கேப்பாப்புலவு போராட்டம்

கேப்பாப்புலவு போராட்டம் என்பது இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள கேப்பாப்பிலவு, பிலக் குடியிருப்பில் இலங்கை விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை அவற்றின் சொந்தக்காரர்களிடம் மீளக்கையளிக்கக் கோரி 2017 சனவரி 31 இல் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமாகும்.[1] கேப்பாப்பிலவைச் சேர்ந்த 84 குடும்பங்களுடைய காணிகள் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, அக்காணிகளின் சொந்தக்காரர்கள் காணிகளைப் பொறுப்பேற்கச் சென்ற போது, காணிகள் விடுவிக்கப்படாததையடுத்து இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.[2]

பின்னணிதொகு

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்ட பெருமெடுப்பிலான உள்நாட்டுப் போர் நடவடிக்கையின் இறுதிக் கட்டங்களின்போது 2009ம் ஆண்டளவில் கேப்ப்பாப்புலவு மக்களின் காணிகள் அரச படைகளால் கையகப்படுத்தப்பட்டன. இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட காணிகளை, போர் முடிவுற்றுப் பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிற் தம்மிடம் மீளக்கையளிக்க வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் கோரிக்கையாகும்.

ஆதரவு வழங்கும் அமைப்புக்கள்தொகு

 • யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வணிகபீட மாணவர் ஒன்றியம்
 • யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்
 • இலங்கை ஆசிரியர் சங்கம்
 • சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு
 • இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம்
 • முல்லைத்தீவு அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்
 • தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்
 • கிராமிய உழைப்பாளர் சங்கம்
 • முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்த பெண்கள் அமைப்புக்கள்
 • தமிழ் தேசிய மக்கள் முன்னணி
 • மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம்
 • தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்
 • தமிழ் மக்கள் பேரவை
 • மன்னார் பிரஜைகள் குழு
 • யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு
 • புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி
 • முன்னிலை சோசலிசக் கட்சி

காலக்கோடுதொகு

போராட்டம் தொடங்கிய நாள் முதலான முக்கிய நிகழ்வுகள்

23. 01.2017தொகு

24. 01.2017 நடைபெறவிருந்த காணி அளவீடு தொடர்பான செயன்முறை மக்களுக்கு அறிவிக்கப்படாமல் வான் படை, நில அளவைத் திணைக்களம், வன வளப் பாதுகாப்பு துறையினர் மற்றும் அரச பொறுப்பதிகாரிகளுடன் 23. 01. 2017 இடம்பெற்றது. அதன் போது வரையப்பட்ட வரைபடம்.

31. 01. 2017தொகு

கிராம சேவையாளரின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து 31. 01. 2017 வருகை தந்த மக்கள் பல தரப்பட்ட குழப்பமான தகவல்களினாலும் முரண்பாட்டினாலும் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

போராட்டம் ஆரம்பித்த நாளில் இராணுவத்தினர் ஊடகவியலாளர்களின் புகைப்படக் கருவிகளை பிடுங்கிக் கொள்ள முயன்றனர். மக்கள் தடுத்து இராணுவத்தினரிடம் ஊடகவியாளர்களை பாதுகாத்தனர்; இவர்கள் ஊடகவியலாளர்கள் என்று கூறி அவர்களை நீங்கள் தடுத்தால் வழக்குத் தொடர்வோம் என்று சொன்னதற்குப் பின் தான் இராணுவம் தனது முயற்சியைக் கைவிட்டது. அன்று இரவு வீதியில் இருந்த விளக்குகளையும் தண்ணீரையும் வான்படை நிறுத்தியது.

01.02.2017தொகு

இரண்டாவது நாள் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கரைத்துறைப் பற்று பிரதேச செயலர் சி. குணபாலன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விமானப் படைத் தளபதி ஆகியோரும் மக்கள் பிரதிநிதிகளான சிவசக்தி ஆனந்தன், சாந்தி பூரீஸ்கந்தராசா, சிவமோகன் மற்றும் வடக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்கள் புவனேஸ்வரன், சிவநேசன், து. ரவிகரன் ஆகியோர் மக்களைச் சந்தித்து உரையாடினார்.

03.02.2017தொகு

நான்காவது நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதிக்கு நிலைமையை விளக்கிக் கடிதமொன்றை எழுதி அனுப்பினார்.[3] அதே நாளில் புதுக்குடியிருப்பிலும் பிலக் குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமது காணிகளையும் விடுவிக்கக் கோரியும் புதுக்குடியிருப்பு மக்கள் பிரதேச செயலக வாசலின் முன் போராட்டத்தில் குதித்தார்கள்.

04.02.2017தொகு

ஐந்தாவது நாள் இலங்கையின் சுதந்திர தினத்தன்று கறுப்புக்கொடி கட்டி தமது எதிர்ப்பினை மக்கள் வெளிப்படுத்தினர். அன்றை தினம் அமைச்சர் ரிஸார்ட் பதியுதீன்,[4] வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன்[5] ஆகியோர் மக்களைச் சந்தித்துப் பேசினர். அன்றய தினம் புதுக்குடியிருப்பு, தண்ணீரூற்று மற்றும் முள்ளியவளை ஆகிய பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஷ் டிக்கப்பட்டது. நாடாளுமன்ற பிரதிக்குழு தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மக்களை சந்தித்தார்.

06.02.2017தொகு

ஏழாவது நாள் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வணிகபீட மாணவர் ஒன்றியம் மக்களுக்கான தமது ஆதரவைத் தெரிவித்ததுடன் நேரில் சென்று கலந்துகொண்டு மக்களுக்கு நம்பிக்கையளித்தனர்.[6] ஆறுமுகம் வேலாயுதப் பிள்ளை என்பவர் இந்தப் போராட்டம் வெற்றிபெற சிவபூஜை ஒன்றை ஆரம்பித்தார்.குறித்த தினத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரனும் போராட்டத்திற்கு வருகைதந்திருந்தார். சிலரின் தன்னார்வ முயற்சியால் போராட்டக் களத்திலிருந்த மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

07.02.2017தொகு

எட்டாவது நாள் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர் சங்கம் ஆகியன தமது ஆதரவினைத் தெரிவித்தனர்.[7]

08.02.2017தொகு

ஒன்பதாவது நாள் போராடும் மக்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் ஒன்றிணைந்த சிங்கள ஊடகவியலாளர்கள், சிங்கள மக்கள் இணைந்து நீர்கொழும்பில் கவனயீர்ப்பு ஒன்றை நடத்தினர்.அதே நாளில் வெயில் உருக்கும் வீதியில் அமர்ந்து பிலக் குடியிருப்பு மக்கள் போராட்டம் நடத்தினர்.

09.02.2017தொகு

பத்தாவது நாள் புதுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பிரதமர் ரணிலைச் சந்தித்தனர். பிலக் குடியிருப்பு மக்கள் பிரதமரைச் சந்திக்க மறுத்துவிட்டனர். காணி விடுவிக்கப்படும் என்று சமாதானம் சொல்லி பிரதமர் அனுப்பி வைத்தார் (இந்த சந்திப்பை செல்வம் அடைக்கலநாதன் ஒழுங்கு செய்திருந்தார்), போராட்டம் தொடரும் என்று மக்கள் அறிவித்தனர்.

10.02.2017தொகு

வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்னதாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு பிலக் குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பொன்றை நிகழ்த்தினர்.[8]

11.02.2017தொகு

கவனயீர்ப்பு ஒன்றுகூடலினை யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன் சமூக வலைத்தளங்களினால் ஒன்றிணைந்த இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஒன்றுகூடலில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு மற்றும் இன்னும் பல சமூக அமைப்புக்கள் கலந்து கொண்டன. அதன் பின்னர் ஒரு தொகுதி இளைஞர்கள் போராட்டக்களத்திற்குச் சென்று மக்களைச் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர். இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கமும், முல்லைத்தீவு அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியமும் தமது ஆதரவைத் தெரிவித்தன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மக்களைச் சந்தித்தார்.

12.02.2017தொகு

பதின்மூன்றாவது நாள் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்த பெண்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஒரு போராட்டத்தை பிலக் குடியிருப்பில் நடத்தின. அன்றைய தினம் வடமாகாணச பை உறுப்பினர்களும் போராட்டக் களத்திற்கு வருகை தந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். மட்டக்களப்பு நகரிலே மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமொன்று காந்தி பூங்கா முன்றலில் உள்ள மணிக்கூட்டு கோபுரம் அருகில் இடம்பெற்றது.[9]

13.02.2017தொகு

பதினான்காவது நாள் அமைச்சர் பா. டெனிஸ்வரன், ப. சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர் ஐ. ரி. லிங்கநாதன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

14.02.2017தொகு

பதினைந்தாவது நாள் கல்முனையில் விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவன மாணவர்கள் வாயை கறுப்புத் துணியால் மூடி மெளனப் போராட்டம் நடத்தினர். அன்றய தினம் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், ஆளுநர் ஆகியோருக்கு போராட்டம் தொடர்பில் உறுப்பினர்கள் அனைவரதும் கையொப்பத்துடன் கடிதமொன்றை அனுப்பினர். குறித்த தினத்தில் திருகோணமலையில் சம்பூர் அனல்மின் நிலையத்திற்கு எதிராகப் போராடிய மக்களும் பிலக் குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதே தினத்தில் புதுக்குடியிருப்பு மக்கள் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். கூடிய விரைவில் காணிகள் விடுவிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதாக அரச அதிபர் மக்களிடம் தெரிவித்தார். அந்த வாக்குறுதியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கலந்து கொண்டார்.

15.02.2017தொகு

பதினாறாவது நாள் கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் தனது ஆதரவைத் தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தனது ஆதரவினைத் தெரிவித்தார். பிரான்சில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

16.02.2017தொகு

பதினேழாவது நாள் பாடசாலை மாணவர்களும் போராட்டத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். தமிழ்மக்கள் பேரவையும் மன்னார் பிரஜைகள் குழுவும் ஆதரவு தெரிவித்தன.

17.02.2017தொகு

பதினெட்டாவது நாள் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு போராட்டமொன்றைத் தமது பல்கலைக்கழகத்திற்கு முன் நிகழ்த்தினர். பின்னர் ஒரு தொகுதி மாணவர்கள் போராட்டக்களத்திற்கு நேரில் சென்று ஆதரவளித்தனர். கிளிநொச்சி வர்த்தகர்கள் ஆதரவுப் போராட்டம் ஒன்றை நடாத்தினர். தென்மாகாண சபை உறுப்பினரான பத்தேகம சமிந்த தேரரும் அவரது குழுவினரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் நேரில் கலந்து கொண்டனர். யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவும் ஆதரவு தெரிவித்தனர். புதிய ஜனநாயக லெனின் மார்க்சிய கட்சி ஆதரவு தெரிவித்தது[10].

18.02.2017தொகு

பத்தொன்பதாவது நாள் கனடாவில் ஆதரவு ஒன்றுகூடல் இடம்பெற்றது. முன்னிலை சோஷலிஸக் கட்சி மக்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு தெரிவித்தது.

19.02.2017தொகு

புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி உறுப்பினர்கள் நேரடியாகச் சென்று தமது ஆதரவினைத் தெரிவித்தனர். கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் மக்களைச் சந்தித்தனர்.

20.02.2017தொகு

இருபத்தியொராம் நாள் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பாடசாலை மாணவர்கள் வீதியிலிறங்கிப் போராடினார்கள்.[11] இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் குறித்த போராடடக்களத்துக்கு வருகைதந்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் நிலங்களையும் பார்வையிட்டனர்.[12] முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.[13]

22.02.2017தொகு

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் கிராமிய உழைப்பாளர் சங்கமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு போராட்டத்தை நடத்தவுள்ளனர்.[14] இலங்கை ஆசிரியர் சங்கமும் அதே தினத்தில் கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.[15]

23.02.2017தொகு

மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் உதவி பொருட்களை வழங்கும் விதமாகவும் போராட்டக்களத்துக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை சேர்ந்த மாணவர்களும் விரிவுரையாளர்கழும் இன்றைய தினம் வருகைதந்திருந்ததோடு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் இராணுவ முகாமுக்கு முன்பாக முன்னெடுத்திருந்தனர்.[16] போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் உதவி பொருட்களை வழங்கும் விதமாகவும் போராட்டக்களத்துக்கு புதுக்குடியிருப்பு வணிகர் கழகத்தினர் வருகைதந்திருந்தனர்.[17]

24.02.2017தொகு

5 நாட்களாக தொடர் போராட்டம் நடத்திய பரவிப்பாஞ்சான் பகுதி மக்களின் காணிகளை விடுவித்து இராணுவத்தினர் வெளியேறினர். அரசியல்வாதிகள் ஏமாற்றிய நிலையில் எமது போராட்டமே வெற்றியை தந்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர். காத்தான்குடியில் காணி மீட்பு போராட்டத்தை ஆதரித்து முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர்.

