கு. கோதண்டபாணி பிள்ளை

ராவ் சாகிப் கு. கோதண்டபாணி (29 அக்டோபர் 1896 - 9 சனவரி 1979) என்பவர் ஒரு தமிழறிஞர், தமிழ் எழுத்தாளர் ஆவார் . அவர் அரசுப் பணியில் இருந்து கொண்டே தமிழ்ப்பணி ஆற்றியுள்ளார்.

K Kothandapani Pillai
Rao Sahib K Kothandapani Pillai

பிறப்பும் வாழ்வும்தொகு

அவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள செம்மங்குடியில் 29-10-1896 அன்று பிறந்தார். பெற்றோர்: குப்புசாமி-வள்ளியம்மை. குடவாசல் வட்டம் விடையல் கருப்பூரில் பள்ளிக்கல்வியை முடித்தார். திருச்சி புனித சூசையப்பர் கல்லூரி யில் பி.ஏ பட்டம் பெற்றுள்ளார். தமிழார்வம் மிகுந்த இவர், பின்னத்தூர் நாராயணசாமி, பண்டித சௌரிராஜன் ஆகியோரிடம் தமிழ் கற்றுள்ளார்.

ஆற்றிய பணிகள்தொகு

முதலில் வட்டாட்சித் துணைத் தலைவராகப் பணியேற்ற இவர், மாவட்ட ஆட்சி தலைவருக்கு இணையான பதவி உயர்வு பெற்றார். சில ஆண்டுகள் அயல்நாட்டுச் செல்கைக் கட்டுப்பாட்டாளராகவும் (controller of emigration) பணியாற்றியுள்ளார். பணி ஓய்வுக்குப் பின்னர் இரயில்வே பணிக்குழு உறுப்பினராகவும், அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆய்வுத்துறையிலும் பணியாற்றியுள்ளார். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மூலம் வெளிவரும்,செந்தமிழ்ச் செல்வி இதழில் இவரது எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

இயற்றிய நூல்கள்தொகு

இவர் முதல் படைப்பானது ருஷிய நாட்டு பேரறிஞர் டால்ஸ்டாய் எழுதிய மூன்று சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பாகும் . இந்நூல் கதைமணிக்கோவை என்ற பெயரில் 1932 ஆண்டு வெளிவந்தது.இவர் எழுதிய,மங்கையர்க்கரசியார் பங்கயச்செல்வி ஆகிய இரண்டு நாடக நூல்களும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடநூல்களாக வைக்கப்பட்டிருந்தன.[1] திருக்குறளில் ஒரு குறட்பாவில் இடம்பெறும் உவமையை மட்டும் கொண்டு 200 பக்கங்களுக்கு மேல் இவர் எழுதிய நூல், முதற்குறள் உவமை என்பதாகும். திருக்குறளை நினைவூட்டும் வகையில்,ஈரடி இருநூறு எனும் நூல் எழுதியுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மெய்ப்பாட்டியல் குறித்து இவர் ஆற்றிய சொற்பொழிவு,கம்பரும் மெய்ப்பாட்டியலும் எனும் பெயரில் நூலாக வெளிவந்தது.[2] இவர் எழுதிய,பழந்தமிழிசை எனும் நூல் இசை நுட்பங்களை வெளிபடுத்தும் நாலாகும்.

மொழிபெயர்ப்புதொகு

மேநாட்டுத் தத்துவம் குறித்து முன்னாள் ஜனாதிபதி எஸ்.இராதாகிருஷ்ணன் எழுதிய ஆங்கில நூலை இவர்,மேலை நாட்டுத் தத்துவ வரலாறு எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

மறைவுதொகு

ஆங்கில அரசாங்கத்தால்,'இராவ் சாகிப்' எனும் பட்டம் பெற்ற இவர் 09-01-1979 அன்று மறைந்தார்.

மேற்கோள்கள்தொகு

  1. தமிழாராய்ச்சி வல்லுநர் கு.கோதண்டபாணியார் மறைவு "செந்தமிழ்ச் செல்வி" இதழ்,சிலம்பு 53, பக்கம்-307.
  2. ச.தண்டபாணி தேசிகரின் தகுதிநயத்தல்,' முதற்குறள் உவமை' எனும் கட்டுரை,பக்கம்-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._கோதண்டபாணி_பிள்ளை&oldid=3111983" இருந்து மீள்விக்கப்பட்டது