கேட்டரினா பிலோகூர்
கேட்டரினா வாசிலிவ்னா பிலோகூர் (உக்ரைனியன்: Катерина Василівна Білокур; 7 டிசம்பர் 1900 - 9 சூன் 1961) ஓர் உக்ரைனிய நாட்டுப்புறக் கலைஞர் மற்றும் ஓவியர் ஆவார். இவரது பிறந்த தேதி சரியாக தெரியவில்லை என்றாலும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி இவரது பிறந்தநாளாக உக்ரைன் அரசால் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படுகிறது. இவரது இயற்கையை மையமாக கொண்ட படைப்புகள் 1930 களின் பிற்பகுதியிலும் 1940 களிலும் பரவலாக அறியப்பட்டன. இவருக்கு உக்ரைனின் மக்கள் கலைஞர் என்ற சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது. பிரபல ஓவியரான பாப்லோ பிக்காசோ பாரிசு நகரில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இவரது படைப்புகளை பார்வையிட்ட பிறகு, "எங்களிடத்தில் இப்படி ஒரு கலைஞர் இருந்திருந்தால், உலகம் முழுவதும் அவரை பற்றி பேச பேசவைத்திருப்போம்" என்று கருத்து தெரிவித்தார்.
கேட்டரினா பிலோகூர் | |
---|---|
கேட்டரினா பிலோகூர் | |
தாய்மொழியில் பெயர் | Катерина Бiлокур |
பிறப்பு | 7 December 1900 போடாநிவிக்கா, போல்டாவா ஆளுநராகம், உருசியப் பேரரசு |
இறப்பு | 9 சூன் 1961 போடாநிவிக்கா, கீவ் மாகாணம், உக்ரைன் | (அகவை 60)
தேசியம் | உக்ரைனியர் |
அறியப்படுவது | ஓவியம் |
விருதுகள் | உக்ரைனின் மக்கள் கலைஞர் |
வாழ்க்கை வரலாறு
தொகுகேட்டரினா உருசியப் பேரரசில் போல்டாவா ஆளுநராகத்தில் இருந்த போடாநிவிக்கா கிராமத்தில் பிறந்தார்.[1] இவரது பிறந்த தேதி சரியாக தெரியவில்லை என்றாலும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி இவரது பிறந்தநாளாக உக்ரைன் அரசால் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படுகிறது.
இவர் தனது ஆறாவது வயதில் படிக்கக் கற்றுக்கொண்டார். குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக பள்ளிக்கு அனுப்ப தேவையான சீருடை மற்றும் காலணிகள் வாங்க முடியாத காரணத்தினால் இவரால் பள்ளிப்படிப்பை தொடர இயலவில்லை. இவர் சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். இருப்பினும் இவருடைய இந்த ஆர்வத்தை இவரது பெற்றோர் ஆதரிக்கவில்லை, மேலும் இது ஒரு தேவையற்ற பொழுதுபோக்கு எனக்கூறி கோபமடைந்தனர். ஓவியங்கள் வரைய அனுமதி மறுக்கப்பட்டதால், இவர் பழைய கந்தல் துணிகள் மற்றும் நிலக்கரியைப் பயன்படுத்தி ரகசியமாக வரைய ஆரம்பித்தார். இவர் ஒரு முறை இவ்வாறு ஓர் வெள்ளை துணியில் நிலக்கரி கொண்டு வரைந்த ஓவியத்தை இவரது பெற்றோர் தீயில் எறிந்தனர். இருப்பினும் இயற்கை மீதான ஏதோ ஒரு உணர்வு இவரை தொடர்ந்து வரைய தூண்டியதாக கேட்டரினா பின்னாளில் கூறினார்.[2]
தனது அண்டை வீட்டுக்காரரும் உறவினருமான நிகிதா டோன்கோனாக் உதவியுடன் உள்ளூர் நாடக நிகழ்ச்சிகளுக்கு மேடை அலங்காரங்களை வரைந்தார். பின்னர் சில நேரங்களில் பிலோகூர் நாடக அரங்கின் மேடையில் நாட்டுப்புற பாடல்களை பாடினார். 1922 ஆம் ஆண்டு பிலோகூர் மிரோரோட் தொழில்முறை கலை மட்பாண்டப் பள்ளியைப் பற்றி அறிந்தார். அந்த பள்ளியில் எப்படியாவது சேர வேண்டும் என முடிவு செய்து, வீட்டை விட்டு வெளியேறினார். இதற்காக பிரத்யேகமாக தான் வரைந்த இரண்டு காகித வரைபடங்களுடன் (ஒரு இயற்கை ஓவியம் மற்றும் இவரது தாத்தாவின் வீட்டின் மாதிரி ஓவியம்) மிரோரோடுக்கு பயணத்தைத் தொடங்கினார். ஆனால் இவர் தனது உள்ளூர் பள்ளியில் ஏழு ஆண்டுகள் படித்ததை நிரூபிக்கும் ஆவணங்கள் இல்லாததால் தொழில்முறை பள்ளியில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே மிகுந்த ஏமாற்றத்துடன் நடை பயணமாக வீடு திரும்பினார்.
