டி. என். ராஜரத்தினம் பிள்ளை
திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை என்று பரவலாக அறியப்பட்ட டி. என். ராஜரத்தினம் பிள்ளை (1898-1956) ஒரு நாதசுரக் கலைஞர் ஆவார். நாதசுரச் சக்கரவர்த்தி எனப் பலரும் குறிப்பிடும் அளவுக்கு மிகுந்த புகழுடன் விளங்கினார். சில தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
பெயர்க் காரணம்தொகு
ராஜரத்தினம் பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருமருகல் என்னும் ஊரில் 1898 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். திருமருகல் நடேசபிள்ளை நாதசுவரக்காரருக்கு வளர்ப்புப் பிள்ளையாகி திருமருகல் நடேசபிள்ளை மகன், ‘டி.என்.ராஜரத்தினம்’ ஆனார்.
வாழ்க்கைக் குறிப்புதொகு
பதினேழாவது திருவாவடுதுறை ஆதீனம் திருமருகல் வந்தபோது, நடேசபிள்ளை வாசிப்பைக் கேட்டு, அவரைத் திருவாவடுதுறை வரச்செய்து ‘ஆதீன வித்வான்’ ஆக்கினார். ராஜரத்தினத்திற்கு ஐந்து வயதாகும்போது நடேசபிள்ளை காலமானார். வயலின் மேதை திருக்கோடிக்காவல் ‘பிடில்’ கிருஷ்ணய்யரிடம் ராஜரத்தினம் சங்கீதம் பயின்றார். பின்னர், எட்டு வயதில் கோனேரிராஜபுரம் ஸ்ரீ வைத்தியநாதையரிடம் பயின்றார். ஒன்பதாவது வயதில், நன்னிலத்தில் இவரது பாட்டுக் கச்சேரி அரங்கேறியது. பாடும்போது, தொண்டை புண்ணானதால், சன்னிதானம் இவரை நாதஸ்வரம் கற்கச் சொன்னார்.
முதலில் மடத்து நாதஸ்வரக்காரர் மார்க்கண்டேயம் பிள்ளையிடமும் பின்னர், அம்மாசத்திரம் கண்ணுசுவாமி பிள்ளையிடமும் கீரனூர் முத்துப்பிள்ளை நாயனக்காரரிடமும் வாசிப்பு முறையைக் கற்றார். ‘டி.என்.ஆர்’க்குத் கீர்த்தனைகளை வாசிக்கச் சொல்லிக் கொடுத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர், மு.கருணாநிதியின் தந்தை முத்துவேலர். சன்னிதானம் தொடக்கத்தில் மடத்து காலை பூஜையில் வாசிக்க இவருக்கு அனுமதி அளித்தார். திருமாளிகைத் தேவர் சன்னதியில் பெருங்கூட்டத்திற்கு இடையில், பெரிய வித்வான்களின் லாகவத்தோடும், தனி முத்திரையோடும், யாருடைய பாணியையும் பின்பற்றாமல் இவர் பூபாள ராகத்தை வாசிக்கலானார்.
இவருக்கு ஐந்து மனைவியர். ஆனால் குழந்தைகள் இல்லை. வளர்ப்பு மகன் பெயர் சிவாஜி. 1956 டிசம்பர் 12ஆம் தேதி, ராஜரத்தினம் பிள்ளை மாரடைப்பால் காலமானபோது, என். எஸ். கிருஷ்ணன், எம். ஆர். ராதா முதலானோர் உடனிருந்தனர். கவிஞர் கண்ணதாசன் இரங்கற்பா எழுதினார்.
சிறப்புகள்தொகு
- ஏ. வி. எம் செட்டியார் பிள்ளை பல மணி நேரம் வாசிக்கும் புகழ்பெற்ற 'தோடி' ராகத்தைப் பதிவு செய்து ஆறரை நிமிடத்தில் இசைக்கும் ரிக்கார்டு பிளேட்டை வெளியிட்டார். அது உலகெங்கும் விற்றுச் சாதனை படைத்தது.
- 1955 ஜனவரி 21-இல் ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சோஷலிசப் பிரகடன மாநாட்டின்போது, முதல் நாளன்று காங்கிரஸ் தலைவரை வரவேற்க நடந்த ஊர்வலத்தின் முன்னே, நடந்தவாறு நாதஸ்வரம் வாசித்துச் சென்றவர்களுள் ஒருவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை
- 1947 ஆகஸ்ட் 15-இல் இந்தியா ஏகாதிபத்திய பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற போது வானொலியில் ராஜரத்தினம் பிள்ளையின் மங்கல இசையே ஒலிபரப்பானது.[1]
- நாதஸ்வரக் கலைஞர்களுள் முதன்முதலில் ‘கிராப்’ வைத்துக் கொண்டவர் இவரே. கோட், ஷர்வாணி, சுர்வால் முதலிய உடைகளை அணிந்து, காலில் ஷூ போட்டுக்கொண்டு தான் வாசிப்பார்.
- நாதஸ்வரத்துக்குத் ‘தம்புரா’வைச் சுருதியாகக் கொண்டு, மிருதங்கம், வீணை, கஞ்சிரா இவற்றுடன் புதுமையாகக் கச்சேரிகள் செய்தார்.
விருதுகள்தொகு
இவற்றையும் பார்க்கவும்தொகு
மேற்கோள்தொகு
- ↑ புகழ் பெற்ற நாதசுவரக் கலைஞர்கள்
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018. http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
வெளியிணைப்புகள்தொகு
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: டி. என். ராஜரத்தினம் பிள்ளை |