கெஷ்டாபோ

(கெசுட்டாப்போ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கெசுட்டாப்போ அல்லது கெஷ்டாபோ அல்லது கெஸ்டாபோ (Gestapo /ɡəˈstɑːp/ gə-STAH-poh, இடாய்ச்சு: [ɡəˈʃtaːpo]  ( கேட்க)),[3] என்பது இடாய்ச்சு மொழியில் கெஹைம ஷ்டாட்பொலிட்சை (Geheime Staatspolizei (டாய்ச்சு ஒலிப்பு: [ɡəˈhaɪmə ˈʃtaːtspoliˌtsaɪ]  ( கேட்க); மொ.பெ. "Secret State Police", (மறைநிலை தேசிய காவல்துறை) எனப்படும் நாட்சி ஜெர்மனி மற்றும் ஜெர்மன் ஆளுகைக்குட்பட்ட ஐரோப்பாவின் அலுவல்முறை மறைநிலை காவல்துறையின் சுருக்கமான பெயராகும்.

கெஷ்டாபோ
Geheime Staatspolizei

8 இளவரசர் ஆல்ப்ரெக்ட் தெருவில் இருந்த கெஷ்டாப்போவின் தலைமையகம்(1933)
துறை மேலோட்டம்
அமைப்பு26 ஏப்ரல் 1933; 91 ஆண்டுகள் முன்னர் (1933-04-26)
முன்னிருந்த அமைப்பு
  • புருசிய மறைநிலைக் காவல்துறை (தோற்றுவிக்கப்பட்டது 1851)
கலைப்பு8 மே 1945; 79 ஆண்டுகள் முன்னர் (1945-05-08)
வகைமறைநிலை காவல்துறை
ஆட்சி எல்லைஜெர்மனி மற்றும் ஜெர்மானிய ஆளுகைக்குட்பட்ட ஐரோப்பு
தலைமையகம்8 இளவரசர் ஆல்ப்ரெக்ட் தெரு, பெர்லின்
52°30′25″N 13°22′58″E / 52.50694°N 13.38278°E / 52.50694; 13.38278
பணியாட்கள்32,000 (1944 மதிப்பீடு.)[1]
பொறுப்பான அமைச்சர்கள்
  • எர்மன் கோரிங் 1933–1934, புருசியாவின் அமைச்ச அதிபர்
  • வில்லெம் விரிக் 1936–1943, உள்துறை அமைச்சர்
  • ஹைன்ரிச் ஹிம்லர், ஜெர்மானிய காவல்துறையின் தலைவர், 1936–1945; உள்துறை அமைச்சர், 1943–1945
அமைப்பு தலைமைகள்
  • ருடால்வ் டீல்ஸ் (1933–1934)[2]
  • ரைன்ஹார்ட் ஹேட்ரிக் (1934–1939)
  • ஐன்ரிக் முல்லர் (1939–1945)
மூல அமைப்பு
  • ஷுட்ஸ்டோஃவல்
  • அரசு பாதுகாப்புக்கான முதன்மை அலுவலகம்
  • ஜெர்மானிய பாதுகாப்புக் காவல்துறை

இந்தப் படையை எர்மன் கோரிங் 1933-ஆம் ஆண்டு புருஷ்யாவின் பல அரசியல் காவல் முகமைகளை ஒன்றிணைத்து ஒரு அமைப்பாக உருவாக்கினார். 20 ஏப்ரல் 1934-இல் கெஷ்டாபோவின் மேற்பார்வை ஷுட்ஸ்டோஃவல்லின் தலைவரான ஹைன்ரிக் ஹிம்லரிடம் கொடுக்கப்பட்டது. அவரை 1936-ஆம் ஆண்டு ஹிட்லர் ஜெர்மன் காவல்துறையின் தலைவராக நியமித்தார். புருஷ்யாவுக்கு மட்டுமேயான முகமையாக இருப்பதற்கு மாறாக, ஜெர்மானிய பாதுகாப்புக் காவல்துறையின் துணை அலுவலகமாக, தேசிய முகமையாக, கெஷ்டாபோ ஆனது. 27 செப்டம்பர் 1939-இல் இருந்து இது அரசு பாதுகாப்புக்கான முதன்மை அலுவலகத்தால் மேலாண்மை செய்யப்பட்டது, துறை-4 என்று அறியப்பட்டு ஜெர்மானிய பாதுகாப்புச் சேவையின் இணை அமைப்பாகக் கருதப்பட்டது.