இருப்பினும் இவருக்கு வரைவதற்கான ஆசை மற்றும் ஓவியத்தின் மீதான ஆர்வம் குறையவில்லை. பின்னர், உள்ளூரில் ஒரு தம்பதியரால் நடத்தப்பட்ட நாடக வகுப்பில் கலந்து கொள்ளத் தொடங்கினார். இவரது பெற்றோர் இவரது நடிப்பு இவரது வீட்டு வேலையை பாதிக்க கூடாது என்ற நிபந்தனையின் பேரில் இவர் நாடகங்களில் பங்கேற்க ஒப்புக்கொண்டனர். 1928 ஆம் ஆண்டில், பிலோகூர் [[கீவ்] நகரில் உள்ள ஒரு நாடக தொழில்முறை பள்ளியைப் பற்றி அறிந்து, அங்கு சேர முயற்சிக்க முடிவு செய்தார். ஆனால் மீண்டும் படித்ததற்கான சான்று இல்லாத அதே காரணத்திற்காக இவர் அங்கும் நிராகரிக்கப்பட்டார். இதனால் மனமுடைந்த இவர் 1934 இலையுதிர்காலத்தில், சும்காக் ஆற்றில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றார், இந்த முயற்சியின் பொது குளிர்ந்த நீரில் மூழ்கி இருந்ததால் இவரது கால்கள் பாதிக்கப்பட்டன. ஆனால் இதன் பிறகு, இறுதியாக இவரது தந்தை இவரை ஓவியங்கள் வரைய அனுமதிக்க ஒப்புக்கொண்டார்.
படைப்பு காலம்
தொகு1940 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில், பிலோக்கூர் வானொலியில் ஒக்சானா பெட்ருசென்கோ பாடிய ஒரு பாடலைக் கேட்டார். இந்தப் பாடல் இவரை மிகவும் கவர்ந்த காரணத்தினால், இவர் ஒக்சானாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்துடன் இவர் துணியில் வரைந்த ஒரு வரைபடத்தை இணைத்தார். அந்த வரைபடத்தால் கவரப்பட்ட ஒக்சானா, தனது நண்பர்களான வாசிலி காசியான் மற்றும் பாவெல் டைச்சினா ஆகியோரைக் கலந்தாலோசித்த பிறகு நாட்டுப்புறக் கலை மையத்தின் உதவியை நாடினார். விரைவில் போடாநிவிக்கா கிராமத்திற்குச் சென்று, பிலோகூரைக் கண்டுபிடித்து, அவரது படைப்புகள் குறித்து விசாரிக்க ஒரு குழு அனுப்பப்பட்டது.
பின்னர் பிராந்திய நாட்டுப்புற கலை இல்லத்தின் கலை மற்றும் முறைசார் அமைப்புக்கு தலைமை தாங்கிய விளாடிமிர் கிட்கோ, இவரை சந்திக்க வந்தார். பின்னர் பிலோகூர் வரைந்த பல ஓவியங்களை இவர் கலைஞர் மாட்டே டோன்ட்சுவுக்குக் காட்டினார். 1940 ஆம் ஆண்டில், போல்டாவாவில் உள்ள நாட்டுப்புற கலை இல்லத்தில், பிலோகூர் வரைந்த பதினோரு ஓவியங்களின் தனிப்பட்ட கண்காட்சி திறக்கப்பட்டது. இந்த கண்காட்சி பிரபலமடைந்ததை தொடர்ந்து இவருக்கு சோவியத் தலைநகர் மாஸ்கோவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. மாஸ்கோ சென்ற இவர் விளாடிமிர் கிட்கோவுடன் இணைந்து, திரெட்டியாகோவ் மற்றும் புசுகின் அருங்காட்சியங்களை பார்வையிட்டார். 1944 ஆம் ஆண்டில், உக்ரேனிய நாட்டுப்புற அலங்கார கலைகளின் மாநில அருங்காட்சியகத்தின் இயக்குநரான வாசிலி நாகாய், போடாநிவிக்காவுக்குச் சென்று பிலோகூரிடமிருந்து பல ஓவியங்களைப் பெற்று வந்தார். இவற்றின் தொகுப்பு தற்போதைய உக்ரேனிய நாட்டுப்புற அலங்கார கலை அருங்காட்சியகத்தில் உள்ளது.[3] 1949 இல், பிலோகூர் உக்ரைனின் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினரானார். 1951 ஆம் ஆண்டில், இவருக்கு அமைப்பு சார்பில் ஒரு சிறப்பு பட்டயம் மற்றும் உக்ரேனிய நாட்டின் மதிப்பிற்குரிய கலைப் பணியாளர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு இவரின் மூன்று ஓவியங்கள் பாரிசு நகரில் நடந்த சர்வதேச கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டன. அங்கு பிரபல ஓவியரான பாப்லோ பிக்காசோ இவரது படைப்புகளை பார்வையிட்ட பிறகு, "எங்களிடத்தில் இப்படி ஒரு கலைஞர் இருந்திருந்தால், உலகம் முழுவதும் அவரை பற்றி பேச பேசவைத்திருப்போம்" என்று கருத்து தெரிவித்தார்.[4]
இவர் பின்னாளில் பல சக கலைஞர்கள் மற்றும் கலை விமர்சகர்களுடன் நட்பு கொண்டார். இவர்களுடனான சந்திப்புகளைத் தவிர, இவர் பெரும்பாலும் தனது சொந்த கிராமத்திலேயே தங்கி இருந்தார். இவருடைய அத்தகைய நண்பர்களில் கவிஞர் பாவெல் டைச்சினா மற்றும் அவரது மனைவி லிடியா பெட்ரோவ்னா, கலை விமர்சகர் சுடீபன் தரனுசென்கோ, உக்ரேனிய நாட்டுப்புற அலங்கார கலை அருங்காட்சியகத்தின் இயக்குனர் வாசிலி நாகாய், கலைஞர்கள் எலெனா குல்சிட்சுகாயா, மேட்டவி டோன்ட்சுவ், எம்மா குரோவிச் மற்றும் பலர் அடங்குவர். பின்னர் இவர் தனது சொந்த கிராமத்தில், ஓல்கா பின்சுக், தமாரா கன்சா மற்றும் அன்னா சமர்சுகாயா போன்ற பிற்கால கலைஞர்களுக்கு கற்பிக்கத் தொடங்கினார்.
இறுதி ஆண்டுகள்
தொகு1948 இல் இவரது தந்தை வசிலி பிலோகூர் காலமானார். இதற்கு பிறகு இவர் தனது நோய்வாய்ப்பட்ட தாயுடன் சிறிது காலம் வசித்து வந்தார், பின்னர், இவரது சகோதரர் கிரிகோரி, அவரது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளுடன் வாழ்ந்தார். 1961 ஆம் ஆண்டு வசந்த காலத்தில், இவரது தாயார் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். 1961 சூன் தொடக்கத்தில், இவரது தாய் 94 வயதில் காலமானார். அதே ஆண்டில், உடல்நலக்குறைவு காரணமாக பிலோகூர் யாகோடின்சுகி பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சூன் 10 அன்று இவரது உயிரை காப்பாற்ற ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அது பலன் அளிக்காததால், அன்றிரவே பிலோகூர் காலமானார். இவர் பின்னர் தனது சொந்த கிராமமான போடாநிவிக்காவில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது கல்லறை சிற்பி இவான் கோன்சாரால் வடிவமைக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டு டிசம்பர் 7 அன்று, கூகிள் இவரின் 120 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஒரு புது வரைபடத்தை (டூடில்) பதிவிட்டது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kateryna Bilokur: Biographical sketch – Ukrainian Art Library". Ukraine Art Library. 22 January 2015. பார்க்கப்பட்ட நாள் 21 October 2017.
- ↑ "Ukrainian Bible - Matthew 7". godrules.net. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
- ↑ "Flowers grow even through concrete: the story of the work of Kateryna Bilokur of Poltava". Poltavchanka.info. 5 August 2022. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
- ↑ "Exuberant Kiev". Club-tourist. பார்க்கப்பட்ட நாள் 7 December 2019.
- ↑ "Kateryna Bilokur's 120th Birthday". 7 December 2020. பார்க்கப்பட்ட நாள் 7 December 2020.