு தென்னிந்திய நாதஸ்வரக் கலைஞர் ஆவார்.[1]

குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை
1944 இல் பிச்சையப்பா பிள்ளை
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பிச்சையப்பா
பிற பெயர்கள்குளிக்கரை பிச்சையப்பா
பிறப்பு(1913-03-19)19 மார்ச்சு 1913
குழிக்கரை, திருவாரூர் மாவட்டம், சென்னை மாகாணம்
இறப்பு29 அக்டோபர் 1979(1979-10-29) (அகவை 66)
குழிக்கரை
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)நாதசுவரக் கலைஞர்
இசைக்கருவி(கள்)நாதசுவரம்

இளமைக் காலம்

தொகு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோட்டம், கூத்தாநல்லூர் வட்டம், குழிக்கரை என்ற கிராமத்தில், நாதஸ்வரக் கலைஞர் சேதுப்பிள்ளை, ஆயிப்பொன்னம்மாள் தம்பதியருக்கு ஒரே மகனாக 1913 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந் திகதி பிறந்தார்.[1]

இசைப் பயிற்சி

தொகு

இவரது சிற்றப்பாவான பெருமாள் பிள்ளையிடம் நாதஸ்வரம் பயில ஆரம்பித்தார். பின்னர் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் கீர்த்தனைகளை பாடம் செய்து அவற்றைத் தாமாகவே ஸ்வரக்கோவை செய்து நாதஸ்வரத்தில் கீர்த்தனைகளை வாசித்து வந்தார். பல நாதஸ்வரக் கலைஞர்கள் கீர்த்தனைகளின் ஸ்வரங்களை மட்டும் பாடம் செய்து வாசிப்பார்கள். இவர் அப்படியல்லாமல் கீர்த்தனைகளை முழுவதுமாகப் பாடம் செய்து பல தடவைகள் அக்கீர்த்தனைகளைப் பாடிப்பாடி சாதகம் செய்தபின்னரே ஸ்வரம் அமைத்து நாதஸ்வரத்தில் வாசிப்பார். அதனால் இவர் கீர்த்தனைகளை வாசிக்கும்போது வாய்ப்பாட்டு கேட்பதுபோலத் துல்லியமாக இருக்கும். தமிழ் இசையில் ஆர்வம் கொண்ட இவர் எம். எம். தண்டபாணி தேசிகர், திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை, டி. எம். தியாகராஜன் போன்றோரிடம் பல உருப்படிகளைக் கற்றுக்கொண்டார்.[1]

தொழில் வாழ்க்கை

தொகு

சிற்றப்பாவின் மகனான குழிக்கரை காளிதாஸ் பிள்ளையுடன் இணைந்து நாதஸ்வர இசைக் கச்சேரிகள் செய்யத் தொடங்கினார். பின்னர் தனியாக ஒரு குழுவை அமைத்துக்கொண்டு கச்சேரிகள் செய்தார். ராகமாலிகை கீர்த்தனைகளை வாசிக்கும்போது வெறுமனே பல ராகங்களை ஒன்றன்பின் ஒன்றாக வாசிக்க மாட்டார். பல்லவி எந்த ராகத்தில் அமைந்திருக்கிறதோ அதற்கு ஏற்ற ராகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிப்பார். திருக்குறளைக் கூட ராகமாலிகையாக வாசித்திருக்கிறார். இதனால் இவரது கச்சேரிகள் தனித்துவமாக அமைந்தன.[1]

குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள்

தொகு

ஒரு சமயம் அப்போதைய இந்தியப் பிரதமர் நேருவுக்கு இவரை "தமிழகத்தின் பிஸ்மில்லா கான்" என அறிமுகப்படுத்தினார்கள். நேருவுக்கு மிகவும் பிடித்த சில பாடல்களை இவர் நாதஸ்வரத்தில் வாசித்தார். நேரு இவரது நாதஸ்வரத்தை வாங்கித் தமது மடியில் வைத்து அதனைத் தடவிக் கொடுத்து பிச்சையப்பாவை மிகவும் பாராட்டினார்.

