குழிவீடு
குழிவீடு (Pit-house) என்பது, பகுதியாக நிலத்தின் கீழ் அமைந்து கூரையால் மூடப்பட்டிருக்கும் கட்டிடம் ஆகும்.[1] மனிதருக்குக் கடுமையான வெப்பதட்ப நிலைகளில் இருந்து பாதுகாப்பு வழங்கும் அதேவேளை, இத்தகைய அமைப்புக்கள் உணவுப் பொருட்களைக் களஞ்சியப்படுத்துவதற்கும்; கதை சொல்லுதல், ஆடுதல், பாடுதல், கொண்டாட்டங்கள் போன்ற பண்பாட்டுச் செயற்பாடுகளுக்கும் பயன்பட்டுள்ளன.
இவ்வகை அமைப்புக்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பண்பாடுகளில் காணப்படுகின்றன. பண்டைய புவெப்லோக்கள், பண்டைய பிரிமொண்ட் மற்றும் மங்கோலிய மக்கள், செரோக்கீ மக்கள், இனுவிட்டுகள், சமவெளி மக்கள், வியோமிங்கில் வசித்த பழங்கால மக்கள் போன்றோர் உள்ளிட்ட தென்மேற்கு அமெரிக்க மக்கள்; தென் அமெரிக்காவில் உள்ள தித்திக்காக்கா வடிநிலப் பகுதியில் வாழ்ந்த பழங்கால மக்கள்; ஐரோப்பாவில் வாழ்ந்த ஆங்கிலோ-சாக்சன் மக்கள்; சப்பானின் யோமொன் மக்கள் போன்றோர் இவர்களுள் அடங்குவர். ஆங்கிலோ-சாக்சன் குழிவீடுகள் வசிப்பதற்காக மட்டுமன்றி வேறு செயற்பாடுகளுக்கும் பயன்பட்டிருக்கக்கூடும்.
பழங்காலக் குழிவீடுகளில் எஞ்சியிருப்பவை நிலத்தில் வெட்டப்பட்ட குழிகளும், இருக்கக்கூடிய தூண்குழிகளும் மட்டுமே. பெரும்பாலான வரலாற்றுக்கு முந்தியகால மக்கள் குழிவீடுகளிலேயே வாழ்ந்திருக்கக்கூடும் என 19 ஆம் நூற்றாண்டின் ஆய்வாளர்கள் நம்பினர். ஆனாலும் பின்னர், வீடுகளாக இருக்கும் எனக் கருதப்பட்ட அமைப்புக்கள் கழஞ்சியக் குழிகள் அல்லது வேறு செயற்பாடுகளுக்குப் பயன்பட்டவை என அறியப்பட்டது.
மாமூத் எலும்பு வீடுகள்
தொகுமிகப்பழைய குழிவீடுகள் மத்திய உக்ரேனில் உள்ள மெசிரிச் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை 15,000 ஆண்டுகளுக்கு முந்திய மேல் பழங்கற்காலத்தைச் சேர்ந்தவை. இவ்வீடுகள், மாமூத் எலும்புகளால் ஆனவை. இதன் அடிப்பகுதி 12 தொடக்கம் 14 அடிகள் (4-6 மீட்டர்கள்) வரை விட்டம் கொண்ட வட்டம் அல்லது நீள்வட்ட வடிவமானவை. கால், கைகளுக்கு உரிய எலும்புகள் சுவர்ப் பகுதிக்கும், எடை குறைந்த தட்டையான எலும்புகள் கூரைக்கும் பயன்படுத்தப்பட்டன. வெப்பக் காப்புக்காக விலங்குத் தோலால் வெளிப்புறம் மூடப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கணப்பு இருந்தது. ஒரு மைய அமைப்பைச் சுற்றிப் பல வீடுகள் அமைக்கப்பட்டன. இவ்வீடுகள், குடும்பத்தினர் அல்லது உறவினர் இவ்வீடுகளில் வசித்தனர்.[2]
தொடக்க மத்தியகால ஐரோப்பா
தொகுகிபி 5 ஆம் நூற்றாண்டுக்கும், 12 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வட ஐரோப்பாவின் பல பகுதிகளில் குழிவீடுகள் கட்டப்பட்டன. செருமனியில் இது "குரூபென்ஃகவுசெர்" எனவும், ஐக்கிய இராச்சியத்தில் சில வேளைகளில் இது "கிரப்ஃகட்" அல்லது "கிரப்ஃகவுஸ்" என அழைக்கப்பட்டது.