25.02.2017தொகு

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன் காணி மீட்பு போராட்டத்துக்கு ஆதரவாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

26.02.2017தொகு

மல்லாகம், உரும்பிராய் பகுதிகளில் காணி மீட்பு போராட்டத்துக்கு ஆரவாக கவணயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டது.

27.02.2017தொகு

இராசேந்திரகுளம் பகுதி மக்கள் ஸ்ரீரேலோ கட்சி செயலாளரின் உறுதிமொழியினையடுத்து 6 நாட்களாக தொடர்ந்த காணி மீட்பு போராட்டத்தை கைவிட்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

28.02.2017தொகு

29வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கேப்பாப்புலவு மக்களின் காணிகள் மறுநாள் 1ம் திகதி வழங்கப்படும் என பிரதேச செயலாளர் தெரிவித்ததுடன் காணிகளின் எல்லைகள் அடையாளப்படுத்தப்பட்டன. 27வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த புதுக்குடியிருப்பு மக்களின் 7 அரை ஏக்கர் காணிகள் இரு வாரத்தில் வழங்கப்படும் என்று இராணுவ கட்டளை தளபதி தெரிவித்தார் ஆனாலும் மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

01.03.2017தொகு

30வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கேப்பாப்புலவு மக்களின் காணிகளில் ஒரு பகுதியாக 40 ஏக்கர் காணிகள் மார்ச் முதலாம் திகதி இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. ஆனாலும் அங்கு காணிகள் கிடைக்காத கேப்பாப்புலவு, சீனியாமாேட்டை, சூரியபுரம் பகுதி மக்கள் இன்று முதல் இரண்டாம் கட்ட போராட்டத்தை ஆரம்பித்தனர்.

03.03.2017தொகு

30 நாள் போராட்டங்களின் பின்னர் புதுக்குடியிருப்பு பகுதி மக்களின் 7.5 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் அன்றைய தினம் கையளிக்கப்பட்டது.

08.08.2017தொகு

கேப்பாப்புலவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளான சீனியாமாேட்டை, சூரியபுரம் காணி மீட்பு பாேராட்டங்கள் 162 நாட்களை தாெட்டது.

மேற்கோள்கள்தொகு

 1. "தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் : புகைப்படம் எடுக்கும் விமானப்படை". வீரகேசரி. 16-02-2017. 23-02-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)
 2. "முல்லைத்தீவு காணிகளிலிருந்து ராணுவம் வெளியேற ஆறாவது நாளாக தொடரும் போராட்டம்". பிபிசி தமிழ். 06-02-2017. 23-02-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)
 3. கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு காணிகளை மக்களுக்கு கையளிக்குமாறு ஜனாதிபதிக்கு ஆனந்தன் எம்.பி கடிதம்.[தொடர்பிழந்த இணைப்பு]
 4. கேப்பாபிலவு போராட்டம் நடைபெறும் இடத்துக்கு  அமைச்சர் ரிசாட்[தொடர்பிழந்த இணைப்பு]
 5. "கேப்பாபுலவு மக்களை சந்தித்தார் வடமாகாண முதலமைச்சர்". 2017-02-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-25 அன்று பார்க்கப்பட்டது.
 6. "கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு!". 2017-02-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-25 அன்று பார்க்கப்பட்டது.
 7. கேப்பாபுலவுக்கு யாழ் பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தினர் வருகை[தொடர்பிழந்த இணைப்பு]
 8. கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை வவுனியாவில் போராட்டத்திற்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு
 9. "காணி உரிமை போராட்டத்தில் கேப்பாப்புலவு மக்களுக்கு கிழக்கு மாகாண தமிழர்கள் ஆதரவு". பிபிசி தமிழ். 12-02-2017. 23-02-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)
 10. கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி[தொடர்பிழந்த இணைப்பு]
 11. "புதுக்குடியிருப்பில் மாணவர்கள் சங்கிலி போராட்டம்!". 2017-02-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-25 அன்று பார்க்கப்பட்டது.
 12. மனித உரிமை ஆணைக்குழுவினர் இராணுவம் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை பார்வையிட்டனர்
 13. கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் மக்கள்
 14. கேப்பாப்புலவு மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்![தொடர்பிழந்த இணைப்பு]
 15. "கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாகக் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்". தமிழ்வின். 22-02-2017. 23-02-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)[தொடர்பிழந்த இணைப்பு]
 16. "கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஆதரவு!". 2017-02-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-25 அன்று பார்க்கப்பட்டது.
 17. "கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கம் ஆதரவு!". 2017-02-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-25 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு