கொடிமரம்
கொடிமரம் என்பது இந்துக் கோவில்களில், பலிபீடத்திற்கு அருகே அமைக்கப்பெறுகின்ற கொடியேற்றுகின்ற மரமாகும். இதற்கு துவஜஸ்தம்பம் என்ற சமசுகிருதப் பெயரும் உண்டு. சிவாலயங்களில் கொடி மரம், நந்தி மற்றும் பலிபீடம் ஆகியவை மூலவரை நோக்கியே அமைக்கப்பெறுகின்றன.


பொதுவாக ஆலயங்கள் ஆகம விதிப்படி கட்டப்படுகிறது. அதாவது ஒரு கோவிலை புனித உடலுடன் ஒப்பிடலாம். அதன்படி தலைப்பகுதியை கருவறையாகவும், மார்புப் பகுதியை மகா மண்டமாகவும், வயிற்றுப் பகுதியை நாபி எனப்படும் தொப்புள் பகுதி கொடிமரமாகவும், கால் பகுதியை இராஜகோபுரமாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு ஆகம விதிப்படி கட்டப்படும் கோவில்களில், திருவிழா நடைபெறும் போது முதல் நாள் கொடியேற்றமானது நடைபெறும். தேவர்கள், இந்த கொடிமரத்தின் வழியாகத் தான் கோயிலுக்குள் வருவதாக கூறப்படுகிறது.
கொடிமரத்தின் அமைப்பு
தொகுகொடிமரம், பொதுவாக சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய ஐந்த வகையான மரங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. மனிதனின் முதுகு தண்டைப் போன்றது கோவிலின் கொடிமரம். நமது முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன.அது போல கொடிமரழும் 32 வலையங்களுடன் அமைக்கப்படுகிறது.
கோவில் சன்னிதிக்கும், கோபுரத்துக்கும் இடையே கொடிமரம் அமைந்திருக்கும். அதிகபட்சமாக 13 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்படும். கொடிமரம் இராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே நேரம் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்தில் இருக்கும்.
அடிப்பகுதியான சதுரம், அதற்கு மேல் எண்கோணவேதி அமைப்பு மற்றும் தடித்த உருளை பாகம் என இந்துக் கோவில் கொடிமரம் மூன்று பாகங்களை உடையன. இதில் சதுரப்பகுதி பிரம்மாவினையும், எண்கோணவேதி அமைப்பு திருமாலையும், உருளையமைப்பு சிவனையும் குறிப்பதாக நம்பப்படுகிறது.[1]
கொடிகள்
தொகுஇறைவனுக்கு ஏற்றப்பட வேண்டிய கொடியின் சின்னம் குறித்து சூரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றின் அட்டவணை கீழே.
வரிசை | இறைவன் | கொடி |
---|---|---|
1 | சிவபெருமான் | நந்திக் கொடி |
2 | திருமால் | கருடக் கொடி |
3 | சூரிய தேவன் | வியோமாக் கொடி |
4 | வருண தேவன் | அன்னக் கொடி |
5 | குபேரன் | நரன் கொடி |
6 | முருகன் | மயில் அல்லது சேவல் கொடி |
7 | விநாயகன் | மூசிக கொடி |
8 | இந்திரன் | யானைக் கொடி |
9 | யமன் | எருமைக் கொடி |
10 | துர்க்கை | சிம்மக் கொடி |
11 | சனி பகவான் | காக்கைக் கொடி |
12 | அருச்சுனன் | அனுமன் கொடி |
13 | அம்மன் | சிம்மக் கொடி |
14 | சாஸ்தா | குதிரைக் கொடி |