தொல்லியல் சான்றுகளின்படி ஆழம் குறைவான செவ்வகக் குழிகளைக் கொண்டவையாக இவை அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. குழிகளின் ஆழம் வேறுபட்டுக் காணப்பட்டது. சில 0.25 மீ X 2 மீ X 1.5 மீ அளவு கொண்டவையாக இருக்க, ஐக்கிய இராச்சியத்தில் மேற்கொள்ளப்பட்ட சில அண்மைக்கால அகழ்வாய்வுகளில் 3.7 மீ - 4.44 மீ X 2.72 மீ - 3.5 மீ X 0.58 மீ X 0.97 மீ ஆழம் கொண்ட குழிவீடுகளைக் கண்டறிந்துள்ளனர். இக்குழிகளுள் நீள அச்சின் இரு முனைகளிலும் இரண்டு தூண்கள் தூண்குழிகளுக்குள் நாட்டப்பட்டிருந்தன. குழிகளுக்கு மேல் மரத்தால் ஆன தளம் இருந்தது எனவும் அதன் கீழுள்ள பகுதி பொருட்களைக் களஞ்சியப்படுத்தப் பயன்பட்டது எனவும் சில தொல்லியலாளர் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆனால், வேறு சிலர் இவ்வாறான வீடுகள் மேல் தளம் ஒன்றைக் கொண்டிருக்கவில்லை எனக் கூறுகின்றனர். மரத் தூண்களால் தாங்கப்பட்ட கோம்பைக் கூரை குழிவீட்டை மூடியிருந்தது. இவ்வீடுகளுக்குச் சாளரங்கள் இருக்கவில்லை. ஆனால், ஒரு முனையில் கதவு இருந்தது. ஐக்கிய இராச்சியத்தில் வெஸ்ட் இசுட்டோ என்னும் இடத்தில் 1970 இல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் காக்கப்பட்ட நிலையில் இருந்த கருகிய மரப் பலகைகள் கிடைத்தன. இது மரத்தாலான மேல் தளம் இருந்ததற்கான சான்றாக இருக்கக்கூடும். இங்கே கணப்பும் காணப்பட்டது. இது குழியின் விளிம்பில் பகுதியாக இருக்கக் காணப்பட்டது.
"குரூபென்ஃகவுசெர்"கள் பெரும்பாலும் வசிப்பிடங்கள் எனவே புரிந்துகொள்ளப்பட்டது. இருந்தாலும், குறிப்பாக பிரதேச அளவில் இவற்றுக்குப் பல்வேறு பயன்பாடுகள் இருந்திருக்கக்கூடும். மேற்கு ஐரோப்பாவில் அவற்றின் சிறிய அளவும், அவை வேறு கட்டிடங்களுக்கு அண்மையில் காணப்படுவதும், தறிகளோடு தொடர்பான பொருட்கள் அருகில் கண்டுபிடிக்கப்பட்டதும், இவை நெசவு வேலைக்குப் பயன்பட்டிருக்கலாம் என்ற கருத்துக்கும் இடம் தருகிறது. கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த சிலவோனியப் பகுதிகளில் இக்குழிவீடுகள் பெரிய அளவுள்ளவை. இவற்றில் கணப்புகளும் காணப்பட்டன.
பல திறந்தவெளி அருங்காட்சியகங்களில் குழிவீடுகளின் மீட்டுருவாக்கங்கள் காணப்படுகின்றன. இட்சாக்கர் தொல்லியல் மையம், கல்கிரீசு அருங்காட்சியகமும் பூங்காவும், ஆர்லிங்குசென் தொல்லியல் திறந்தவெளி அருங்காட்சியகம், ஓச்டோர்ஃப் குழுத்தலைவனின் சமாதி ஆகியவை இவற்றுக்கு எடுத்துக்காட்டு.
வட அமெரிக்காவில் குழிவீடுகள்
தொகுபசிபிக் வடமேற்கின் உப்ககுதிகள் முழுவதிலும், தாயக மக்கள் கோடை காலங்களில் நாடோடிகளாக இருந்தனர். அவர்கள் பருவகாலத்தையும், மரபையும் பொறுத்து, வெவ்வேறு இடங்களில் வளங்களைச் சேகரித்தனர். குளிர் காலத்தில் உயரம் குறைந்த நிலப்பகுதியில், நிரந்தரமாக குழிவீடுகளில் வாழ்ந்தனர். பெரும்பாலும் இவ்வாறான வீடுகள், கொலம்பியா, பிரேசர் போன்ற முக்கியமான ஆறுகள், துணையாறுகள் போன்றவற்றின் ஓரமாக அமைந்திருந்தன. இவை பெரும்பாலும் வட்டமாகவும், சிறியனவாகவும் இருந்தன. மழை உள்ளே வராமல் தடுக்கவும் வெப்பம் உள்ளிருந்து வெளிச் செல்லாமல் காக்கவும் இவ்வீடுகள் பல படைகள் கொண்ட "தூல்" (tule) பாய்களால் மூடப்பட்டிருப்பது வழக்கம். உள்ளேயிருக்கும் புகை வெளியேற நடுவில் ஒரு புகைத்துளை இருக்கும். வீடுகளின் உள்ளே சூடாக இருந்தாலும் அளவுக்கு அதிகமான புகை காணப்படும்.[3]
வடமேற்குப் பெரும் சமவெளிகளிலும், அண்மையில் காணப்படும் மேட்டுநிலப் பகுதிகளிலும் தட்பவெப்பநிலை மாற்றங்களும், கடும் வெப்பநிலையோடு கூடிய காலநிலையும் ஆண்டு முழுவதும் வாழ்வதைக் கடினமாக்குகின்றன. கோடையில் தேவையானபோது எடுத்துச் செல்லத்தக்க எளிமையான கூடாரம் போன்ற அமைப்புக்களில் வாழும் மக்களுக்கு, குளிரான மாதங்களில் குழிவீடுகள் வெப்பத்தையும், பாதுகாப்பையும் கொடுக்கின்றன.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pit house" in the online Merriam Webster's Dictionary
- ↑ Hoffecker, John A Prehistory of the North: Human Settlement of the Higher Latitudes Rutgers, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8135-3468-2|url=[1]
- ↑ Lithic design and Technoloigical Organization in Housepit 1 of the S7istken Site, Middle Fraser Canyon, British Columbia By Matthew Mattes http://etd.lib.umt.edu/theses/available/etd-04272014-161759/unrestricted/Thesis.pdf பரணிடப்பட்டது 2016-03-15 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Snow, Dean (2010). Archaeology of Native North America. Upper Saddle River, NJ: Prentice Hall. pp. 261. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 013615686X.