எஸ். எஸ். வாசன் தன் மகளின் திருமணத்திற்கு நாதஸ்வரம் வாசிக்க டி. என். ராஜரத்தினம் பிள்ளை, பி. எஸ். வீருசாமி பிள்ளை ஆகியோருடன் பிச்சையப்பா பிள்ளையையும் ஏற்பாடு செய்திருந்தார். கல்யாண வைபவத்தின்போது ஊஞ்சல் பாட்டை எம். எஸ். சுப்புலட்சுமியும் எம். எல். வசந்தகுமாரியும் இணைந்து பாட ராஜரத்தினம் பிள்ளையும், பிச்சையப்பா பிள்ளையும் அதனை நாதஸ்வரத்தில் வாசித்தனர்.

1960 ஆம் ஆண்டு வெளியான குறவஞ்சி திரைப்படத்திலும் பிச்சையப்பா பிள்ளை நாதசுவரம் வாசித்திருக்கிறார்.[2]

இலங்கையில் நாதசுவரக் கச்சேரி

தொகு

இலங்கை யாழ்ப்பாணத்தில் 1951 ஆம் ஆண்டு ஒரு தமிழ் விழா நடைபெற்றது. அப்போது தமிழ் ஓலைச் சுவடிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றார்கள். அந்த ஊர்வலத்திலும், பின்னர் விழா அரங்கிலும் பிச்சையப்பா தன் குழுவினருடன் நாதஸ்வரக் கச்சேரி செய்தார். இதைப்பற்றிப் பின்னர் கட்டுரை எழுதிய பேராசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி, "ஸ்ரீ பிச்சையப்பா அன்றைய தினம் பொழிந்த இசை வெள்ளம் இன்னமும் யாழ்ப்பாண வீதிகளில் ஓடிக்கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்" என சிலாகித்து எழுதினார்.[3]

விருதுகள்

தொகு
  • திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக இருந்து பல சாதராக்களும், தங்கப் பதக்கங்களும் பெற்றார்.
  • இந்தியப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு வழங்கிய தங்கப் பதக்கம்
  • இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி வழங்கிய "அகில பாரத நாதஸ்வர சக்கரவர்த்தி" விருது
  • தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருது.[1]

குடும்ப வாழ்க்கை

தொகு

இவருக்கு இரு மனைவியர். முதல் மனைவி இவரது தாய் மாமனான திருவாரூர் நாராயணஸ்வாமி நாகஸ்வரக்காரரின் மகள் ஆவார். இரண்டாவது மனைவி திருக்கண்ணமங்கை வீராசாமி தவில்காரரின் மகள் ராஜாயி ஆவார். இவரது குழந்தைகள் 2 மகன்களும் 4 மகள்களும் ஆவர். இவரது மகன் கே. எஸ். பி. விஸ்வலிங்கம் ஒரு பாட்டுக் கலைஞர். சென்னை, புதுச்சேரி வானொலி நிலையங்களில் பணியாற்றியவர்.[1]

மறைவு

தொகு

குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை 1979 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் நாள் தன் சொந்த ஊரில் காலமானார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 பி. எம். சுந்தரம் (ஜூன் 2001). மங்கல இசை மன்னர்கள் (முதல் ed.). சென்னை: மணிவாசகர் பதிப்பகம் 044 25361039. pp. 191–193. {{cite book}}: Check date values in: |publication-date= (help)
  2. பி. பஞ்சாபகேசன். "பிச்சையப்பா பிள்ளை". தென்றல் மே 2019. Archived from the original on 2022-01-23. பார்க்கப்பட்ட நாள் 23 ஜனவரி 2022. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. கல்கி (பிப்ரவரி 1957). தெய்வ தரிசனம் (முதல் ed.). சென்னை: பாரதி பதிப்பகம், தியாகராயநகரம், சென்னை-17. p. 27. {{cite book}}: Check date values in: |publication-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு