கெடு வெகுமதி

கெடு வெகுமதி (Perverse incentive) எதிர்பாராத விளைவு வகைகளுள் ஒன்று. ஒரு விளைவை எதிர்பார்த்து அறிவிக்கப்படும் வெகுமதி அதற்கு நேர்மாறான பலனைப் பெற்றுத் தருமெனின் அது கெடு வெகுமதி எனப்படும். நாகப்பாம்பு விளைவு கெடு வெகுமதிக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு. இந்தியாவின் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்வே இப்பெயர் ஏற்படக் காரணமாகும். தலைநகர் தில்லியில் நச்சுள்ள நாகப்பாம்புகளின் எண்ணிக்கை கூடியதால் கவலை கொண்டது பிரித்தானிய அரசு. பாம்புகளைக் கொல்ல பொது மக்களை ஊக்குவித்தது. அப்படிக் கொல்லப்படும் பாம்புகளுக்காக அவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்தது (எண்ணிக்கை அடிப்படையில்). முதலில் இந்தத் திட்டம் நல்ல பலனைத் தந்தது - வெகுமதிக்காக மக்கள் நிறைய நாகப்பாம்புகளைக் கொன்றனர். ஆனால் சில காலத்துக்குப்பின் குறைந்த உழைப்பில் நிறைய வெகுமதி பெறுவதற்காக சிலர் நாகப்பாம்புகளை வளர்க்கத் தொடங்கினர். இது அரசுக்குத் தெரியவந்தவுடன் தன் வெகுமதித் திட்டத்தை நிறுத்திக் கொண்டது. வெகுமதி கிடைக்காததால் பாம்புகளை வளர்த்தவர்களே அவற்றைத் தப்பிக்க விட்டனர். இவ்வாறு பாம்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு கையெடுத்த தீர்வினால் அவற்றின் எண்ணிக்கை கூடியது. இத்தகைய பிற தீர்வுகளுக்கும் “நாகப்பாம்பு விளைவு” என்ற பெயர் ஏற்பட்டது.[1][2]

இதே போன்று வியட்நாம் நாட்டின் ஹனோய் நகரில் எலித்தொல்லையைக் குறைக்க நகர நிருவாகிகள் எலிகளை பிடித்து வந்தால் வெகுமதி என்று அறிவித்தனர். ஆனால் நகர மக்கள் பலர் அவ்வெகுமதியால் தூண்டப்பட்டு எலிகளை தாங்களே வளர்க்கத் தொடங்கினர். இதனை உணர்ந்த நகர நிருவாகம் வெகுமதித் திட்டத்தைத் திரும்பப் பெற்றது. வளர்க்கப்பட்ட எலிகள் மீண்டும் பாதாள சாக்கடைகளில் திறந்து விடப்பட்டன.[3]

நகரத் தீயணைப்புத் துறைக்கு அணைக்கப்படும் நெருப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி வழங்குவது தீ விபத்து நிகழ்வுகளை அதிகரிக்கின்றது. தீயணைப்புத் துறையின் வருவாய் தீ விபத்துகளை சார்ந்து இருப்பதால், வருமுன் காப்பில் தீயணைப்புத் துறை தன் கவனத்தை செலுத்துவதில்லை. இதனால் தீ விபத்துகள் அதிகரிக்கின்றன.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Dubner, Stephen J. (10 October 2012), "The Cobra Effect", Freakonomics Radio, American Public Media
  2. Schwarz, Christian A. (1996). NCD Implementation Guide. Carol Stream Church Smart Resources. p. 126. Cited in Brickman, p. 326.
  3. Michael G. Vann, "Of Rats, Rice, and Race: The Great Hanoi Rat Massacre, an Episode in French Colonial History," French Colonial History Society, May, 2003
  4. Department for Communities and Local Government (2002). "Fire" பரணிடப்பட்டது 2004-08-01 at the வந்தவழி இயந்திரம். In Consultation on the Local Government Finance Formula Grant Distribution. Retrieved November 10, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெடு_வெகுமதி&oldid=3845032" இலிருந்து மீள்விக்கப்பட்டது