கே. எம். பஞ்சாபிகேசன்
கே. எம். பஞ்சாபிகேசன் (1 சூலை 1924 - 26 சூன் 2015) இலங்கையின் பிரபலமான நாதசுரக் கலைஞர் ஆவார்.
கே. எம். பஞ்சாபிகேசன் | |
---|---|
![]() | |
பிறப்பு | சூலை 1, 1924 சாவகச்சேரி, யாழ்ப்பாணம் |
இறப்பு | சூன் 26, 2015 கொழும்பு | (அகவை 90)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | சாவகச்சேரி இந்துக் கல்லூரி |
பணி | நாதசுசக் கலைஞர் |
அறியப்படுவது | நாதசுரக் கலைஞர் |
சமயம் | சைவர் |
பெற்றோர் | கே. முருகப்பாபிள்ளை, சின்னப்பிள்ளை |
வாழ்க்கைத் துணை | மாணிக்கம் இரத்தினம் |
வாழ்க்கைக் குறிப்புதொகு
பஞ்சாபிகேசன் 1924 ஜூலை 1 இல் சாவகச்சேரியில் தவில் கலைஞர் கே. முருகப்பாபிள்ளைக்கும் சின்னப்பிள்ளைக்கும் மூத்த புதல்வராய்ப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இருவர். ஒருவர் நடராஜசுந்தரம் என்ற தவில் வித்துவான். மற்றவர் இராசம்பாள் என்பவர் தனித்தவில் சுப்ரமணியத்தின் மனைவியாவார்.[1]
சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் நாதசுவரக் கலைஞர்கள் சண்முகலிங்கம்பிள்ளை, அப்புலிங்கம்பிள்ளை ஆகியோரிடமும், இராமையாபிள்ளை, பி. எஸ். கந்தசாமிப்பிள்ளை ஆகியோரிடம் நாதசுவர இசைப் பயிற்சியினைப் பெற்றார். தனது 15வது வயதில் முதற் கச்சேரியை பருத்தித்துறை சித்திவிநாயகர் ஆலயத்தில் அரங்கேற்றினார்.[2][3]
பின்னர் இவர் தமிழ்நாடு சென்று நாதசுரக் கலைஞர் “கக்காயி” நடராஜசுந்தரம் பிள்ளையிடம் மேலதிக பயிற்சி பெற்றார்.[4] பின்னர் ஐயம்பேட்டை வேணுகோபால் பிள்ளையிடம் பயிற்சி பெற்று மரபுவழிக்கச்சேரி செய்யும் முறைமையினைப் பயின்று கொண்டார்.
தாயகம் திரும்பியதும் இலங்கையின் பல இடங்களிலும் கச்சேரிகளை நடத்தினார். திருவாரூர் டி. என். ராஜரத்தினம் பிள்ளை, திருவாரூர் லெச்சையப்பா, அம்பல் இராமச்சந்திரன், பந்தனை நல்லூர் தெட்சணாமூர்த்திப்பிள்ளை, கோட்டூர் இராஜரத்தினம்பிள்ளை போன்ற தமிழகக் கலைஞர்களுடன் இணைந்து நாதசுரம் வாசித்தார். ஈழத்து தவில் கலைஞர்கள் வி. தெட்சணாமூர்த்தி, என். ஆர். சின்னராசா எனப் பலரும் பஞ்சாபிகேசனுக்கு தவில் வாசித்திருக்கிறார்கள்.[4]
அளவெட்டி மாணிக்கம் இரத்தினம் என்பவரைத் திருமணம் புரிந்த பஞ்சாபிகேசனுக்கு மூன்று ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். இவரது புதல்வர்கள் கே. எம். பி. நாகேந்திரம், கே. எம். பி. விக்கினேஸ்வரன் ஆகியோரும், பேரப்பிள்ளைகள் சித்தார்த் சகோதரர்களும் நாதசுரக் கலைஞர்கள் ஆவர்.[4]
விருதுகளும் பட்டங்களும்தொகு
- அகில இலங்கை கம்பன் கழகத்தின் “இசைப்பேரறிஞர்” விருது
- இலங்கை கலாசார அமைச்சின் “கலாபூஷணம்” விருது
- யாழ்ப்பாணம் இந்து கலாசார சபையின் “சிவகலாபூஷணம்” விருது
- 1998 இல் வடகிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருது
- திருக்கேதீச்சரத் தேவத்தானத்தின் “இசைவள்ளல் நாதஸ்வரகலாமணி” பட்டம்
- இலங்கை கல்வி அமைச்சின் “நாதஸ்வர கானவாரிதி” பட்டம்
- இந்து கலாசார அமைச்சின் “ஸ்வரஞானதிலகம்” பட்டம்
- 2010 அக்டோபர் 6 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.[4]
மறைவுதொகு
பஞ்சாபிகேசன் தனது 90வது அகவையில் 2015 சூன் 26 அதிகாலை 12:20 மணிக்கு கொழும்பில் காலமானார்.[5]
மேற்கோள்கள்தொகு
- ↑ http://www.kidukuveli.com/2011/10/blog-post.html#sthash.v6EIjc3q.dpuf
- ↑ நாதஸ்வர மேதை கலாநிதி பஞ்சாபிகேசன்
- ↑ "நாதஸ்வரமேதை கலாநிதி பஞ்சாபிகேசன்". தினகரன் (07 சூன் 2015). பார்த்த நாள் 26 சூன் 2015.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "நாதஸ்வர மேதை கலாநிதி பஞ்சாபிகேசன் பகுதி 2". தினகரன் (14 சூன் 2015). பார்த்த நாள் 26 சூன் 2015.
- ↑ "பிரபல நாதஸ்வர மேதை பஞ்சாபிகேசன் காலமானார்". மலரும் (26 சூன் 2015). பார்த்த நாள் 26 சூன் 2015.
வெளி இணைப்புகள்தொகு
இலங்கையின் 'பெருங்கலைஞர்' பஞ்சாபிகேசனின் ஆளுமை: கானொளி காட்சி