அது இயங்கிவந்த காலத்தில், கெஷ்டாபோ பரவலாக அட்டூழியங்களைச் செய்தது. கெஷ்டாபோவின் ஆற்றல் அரசியல் எதிர்ப்பாளர்கள், கருத்தியல் மறுப்பாளர்கள் (சமயவாதிகள், மதகுருக்கள்), தொழில்முறைக் குற்றவாளிகள், சின்டி மற்றும் ரோமா மக்கள், ஊனமுற்றவர்கள், தற்பாலீர்ப்பு கொண்டவர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக யூதர்கள் போன்றார்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது.[4] கெஷ்டாபோவால் கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் நீதிமன்றச் செயன்முறையின்றி பிடித்து வைக்கப்பட்டனர், ஜெர்மனி முழுவதும், இரவும் பனியும் ஆணை மூலம் 1941 முதல் ஜெர்மானிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளிலும் கெஷ்டாபோவின் சிறைகாவலிலிருந்த அரசியல் கைதிகள் வெறுமனே காணாமல் போகச் செய்யப்பட்டனர்.[5]

பரவலான புரிதலுக்கு மாறாக, கெஷ்டாபோ உண்மையில் வரையறுக்கப்பட்ட கண்காணிப்புத் திறனுள்ள, ஒப்புமையளவில் ஒரு சிறிய அமைப்பாகும். இருப்பினும் ஜெர்மானியப் மக்கள் தங்கள் உடனுறை குடிமக்களைப் பற்றிய உளவுத்தகவல்களைத் தரவிரும்பியமையின் காரணமாக கெஷ்டாபோ மிகவும் செயல்திறமை மிக்கதாகத் திகழ்ந்தது. இரண்டாம் உலகப் போரின் போது ஹோலோகௌஸ்டிற்கு கெஷ்டாபோவின் பங்கு இன்றியமையாதது. போர் முடிந்தபின் பன்னாட்டுப் படைத்துறைத் தீர்ப்பாயம் நியூர்ன்பெர்க் வழக்காய்வுகளில் கெஷ்டாபோவை ஒரு குற்ற அமைப்பாக அறிவித்தது, கெஷ்டாபோவின் பல தலைமை உறுப்பினர்களுக்கு மரணதண்டனை விதித்தது.

வரலாறு

தொகு

இட்லர் ஜெர்மனியின் செயல்தலைவரான பின்னர், நாட்சி கட்சியின் இரண்டாவது முதன்மை நபரும், பிற்காலத்தில் லுவ்ட்வாஃவவின் தளபதியாக இருந்தவருமான எர்மன் கோரிங் புருசியாவின் உள்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.[6] இதன்படி ஜெர்மனியின் பெரிய காவல்படைக்குத் தலைவரானார். வெகுவிரைவிலேயே, காவல்துறையின் அரசியல் மற்றும் உளவுப் பிரிவுகளைத் தனித்தனியாகப் பிரித்து அதன் பொறுப்புகளில் நாட்சிக்களை நிரப்பினார். 26 ஏப்ரல் 1933-இல் இந்த இரண்டு பிரிவுகளையும் மறைநிலை தேசிய காவல்துறை என ஒன்றிணைத்தார். அது ஒரு அஞ்சல் அலுவலரால் அஞ்சல்தலைக் குறியீட்டுக்காகச் சுருக்கப்பட்டு கெஷ்டாபோ என்று வழங்கப்படலாயிற்று.[7][8] கோரிங் முதலில் மறைநிலை காவல் அலுவலகம் என்று அழைக்க விரும்பினார், ஆனால் அதன் ஜெர்மானியச் சுருக்கம் GPA, சோவியத் ஒன்றியத்தின் அரசியல் இயக்ககத்தின் சுருக்கமான GPU-வுக்கு மிக நெருக்கமானதாக இருந்தது.[9]

 
ருடால்ப் டீல்ஸ், கெஷ்டாபோவின் முதல் தலைவர்; 1933–1934
 
ஹைன்ரிச் ஹிம்லர் மற்றும் எர்மன் கோரிங் (பெர்லின், 1934)

டீல்ஸ் புருஷ்ய மறைநிலை காவல்துறைப் பிரிவின் தலைவர் என்ற பட்டப்பெயரிடப்பட்டு நியமிக்கப்பட்டார். ரெய்க்ஸ்டாக் கட்டடம் தீவைப்பிற்குப் பின் மரீனஸ் வான் தெர் லுப்பின் முதன்மை விசாரணையாளராகச் சிறப்பாக அறியப்பட்டார். 1933-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜெர்மன் அரசின் உள்துறை அமைச்சர் வில்லெம் விரிக் அனைத்து காவல்படைகளையும் தன் கட்டுப்பாட்டிற்குக் கீழ் ஒன்றிணைக்க விரும்பினார். அவருக்கு முன்பாக கோரிங் புருஷ்ய அரசியல் மற்றும் உளவுப் பிரிவுகளை உள்துறை அமைச்சகத்திடமிருந்து பிரித்துவிட்டார்.[10] 1934-ஆம் ஆண்டு கெஷ்டாபோவைக் கைப்பற்றியபின் ஜெர்மனி முழுமைக்கும் முகமையின் அதிகாரத்தை நீட்டிக்கும்படி ஹிட்லரை கோரிங் வேண்டினார். இது ஜெர்மனியின் மரபிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. ஜெர்மானிய மரபின்படி சட்டம் ஒழுங்கு பெரும்பாலும் மாநிலத்தின் அதாவது உள்துறையின் பொருண்மையாகும். இந்த வகையில் கோரிங், ஜெர்மனியின் இரண்டாவது வலிமைமிக்க மாநிலமான பவேரியாவின் காவல்துறைத் தலைவராகவும். ஷுட்ஸ்டோஃவலின் தலைவராகவும் இருந்த ஹைன்ரிக் ஹிம்லருடன் முரண்பட்டார். வில்லெம் விரிக்குக்கு தானே கோரிங்கை எதிர்க்குமளவுக்கு அரசியல் வலுவில்லை, எனவே அவர் ஹிம்லருடன் இணைந்து கொண்டார். விரிக்கின் ஆதரவுடன், தனது வலதுகையாளான ரைன்ஹார்ட ஹேட்ரிக்கின் துணையுடன் ஹிம்லர் ஒவ்வொரு மாநிலமாக அரசியல் காவல்துறையைக் கைப்பற்றினார். புருஷ்யா மட்டுமே எஞ்சியிருந்தது.[11]

புயற்பிரிவினரின் ஆற்றலுக்குத் திறம்பட போதுமானளவில் கடுமையாக டீல்ஸால் ஈடுகொடுக்க முடியவில்லை என்று கவலையுற்ற கோரிங், 20 ஏப்ரல் 1934-இல் கெஷ்டாபோவின் கட்டுப்பாட்டை ஹிம்லரிடம் கொடுத்தார்.[12] அதே நாளில் ஹிட்லர், புருஷ்யாவுக்கு வெளியேயுள்ள அனைத்து ஜெர்மானிய காவல்துறைக்கும் ஹிம்லரைத் தலைவராக்கினார். 22 ஏப்ரல் 1934-இல் ஹிம்லர் ஹேட்ரிக்கை கெஷ்டாபோவின் தலைவராக்கினார். ஹேட்ரிக் பாதுகாப்புச் சேவையின் தலைவராகவும் தொடர்ந்தார்.[13] ஹிம்லரும் ஹேட்ரிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளில் தங்களது ஆட்களை நிறுவினர், அவர்களுள் பெரும்பாலானோர் பவேரிய அரசியல் காவல்துறையைச் சேர்ந்தவர்கள், எடுத்துக்காட்டாக ஹைன்ரிக் முல்லர், பிரானஸ் ஹூபர், யோசெவ் மைசிங்கர்.[14] புதிதாக நிறுவப்பட்ட அலுவலகங்களின் பெரும்பாலான கெஷ்டாபோ பணியாளர்கள் இளமையானவர்களாகவும் பல்வேறு துறைகளில் நன்கு கற்றவர்களாகவும் இருந்தனர், மேலும் அவர்கள் கடும் உழைப்பாளிகளாகவும், திறமையானவர்களாகவும், தங்களின் அரசியல் எதிரிகளைக் குற்றம் சுமத்துவதன் மூலம் நாட்சி நிலத்தை முன்னெடுக்கத் தயாராக இருந்தவர்களாகவும் தேசியப் பொதுவுடைமைக் கருத்தியலைப் பின்பற்றும் ஒரு புதிய தலைமுறையினராகவும் இருந்தனர்.[15]

1934-ஆம் ஆண்டு இளவேனிற் காலத்துக்குள், தேசிய பாதுகாப்புச் சேவையையும் கெஷ்டாபோவையும் ஹிம்லரின் ஷுட்ஸ்டோவல் கட்டுக்குள் வைத்திருந்தது, இருப்பினும் அதுவே எர்ன்ஸ்ட் ரோமின் பாதுகாப்பு அலுவகத்தின் கீழாகவே பணியாற்றியது.[16] ரோம்மைத் தடையாகக் கருதிய ஹிம்லர், அவரிடமிருந்து முற்றிலும் விடுபட விரும்பினார்.[17]

மேற்கோள்கள்

தொகு
  1. Gellately 1992, ப. 44.
  2. Wallbaum 2009, ப. 43.
  3. Childers 2017, ப. 235.
  4. Johnson 1999, ப. 483–485.
  5. Snyder 1994, ப. 242.
  6. Buchheim 1968, ப. 145.
  7. Buchheim 1968, ப. 146.
  8. Flaherty 2004, ப. 64–65.
  9. Shirer 1990, ப. 270.
  10. Flaherty 2004, ப. 64–66.
  11. Flaherty 2004, ப. 66.
  12. Evans 2005, ப. 54.
  13. Williams 2001, ப. 61.
  14. Tuchel & Schattenfroh 1987, ப. 80.
  15. Tuchel & Schattenfroh 1987, ப. 82–83.
  16. Delarue 2008, ப. 102–103.
  17. Evans 2006, ப. 29.

சாற்றுணை நூல்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கெஷ்டாபோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெஷ்டாபோ&oldid=3794296" இலிருந்து மீள்விக்கப்பட்டது